காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றி –சொல்லும் பாடம் என்ன?
ஏற்கெனவே மாநில அந்தஸ்து பெற்று பல ஆண்டு களாக இருந்த நிலையை, பா.ஜ.க. அரசு மாற்றி, அரசமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவை ரத்து செய்து, யூனியன் பிரதேசமாக்கப்பட்டு, பல மாதங்கள் ஆளுநர் ஆட்சியாக தொடர்ந்த ஜம்மு – காஷ்மீரின் முதலாவது முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தலைமையில், தேர்தல் முடிவுகளின்படி (90 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி
42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும்) வெற்றி பெற்று எதிர்க்கட்சி ஆட்சி அமைந்துள்ளது.
பா.ஜ.க. பெரும்பாடுபட்டு 90 இடங்களில் வெறும் 29 இடங்களை மட்டுமே பெற்று, எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளது.
உமர் அப்துல்லாவின் தலைமையில், மற்ற 5 பேர் – ஜம்மு பகுதியில் – பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு மிகுந்த ஹிந்து வாக்காளர்கள் அதிகம் உள்ள நவ்ஷாரா சட்டமன்றத் தொகுதியில், பாஜக சார்பில் அதன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைவர் ரவீந்தர் ரெய்னாவை எதிர்த்து, சுரிந்தர் சவுத்ரி களமிறக்கப்பட்டு, அவர் வெற்றியும் பெற்றார்.
பா.ஜ.க. வேட்பாளர் ரவீந்தர் ரெய்னாவை தோற்கடித்த சுரிந்தர் சவுத்ரியை ஜம்மு காஷ்மீரின் துணை முதலமைச்சராக்கி ஒரு புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியா கூட்டணிக்கு நமது வாழ்த்துகள்!
தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட முந்தைய காஷ்மீர் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று உறுதியை ஜம்மு காஷ்மீர் மக்கள், தற்போதுள்ள யூனியன் பிரதேச மக்கள் இந்தத் தேர்தல் முடிவின்மூலம் வலியுறுத்தி உள்ளதாகவே கருதவேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுவார்கள்!
முன்பு இருந்த நிலையை ‘Status Quo Ante’ என்பதைக் கொண்டு வருவோம் என்ற குரலுக்கு மக்கள் இத்தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடித்து, இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை அளித்துள்ள தீர்ப்பாகவே இதனைக் கருதவேண்டும்.
மோடியின் ‘மாயத் தோற்றம்’ நொறுங்கியது!
காஷ்மீரிலும் கடைகோடி தமிழ்நாடு, கிழக்கு வங்கத்திலும், மணிப்பூர் போன்ற பகுதிகளிலும் பா.ஜ.க. செல்வாக்கு அறவே இல்லை. அல்லது தேய்பிறை என்பதோடு பிரதமர் மோடி ஒரு வாக்கு வங்கி பெறுபவர் என்ற ‘மாயத் தோற்றமும்’ அகற்றப்பட்டு விட்டது.
இதிலிருந்து புதிய பாடம் கற்று, ஒன்றிய அரசும், பா.ஜ.க.வும் தங்களது போக்கை, நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வது முக்கியமாகும்!
***
மசூதிக்குள் சென்று ‘ஜெய் சிறீராம்’ முழக்கமும் நீதிபதியின் அங்கீகாரமும்!
நேற்று (16.10.2024) நாளேடுகளில் வெளிவந்துள்ள ஒரு செய்தி. மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ என்று கோஷமிடுவதை மத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகாது என்று கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளாராம்.
சரி, ஹிந்து கோவில்களுக்குள் சென்று, மற்றொரு மதக்காரர் கோஷம் எழுப்புவது கலவர வித்து அல்லவா? இதை நியாயப்படுத்தி, ‘வேலியே பயிரை மேயலாமா?‘
என்னே விசித்திரம்!
இத்தகைய நீதிப் போக்கு விரும்பத்தகாததாகும். உச்சநீதிமன்றம், இத்தகைய மலிவான நீதிப் போக்கிற்கு முடிவு கட்ட முன்வரவேண்டும்.
மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்கள், அதன்படி கடமையாற்றுவது அவசியம்!
நீதிபடும் பாடு விகாரத்துடன் வேதனை பொங்குவதாக இருப்பது மாறுவது எந்நாளோ?
ddd