நாகை, அக். 16- நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 12.10.2024 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்க கட்டடத்தில் நடைபெற்றது .
கலந்துரையாடல் கூட்டத்திற்கு நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு. க. ஜீவா தலைமை ஏற்றார். பு. அலமேலு, சி. தங்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தியாகசுந்தரம் வரவேற்று பேசினார்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை மாநில அமைப்பாளர் இரா.முத்து கிருஷ்ணன் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து வருகை புரிந்தவர்கள் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத் தார்கள். திமுக நகர அவை தலைவர் முருகையன், இளைஞர் நகர செயலாளர் ஆர். சத்தியன், திருப்பதி வெங்கடாசலம், கபீர் ராஜா, அரசு ஊழியர் சங்க மேனாள் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், நாகை நாகராஜன், ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்து வைத்தார்கள்.
மாவட்ட திராவிடர் கழக தலைவர் நெப்போலியன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் எப்படி பணியாற்றிட வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். மாநில அமைப்பாளர் புயல் குமார் அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இயக்கம் செயல்படுவது எப்படி என்பதை எடுத்துரைத்தார்
மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இல. மேகநாதன் நாகை மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை செயல்படும் விதத்தை விளக்கினார். நாம் முயற்சி செய்தால் நூறு பேரை சுலபத்தில் உறுப்பினர்களாக சேர்க்க முடியும் என்றும் அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் உரையாற்றினார் .
இறுதியாக மாநில பொதுச் செயலா ளர் வி.மோகன் நாகை மாவட்டத்தின் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் செயல்பாடுகளை மீளாய்வு செய்து எடுத்துரைத்தார்.
இயக்கம் என்னும் வேகமாக இயங்கிட வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். பொறுப்பாளர்கள் எப்படி பொறுப்புடன் செயல்பட வேண்டுமென்பதையும், மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமனம், ஒன்றிய அளவில் பொறுப்பாளர்கள் நியமனம் பற்றியும் மாதம் ஒருமுறை பகுத்தறிவாளர் கழக கூட்டம் நடத்துவது பற்றியும், திருச்சியில் டிசம்பர் 28,29 தேதிகளில் நடைபெறும் இந்திய பகுத் தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சிந்தனையாளர் மாநாடு பற்றியும் அதற்கான செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கூட்டத்தில், முரசொலி இதழின் ஆசிரியரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மருமகனும், அரசியல் மேதை முரசொலிமாறன் அவர்களின் தம்பியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மைத்துனரும் ஆகிய முரசொலி செல்வம்,இந்தியாவில் நவீன பொருளாதார மேம்பாட்டிற்கு உதவிய ரத்தன் டாடா மற்றும் பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர் ஆர்.நேரு ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் இரங்கல் தெரிவித்தும்,
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டும் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளை பறித்தும் பல ஆண்டுகளாக தமிழ்நாடு மீனவர்கள் மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இலங்கை அரசையும் அதை தடுக்க தவறும் ஒன்றிய அரசையும் கண்டித்து எந்த அரசியல் இயக்கங்களும் முன்னெடுக்காத பிரச்சனையை சென்ற 1.10.2024 செவ்வாய் மாலை நாகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டன பேரணியும், பிறகு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தையும் தலைமை ஏற்று நடத்தியமைக்கு நன்றி தெரிவித்தும்,
திருவாரூரில் 1970இல் முத்தமிழறி ஞர் கலைஞர் அவர்களால் தோற்றுவிக் கப்பட்ட அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் அவர்கள் பெயர் சூட்டப் பட்டிருந்தது.
பிறகு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக பெயரை நீக்கிவிட்டு திருவிக கலைக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்தது. டெல்டா பகுதியில் பிறந்து தமிழ்நாட்டுத் தலைவராக உயர்ந்த அய்ந்து முறை தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை நாகையில் தற்போது இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதெனவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், பகுத்தறிவாளர் கழகத்திற்கு அதிக உறுப்பினர் சேர்த்து பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்துவதெனவும், மாதம் ஒரு முறை கலந்துரையாடல் கூட்டத்தைக் கூட்டி சிறப்பாக செயல்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து நாகை பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கி.ஆண்ட்ரூஸ் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.