‘எங்கள் பணி மக்கள் பணியே விமர்சனங்களை பற்றி கவலை இல்லை’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

2 Min Read

சென்னை, அக்.18 “எங்கள் பணியே மக்கள் பணி, நாங்கள் விமர்சனங்கள் குறித்து கவலைப் படவில்லை,” என்று கொளத்தூர் தொகுதியில் வடகிழக்குப் பருவ மழை தொடர்பான ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.10.2024) ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, வீனஸ்நகர் பம்பிங் ஸ்டேஷன், ரெட்டேரி தெற்கு உபரி நீர் வெளியேற்றம், பாலாஜி நகரில் நடைபெற்ற மருத்துவ முகாம், தணிகாசலம் கால்வாய், திருவள்ளுவர் திருமண மண்டபம், காமராஜர் நாடார் சத்திரம் போன்ற பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி திருப்புகழ் அளித்த அறிக்கையை வெளியிடவில்லை, அதில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, “இதை அரசியலாக்கும் முயற்சி செய்கின்றனர். எவ்வளவு பணிகள் நடைபெற்றுள்ளன என்பது மக்களுக்குத் தெரியும். எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதை அரசியலாக்கி வியாபாரப் பொருளாக்க நினைக்கின்றனர். அதை நான் விரும்பவில்லை,” என்றார்.

வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 2 மாதங்கள் உள்ளதே என்ற கேள்விக்கு, “எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது என்று ஏற்கெனவே கூறியுள்ளோம். தொடர்ந்து செய்து வருகிறோம்,” என்றார்.

மழைக்காலப் பணிகள் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வருகிறதே என்ற கேள்விக்கு, “அதைப் பற்றி நாங்கள் கவலைப் படவில்லை. அவ்வாறு இல்லை. இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். அந்தமாதிரி சூழல் இல்லை. மக்கள் திருப்தியாக உள்ளனர். பத்திரிகை ஒன்றில் மக்களிடம் கருத்து கேட்டு போட்டுள்ளனர்,” என்றார்.

சென்னையில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்துவிட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, “எங்களுக்குத் தெரிந்து ஏறக்குறைய எல்லாமே (‘ஆல்மோஸ்ட்’) வடிந்து விட்டது. தெரியாமல் சில இடங்களில் இருந்தாலும் கூட அதில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கிறோம்,” என்று பதிலளித்தார்.

மாநகராட்சியின் பணி சிறப்பாக இருந்ததா எனும் கேள்விக்கு, “மிகவும் சிறப்பாக, பெருமைப்படும் அளவுக்கு, மக்கள் பாராட்டும் அளவுக்கு இருந்துள்ளது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பிற துறை அதிகாரிகளுக்கு நன்றி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன்,” என்றார்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் குறித்து கேட்டதற்கு,“பாராட்டுக்களும் வருகிறது. அதே நேரத்தில் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனமும் செய்கின்றனர். அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. எங்கள் பணி மக்கள் பணி, அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்,” என்றார்.

அரசின் முழு திறனையும் பயன்படுத்தும் வகையில் மழை இருந்ததா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இருந்தது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்,” என்று அவர் பதிலளித்தார். தொடர்ந்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறியதுடன், அவர் களுடன் அமர்ந்து முதலமைச்சர் உணவருந்தினார். தூய்மைப் பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி, பொரித்த மீன் மற்றும் சிக்கன் உள்ளிட்டவை வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *