தொகுப்பு: கி.வீரமணி
நேற்றைய (16.10.2024) தொடர்ச்சி…
சிந்துவெளி நாகரிகம் பற்றிய பகுதி
ஆரியர்கள் முதன் முதலாக சப்தசிந்து பிரதேசத்தில் குடியேறிய போது ‘ரிக்வேதம்’ உருப்பெறவில்லை. சப்தசிந்துவில் ஆரியர்களின் விஸ்தரிப்பு அமைதியாக நடைபெறவில்லை. ஆரியர்களின் எதிரிகள் அவர்களைக் காட்டிலும் அதிக நாகரிகமானவர்களாகவும், நகரங்களில் வாழ்பவர்களாகவும் இருந்தனர். அவர்களுடன் இரத்தம் சிந்திய போர் சுமார் கி. மு. 1500இல் நடைபெற்றது. ஹரப்பாவில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் நிர்தாட்சண்யமான கொலைத் தாண்டவம் நடந்ததற்கான அத் தாட்சி கிடைத்துள்ளது. இது குறித்து மோர்ட்டிமோர் வீலர் ‘இண்டஸ்சிவிலிசேஷன்’ என்னும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். ‘ரிக்வேதத்’தில் இந்திரனுக்கும், விருத்ரனுக்கும் நடந்த யுத்த வர்ணனையில் இதன் மெல்லிய எதிரொலி கேட்கிறது. இது பின்னர் இந்திரன் சம்பரனின் போருடன் இணைக்கப் பட்டது. எல்லா புராதன பொது உடைமைச் சமுதாய யுகத்தைச் சேர்ந்த இனக்குழுக்களில் நிகழ்ந்ததைப் போலவே, ஆரியப் புரோகிதர்களும் தமது வெற்றிகளின் பெருமை எல்லாம் தமது கடவுளர்க்கே வழங்கிக் கொண்டனர். அதனால் தான் தனது பரத, மற்ற ஆரிய இனக்குழுவினரின் ஒத்துழைப்புடன் நாற்பதாண்டு நீண்ட காலம் போரிட்டு மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராத மன்னனான சம்பரனை திவோதாஸ் தோற்கடித்தாலும், அந்த வெற்றியின் பெருமையை அக்கால புரோகிதக் கூட்டம் (ரிஷிகள்) தமது கடவுளான இந்திரனுக்கே வழங்க விரும்பிற்று. “ரிக்வேத’த்தில் வரும் இந்த கட்டங்களைப் படிக்கும்போது, மாவீரன் திவோநாஸ் மாபெரும் கடவுளான இந்திரனின் ஒரு ஆயுதம் தவிர வேறல்ல என்று தெரிகிறது.”
‘ரிக்வேத ரிஷிகளான பரத்வாஜர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகியோரும், அவர்களின் போஷகர்களான (எஜமானர்களான) திவோதாஸும், சுதாஸும் ஆரியர் சப்தசிந்துக்குள் பிரவேசித்த பிறகு, வெகு பிற்காலத்தில் தோன்றியவர்கள் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம்; அவர்கள் காலத்திற்கு ‘ட, ள’ போன்ற உச்சரிப்பு மாறுதலும் ஏற்பட்டுவிட்டது. இவற்றிலிருந்தெல்லாம் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியடைந்த வர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு புலனாகிறது. இப்படிப்பட்ட நெருக்கமான தொடர்பை ஆரிய ரிஷிகளும் விரும்பவில்லை; சாதாரண மக்களும் விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கும் சில கட்டாயங்கள் இருந்தன. அவர்களுக்கு வேலை செய்வதற்கு அடிமைகள் தேவைப்பட்டார்கள். தமது பழைய பகைவர்களின் பல வகை ஆடம்பரங்களையும், வசதிகளையும் ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு ஆட்சேபனை ஒன்றும் இருக்கவில்லை.
உண்மையில் ஆரியர்கள் சிந்துவின் புராதன நாகரிகத்தை அழிக்கவும், சமுதாய முன் னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவும் முயற்சித்தார்கள். அவர்கள் தம்முடன் கொண்டு வந்த நாடோடி வாழ்க்கையையே நிலை நிறுத்த விரும்பியதுடன், உலகை வெற்றிகொண்ட செங்கிஸ்கானின் மங்கோலியரைப் போலவே நகரங்களையும், நாகரிக வாழ்க்கையையும் வெறுத்தார்கள். ஆரிய மன்னர்களான திவோதாஸ், சுதாஸுன் தலைநகர்களைப் பற்றியோ, மற்ற நகரங்களைப் பற்றியோ எங்குமே குறிப்பிடப்படவில்லை. குதிரைகளையும், பசுக்களையுமே தமது செல்வமாகக் கருதும் அவர்களால் நகரங்களில் எப்படி இருக்க முடியும்? கால்நடை மேய்ப்பாளரான ஆரியர்கள் எப்படிப்பட்ட நாகரிகத்திற்குப் பிறகு வந்தவர்கள்? சிந்துநாகரிகத்தைத் தம்மகத்தே கொண்டவர்களிடம் மொகஞ்சோதாரோ போன்ற நகரங்கள் இருந்தன. அந்நகரைப் பற்றி ஒரு ஆங்கில எழுத்தாளர்,” நாம் தற்கால லங்காஷையர் போன்ற நகரத்தின் இடிபாடுகளிடையே நின்றிருப்பதைப் போல் தோன்றுகிறது” என்று எழுதியிருக்கிறார்.
அங்கே வடக்கிலிருந்து தெற்கில் செல்லும் பாதை அகலமாக இருக்கிறது. அதில் சக்கரங்களைக் கொண்ட வாகனங்களும், பாதசாரிகளும் வசதியாக செல்லலாம். நகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. பாதைகள் ஒன்பது முதல் முப்பத்திநாலு அடி அகலத்துடன் அரைமைல் வரையிலும் நேராக உள்ளன. அவை ஒன்றையொன்று சம கோணத்தில் கடந்து நாற்சந்திகளை உண்டாக்குகின்றன. ஒவ்வொரு பாதையிலும், தெருவிலும் பொதுக் கிணறுகள் இருந்தன. பெரும்பாலான வீடுகளில் சொந்தக் கிணறுகளும் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் குளியலறையும் இருந்தது. கழிவு நீர்போக நிலத்தடிக் கால்வாய்கள் செம்மையாகக் கட்டப் பட்டன. அவற்றைக் கண்டு இன்றைய நகரங்கள்கூட பெருமைப்படலாம். பணக்காரர்களும், வியாபாரிகளும், கைவினைஞர்சுளும், தொழிலாளர்களும் இருந்து வந்த பகுதிகளை, அவற்றின் இடிபாடுகளைக் கொண்டு தெரிந்துகொள்ளலாம். அதைக் காணும்போது, அது ஒரு ஜனநாயக முதலாளித்துவ நகரமாகத் தோன்றுகிறது. வீடுகள் பெரும்பாலும் சுட்டசெங்கல்லால் கட்டப்பட்டுள்ளன.
அவை உருவிலும், நிறத்திலும் இன்றைய செங்கற்களைப் போலவே இருக்கின்றன. ஒரு கூர்மையான கத்தியின் முனையைக்கூட உள்ளே நுழைக்க முடியாத அளவுக்கு செங்கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீடும் வசதியாகவும், சுத்தமாகவும் இருந்தது. மிகச் சிறிய வீடுகளிலும் இரண்டு அறைகள் இருந்தன. பெரிய வீடுகளோ மாளிகைகள் போலவே இருந்தன. நடுவில் செங்கல் பரப்பப்பட்ட முற்றம் இருந்தது. அதன் ஓரத்தில் அறைகளும், கதவுகளும், சன்னல்களும் இருந்தன. முக்கிய வாசல் தெருப்பக்கம் இருந்தது. எல்லா வீடுகளிலும் குளியலறை தெருப் பக்கமே அமைக்கப்பட்டிருந்தது. பஞ்சாபில் பழைய வீடுகளில் உள்ளதைப் போல கழிப்பறை வீட்டு மாடியில் இருந்திருக்கலாம். பாதைகளில் இரவு நேரங்களில் விளக்குகள் எரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அங்கே வாழ்ந்த மக்கள் கோதுமையும், சவ்வரிசியும் பயிர் செய்தார்கள்.நெல்லும்,எள்ளும், பட்டாணியும் கூட பயிரிடப்பட்டன . குறைந்தது பேரீச்சம் பழமாவது அவர்கள் சாப்பாட்டில் இருந்தது. ஏரிகளிலும், ஆறுகளிலும் கிடைத்த புத்தம் புதிய மீன்களுடன் அவர்கள் பசு, ஆடு, செம்மறியாடு, பன்றி, கோழி, ஆமை ஆகியவைகளின் இறைச்சியையும் உண்டனர். எருமை, யானை, ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளும் அங்கே கிடைத்ததால், அவைகளையும் அவர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
அவர்கள் பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தார்கள். சாதாரணமாக ஒரு துணியை வேட்டிபோல் உடுத்தினார்கள். இன்னொரு துணியை மேல் துண்டாக பூணூல் மாதிரி வலது தோள்பட்டை திறந்திருக்குமாறு போட்டுக்கொண்டார்கள். பெண்கள் உடையும் ஆண்களைப் போலவே இருந்தது. குஷாணர்கள் நம் நாட்டிற்குள் பிரவேசிக்கும் வரை நம் நாட்டுப் பெண்கள் தம் தலையை தலைப்பாகையாலோ, ஒரு துணியாலோ மறைத்து வந்தார்கள். இதைப் போலவே மொகஞ்சதாரோ பெண்களும் செய்து வந்தார்கள். ஆண்கள் நீண்ட முடியை வைத்துக் கொண்டிருந்தார்கள். அதை வகிடெடுத்து சீவிக் கொண்டார்கள் – மீசையையும், தாடியையும் கத்தரித்து சிறியவையாக வைத்துக் கொண்டார்கள், பெண்களுக்கு பொன், வெள்ளி, தாமிரம், பித்தளை, மண், கல்லாலான நகைகள் என்றால் மிக விருப்பம். ஆண்கள் கைவளையமும், கழுத்துச் சங்கிலியும், மோதிரமும் அணிந்திருந்தார்கள், முடியில் அணியும் தலைவில்லையும் அவர்களுக்கு இஷ்டந்தான்! பெண்கள் முகப் பவுடரும், கண்மையும் அல்லாமல், உதட்டுச்சாயமும் பயன் படுத்தியதாகத் தெரிகிறது.
வீட்டுச் சாதனங்களாக தாமிரம், பித்தளையால் தயாரிக்கப் பட்ட ஊசிகள், கோடரி, அரிவாள், சுத்தி முதலியவை பயன் படுத்தப்பட்டு, வந்தன.
நிறுத்தல்- அளவைகள் இன்று ஒரு ரூபாயைப் பதினாறு பாகங்கள் செய்வது போல் செய்யப் பட்டிருந்தன.!
போரிடுவதற்கு அவர்களிடம் தாமிரம், பித்தளைகளால் தயாரிக்கப்பட்ட கோடரிகளும், ஈட்டிகளும், கத்திகளும், வாட்களும் இருந்தன. மெல்லிய தரமிரத்தகடுகளால் கவசம் உருவாக்குவதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் கல்லாலான கதாயுதங்களையும் உபயோகித்தார்கள்.
பொன், வெள்ளிக்காகவும், இதர உலோகங்களுக்காகவும், ரத்தினங்களுக்காகவும் அவர்கள் மைசூர், காஷ்மீர், கிழக்கிந்தியாவுடனும் மத்திய ஆசிய, மேற்கத்திய நாடுகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய படகுகள் கடலில் மிதந்து வந்தன. மெசப்பொடோமியா மட்டுமல்லாமல், எகிப்துடனும்கூட அவர்கள் வாணிப உறவு வைத்திருந்தார்கள். அவர்களின் உயர்ந்த வர்க்கத்தில் புரோகிதர்களும், போர்வீரர்களும், வணிகர்களும் இருந்தார்கள், வணிகர்களின் செல்வமும், செல்வாக்கும் அபாரமாக இருந்தன. போரில் ஆரியர்களின் வெற்றிக்குப் பின்னர், புரோகிதர்களின் செல்வாக்கும், போர் வீரர்களின் செல்வாக்கும் குறைந்து விட்டிருக்கலாம். ஆனால் அப்போதும் வணிகர்கள் சிறப்புடனே விளங்கினார்கள். அவர்களை ‘பணிகள்’ என்றழைத்து ஆரியர்கள், அவர்களின் பேராசையை வெறுப்புடனே நோக்கினார்கள். ‘பணி’ எந்த மொழிச்சொல்லோ தெரியவில்லை. அனேகமாக அது ஆரியமொழிச் சொல்லல்ல. சம்ஸ்கிருதத்தில் கொள்முதலுக்கும், விற்பனைக்கும் ‘பணி’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டாலும், பாரதத்திற்கு வெளியே இந்தோ – அய்ரோப்பிய மொழிகளில் இந்த சொல் இல்லாததால், இது வெளியிலிருந்து பெறப்பட்ட தாகவே தெரிகிறது.
‘ஃபாய்ரி’ என்பவர் சிந்து நாகரிகத்தின் காலம் கி.மு.2800- 2500எனக் கருதுகிறார். ‘வீலரின்’ மதிப்பீட்டின்படி அது கி.மு. 2800-1500ஆகும். அதாவது சிந்து நாகரிகத்தின் முடிவும், ஆரியர்களின் வருகையும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன.
ஆரியர்கள் எப்படிப்பட்ட நாகரிகத்தையும், பவுதீக வாழ்க்கையையும் அழித்திட முயற்சித்துள்ளார்கள என்பதைப் பார்த்தோம்.உண்மையில், குதிரையைத் தவிர வேறெந்த புதிய பொருளையும் அவர்கள் தரவில்லை. மொகஞ்சோதாரோ, ஹரப்பா போன்ற எத்தனையோ நகரங்களை அழித்துவிட்ட பின்னர், மாடு மேய்ப்போரான ஆரியர் வெற்றி கொண்ட சப்த சிந்து பிரதேசத்தைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டு, அதை மேய்ச்சல் நிலமாக மாற்றிவிட்டனர். பல நகரங்கள் மனித சஞ்சாரமற்றுப் போய்விட்டன. கிராமப்புறங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்களும் கிழக்கையும், தெற்கையும் நோக்கி ஓடிப்போய் விட்டனர். எஞ்சியிருந்தவர்களை வெற்றிபெற்றவர்கள் அடிமைகளாகவோ, கூலிக்காரர்களாகவோ ஆக்கிக் கொண்டுவிட்டனர்.
மொகஞ்சதாரோ நிலப்பகுதியை புகழ் பெறாத ஆரிய இனக் குழு ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கலாம்; அதனால்தான் ரிக்வேதத்தில் அதன் பெயர் குறிப்பிடப்படவில்லை. முக்கிய இனக்குழுக்கள் சிந்து நதிக்குக் கிழக்கே உள்ள பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. முதலில் இனக் குழுக்களின் பெயர்கள் முன்னோர் அல்லது முக்கிய நபரின் பெயரிலேயே ஏற்பட்டிருக்கலாம். ஆனால் புராதன ஆரிய இனக் குழுக்களுக்கு அப்பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டனவென்று விவரிக்க இயலாது. குரு (கோரோஷ்), மத்ர (மேத்) போன்ற பெயர்கள் ஈரானிலும் புழக்கத்தில் இருந்தன. சில ஆரிய இனக்குழுக்கள் இந்தியாவிற்கு வெளியேயும் புகழ்பெற்றிருந்தன என்று இதிலிருந்து தெரிகிறது. சிந்துப் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது அவர்களுக்கிருந்த பெயர்கள் தெரியவில்லை. ரிக்வேத காலத்தில் அய்ந்து ஆரிய இனக் குழுக்கள் முக்கியமானவையாக இருந்தன. ஆரிய மக்களனைவரையும் சேர்த்து ‘பஞ்சஜன்’ என்றும், பஞ்ச்சம்ஷணி, என்றும் “பஞ்சக்ஷிதி” என்றும் சொல்லப்பட்டதால், அவர்கள் முதலில் ‘அய்ந்தே இனக்குழுக்களில் பிரிந்திருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால் ரிக்வேத காலத்தில் பன்னிரெண்டுக்கும் அதிகமான ஆரிய இனக்குழுக்கள் இருந்தன. அவைகளில் மிகப்பழையது எதுவென்று கூறுவது மிகவும் கடினமாகும்.
சிந்துவை வெற்றி கொண்டபோது ஆரிய இனக்குழுக்கள் அய்ந்தே என்பதையும், பின்னாளில் அவை பன்னிரெண்டுக்கும் அதிகமாயின என்பதையும் பார்க்கும்போது, அப்போதைக்கு அவர்கள் இங்கே வந்து நீண்ட காலமாகி விட்டதென்பது தெரிகிறது. ரிக்வேத காலத்திய முக்கிய ஆரிய இனக் குழுக்கள் கீழ் சிந்துப்பகுதியிலோ அல்லது அதன் அருகிலுள்ள பகுதியிலோ (இப்பகுதியிலேதான் மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும் உள்ளன) வாழாமல், சிந்துநதிக்கு மட்டுமல்லாமல், விதஸ்தா (ஜிலம்), அஸிக்ளி (சீனாப்) நதிகளுக்கும் கிழக்கில் இருந்து வந்தார்கள். அய்ந்து இனக் குழுவினர்களில் முக்கியமானர்களான வீரப் ‘புரு’ மக்கள் சப்தசிந்துவின் கிழக்குக்கோடியில் வாழ்ந்து வந்தார்கள். ரிக்வேத காலத்திலேயே ஆரியர்களின் வீரமய்யம் கிழக்கில் வெகுதூரத்திற்கு சென்றுவிட்டது. இது பிராமண – உபநிஷத காலத்தில் (கி.மு. ஏழாம்நூற்றாண்டு) மேலும் கிழக்கு திசையில் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் (குரு-பாஞ்சாலம்) நிலைகொண்டு விட்டது. அங்கிருந்து அடுத்த நூற்றாண்டில் (புத்தருக்கு சற்று முன்னர்) காசி – கோசலத்திலும், அதற்கடுத்த நூற்றாண்டில் மகதத்திலும் நிலைபெற்று நமது சரித்திரகாலத்தில் கலந்துவிட்டது.
(நூல்: ‘ரிக் வேத கால ஆரியர்கள்,
ராகுல சாங்கிருத்யாயன், பக். 14-19)
இனம் பற்றிய கருத்தமைவுகளும்
இந்தியாவியலில் அவற்றின் செல்வாக்கும்
ஆரியர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட – அவர்களுக்கு முன்பே இருந்த திராவிட மொழியைப் பேசிய திராவிட இனம் இருந்தது என்பது திராவிட மொழிகளைப் படித்த சிலருக்குத் தெரிந்தது. அதற்கு ஆதரவாக இந்தோ ஆரியன் ஒரு விகற்ப (சொற்சிதைவுடைய) மொழியென்றும் ஒட்டுநிலை மொழியான திராவிட மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்னும் உண்மையை அவர்கள் எடுத்துக்காட்டினார்கள். மெதுவாக ஒரு முன்மூலத் திராவிட மொழி திராவிட மொழிகளின் மூலமொழியாக முன்வைக்கப்பட்டது. அது தமிழோடு சமப்படுத்தப்பட்டது. வரலாற்றுப்பூர்வமாகவும் மொழியாய்வு ரீதியாகவும் அது ஒரு சரியான முடிவு (சமன்பாடு) அல்ல. இந்தோ-அய்ரோப்பியன் என்பதுபோலவே மூலத்திராவிட மொழியென்பதும் ஒரு புனைவு மொழியே. தெரிந்த தமிழ் உட்பட திராவிட மொழிகளிலிருந்து இப்புனைவுமொழி கணிக்கப்பட்டது. அதனால் தமிழும் அம்மூலமொழியிலிருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆரியரின் வருகைக்கு முன்னரே திராவிட நாகரிகம் இருந்தது என்னும் கொள்கை கி.மு. மூன்றாமாயிரம் ஆண்டுகளைச் சார்ந்த சிந்துவெளி நாகரிக நகரங்களான மொகஞ்சதாரோ ஹரப்பா 1920இல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதால் வலுவடைகிறது.
ஆரிய இனம் என்ற சொல்லுக்கு இந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்பு மிகப் பாரதூரமானது. அவ்வெதிர்ப்பு வரலாற்றாய்வாளர்கள் அல்லாதவர்களிடமும் இருந்தது.
எப்படியிருப்பினும் 1920-களில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் அதன் நகர நாகரிகமும் இவர்களுடைய நீண்ட வழித்தோன்றல்கள் என்ற கொள்கைக்கு முரண்படுகின்றன. சிந்துவெளி நாகரிகம் இந்தோ ஆரியமக்களின் இலக்கியமான வேதங்கள் பாடப்பட்டதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது. சிந்துவெளி நாகரிகம் இவ்வாரிய இலக்கியங்களின் அடையாளத்தைப் பிரதிபலிக்கவில்லை. இந்துக்களுக்கு நீண்ட வரலாறு உண்டு என்று வற்புறுத்துவதானது வேதக் கலாச்சாரத்தை இன்னும் பின்னோக்கிக் கொண்டு சென்று சிந்துவெளி நாகரிகத்தோடு அடையாளப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்குக் காரணமாக இருக்கிறது.
பெருமளவில் ஆரியர்கள் உள்ளே நுழைந்ததற்கும் அங்கிருந்த நாகரிகத்தைத் தூக்கியெறிந்ததற்கும் சான்றுகள் இல்லை யெனினும் இந்தோ – ஆரியமொழி. இந்தோ – அய்ரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்றும் இந்தோ – ஈரானிய எல்லைகளுக்கப் பாலிருந்து வட இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது என்றும், சிறு அளவில் ஆனால் தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்து குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டார்கள் என்றும், காட்டுகிற மொழி ஆதாரம் இருக்கிறது என்றும் தலையாய வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
(நூல்: ‘முற்கால இந்தியா’
கடந்தகாலம் பற்றிய நோக்குகள்,
ரொமிலா தாப்பர், பக். 47-50)