சென்னை, அக். 18- டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் ஹிந்தி மாத கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கெனவே “பொதிகை” என்ற பெயர் மாற்றப்பட்டதற்கும் லோகோ காவி நிறத்தில் மாற்றப்பட்டதிற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
பொதிகை என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த தூர்தர்ஷனின் தமிழ் பிரிவு தொலைக்காட்சி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதுப்பொலிவு பெற்ற இந்த தொலைக்காட்சியை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் ஹிந்தி மாத கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஹிந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா இன்று (18.10.2024)நடைபெறுகிறது. ஹிந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அழைப்பிதழில், “சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் ஹிந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க அனைவரையும் மனமார வரவேற்கின்றோம். இடம் : தொலைக்காட்சி நிலைய அரங்கம்-1, 5, சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம். சென்னை-600 005. நாள்: அக்டோபர் 18 (வெள்ளிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் ஹிந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கும்,. டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.