மனிதகுலம் நீண்டகாலமாக இனிப்புக்காக தேனைப் பயன்படுத்தி வருகிறது. அதன் மருத்துவ குணங்களுக்காகவே பல நாடுகளின் பாரம்பரிய வைத்தியத்தில் தேன் முக்கிய இடம் பிடித்துள்ளது. தேனில் பல வகைகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பூக்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரித்து வைக்கும்போது அவற்றின் சுவை, மருத்துவ குணம் தனித்துவம் நிறைந்ததாக இருக்கும்.
அப்படியான ஒன்று தான் மனுகா தேன் (Manuka honey). ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு வகை மரம் மனுகா. இதிலிருந்து தேனீக்களால் சேகரிக்கப்படும் தேனில் மருத்துவ குணம் அதிகம்.
பாக்டீரியா எதிர்ப்பு, நோய் எதிர்ப்புத் திறன் இந்தத் தேனுக்கு உண்டு என்பது ஏற்கெனவே அறியப்பட்ட ஒன்று தான். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை. இந்தத் தேனை மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது.
பொதுவாக மார்பகப் புற்றுநோய் செல்கள், ஈஸ்ட்ரோஜன் எனும் நாளமில்லா சுரப்பியைத் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதைத் தடுக்கவே இரசாயன மருந்துகள் உபயோகப் படுகின்றன. இதற்கு மாற்றாகத் தான் தேனைப் பயன்படுத்தலாம் என்கிறது ஆய்வு. விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக மார்பகப் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கினர். அவற்றின் வளர்ச்சியை மனுகா தேன் கட்டுப் படுத்துவதை உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து எலிகள் மீது சோதித்தனர். மனிதர்களின் உடலில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை எலிகளில் பொருத்தினர். எலிகளுக்குத் தேனை உண்ணக் கொடுத்தனர். இது, எலிகளின் உடலில் வளர்ந்த கட்டிகளைப் பிற செல்களுக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் 84 சதவீதம் வரை அழித்துவிட்டது.
மனுகா தேனுக்கு புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் திறன், மேற்கண்ட சோதனைகள் மூலம் நிரூபிக்கப் பட்டது. இதனால், இந்த தேனை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.