தொகுப்பு: கி.வீரமணி
கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் களில் ஒருவர் பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுத்து உலகைத் தன்வயப்படுத்தி நாள்தோறும் சலிப்பில்லாமல் எழுதிக் குவித்த மாமேதை.
பல மாத, வார, நாளிதழ்களில் எழுதியதோடு பல நூல்களையும் எழுதி மக்களை ஈர்த்தவர். ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளரான தத்துவஞானி.
அவரது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புதினம் போன்ற மானிட வரலாறு – பல லட்சக்கணக்கில் பல மொழிகளில் வெளிவந்து சாதனை படைத்த நூல் ஆகும் – ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல்.
அவர் ஹரசரிபாக் (பீஹார்) சிறையில் 1942ஆம் ஆண்டு எழுதிய பவுத்த சிந்தனைகள் நூல் தொகுப்பில் வந்த சில கட்டுரைகளை ஒரு தனி நூலாக்கி ‘இந்து தத்துவ இயல்’ என்ற தலைப்பில் 1985இல் வெளியிட்டனர்.
அதில் உள்ள முதல் கட்டுரை ‘வேதங்கள்’ என்ற தலைப்பில் (கி.மு.1500-1000) என்று தொடங்குகிறது.
அதில் இவ்வாண்டு நூற்றாண்டு காணும் சர் ஜான் மார்ஷலின் பிரகடனப்படுத்தப்பட்ட ஆய்வான ‘சிந்து வெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் தான்; அது வேதகால நாகரிகத்திற்கு, காலத்தாலும் கருத்தாலும் முற்பட்டது’ என்பதற்கான கருத்து முத்துக்கள் கிடைக்கப் பெற்றன.
சிந்துவெளி நாகரிகம் வேதகால நாகரிகம் – சரஸ்வதி நாகரிகம் என்றெல்லாம் வரலாற்றுத் திரிபு வாத முயற்சிகளைக் கடந்த அரை நூற்றாண்டாகவே ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. செய்து, அதன் சின்னங்களான திராவிடரின் காளை மாட்டுக்குப் பதில், ஆரியர்களின் குதிரையை நுழைத்து – அமெரிக்காவில் சில கூலி – போலி – ஆய்வாளர்களைக் கொண்டு முன் வைத்த முயற்சி முறியடிக்கப்பட்டது (ஆதாரம் ‘Frontline’ திங்களிருமுறை ஏடு).
இப்போது ஒன்றிய ஆட்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் வடிவமான பா.ஜ.க.வின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதை பழைய வேதகால நாகரிகமாக திரித்துக் காட்ட ஒரு குழுவை அமைத்து ‘பொய்யை – மெய் போலும் மெய் போலுமே’ ஆக்கிட முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (அதில் 17 பேர்களில் ஒரே ஒருவர் தவிர 16 பேரும் பார்ப்பனர்களே என்ற உண்மை கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய முக்கியமானதாகும்.)
ராகுல சாங்கிருத்தியாயனின் ஆய்வில் (1942ல்) ஆரிய நாகரிகத்திற்கு மாறான மூத்த நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்பதற்கான ஓர் ஆய்வுரையை அவர் எழுதியபடியே – தரவுகளாக வாசக நேயர்களுக்கு முன் வைக்கிறோம்.
அதுபோல, தற்கால பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் அவர்கள் எழுதியுள்ள “முற்கால இந்தியா’ தொடக்கக் கால முதல் கி.பி. 130 வரை” என்ற நூலிலிருந்து – சிந்து வெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம் வேத கால நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்று கற்பனையாக இப்போது செய்யப்பட்ட வரலாற்றுப் புனைவுகள் ஏற்கத்தக்கதல்ல என்பதான தரவுகளாக (அந்த புகழ்பெற்ற வரலாற்றினை அவரது எழுத்துக்களையும்) வாசகர்களுக்கு முன் வைக்கிறோம்.
இது ஒரு தொகுப்பு கட்டுரையாகும்.
‘உண்மை ஒரு நாள் புலியாகும் அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்’ என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
அப்பகுதிகள் இதோ:
1. ‘ரிக் வேதகால ஆரியர்கள்’ என்ற நூலின் தமிழ்மொழி பெயர்ப்பு
வேதங்கள் (கி.மு. 1500-1000)
ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே சிந்து நதிப் பள்ளத்தாக்கில் அஸீரியருக்கு (மெஸபடோமியாவினருக்கு) சம காலத்தவராகிய ஒரு நாகரிக இனத்தவர் வாழ்ந்து வந்தனர். அவர் களின் நிலப்பிரபுத்துவ சமுதாயம், அப்பொழுதே ஆப்கானிஸ்தானத்துக்குள் நுழைந்து கொண்டிருந்த தந்தை வழிச் சமுதாயத்தவரான ஆரியர்களைவிட உயர்ந்த நிலையிலிருந்தது. முரடர்களும், போர் வீரர்களுமான ஜெர்மானியர்கள் நாகரிகமும் பண்பாடுமுள்ள ரோமானியர்களையும், அவர்களு டைய பெரும் சாம்ராஜ்ஜியத்தையும் கி.பி. நாலாம் நூற்றாண்டில் அழித்து விட்டதைப் போலவே, ஆரியர்களும் சிந்துப் பள்ளத்தாக்கில் வாழ்ந்திருந்த மக்களைத் தோற்கடித்து, அங்கே கி.மு.1890 வாக்கில் தமது அதிகாரத்தை நிலை நிறுத்தினர். இதே காலத்தில் சிறிது ஏற்றத்தாழ்வுடன் மேற்கிலும் இந்திய-அய்ரோப்பிய இனத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரான கிரேக்கர்கள், கிரீஸில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரைத் தோற்கடித்துத் தமது ஆட்சியை நிலைநாட்டினர்.
ஒரே சமயத்தில் பல நாடுகளில் மனித சமுதாய வளர்ச்சி ஒரேவிதமாக இல்லாவிட்டாலும் இந்திய-அய்ரோப்பிய இனத்தின் இரு பிரிவுகளான கிரேக்கர்களும், ஆரியர்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியடைந்ததைக் கவனிக்கலாம்; பிற்காலத்தில் அவ்வளர்ச்சி வேறுபட்டதென்பதும் உண்மைதான்! அவர்களில் ஒரு முக்கியமான வேற்றுமையை இங்கே குறிப்பிட வேண்டும். காலம் செல்லச் செல்ல இந்திய ஆரியர்களின் வளர்ச்சி தடைப்பட்டு நின்றுவிட்டது. அதனால் அவர்களது சமுதாய அமைப்பையே இளம் பிள்ளைவாதம் தாக்கி விட்டது. அவர்களின் சமுதாயம் உயிருள்ள சவமாகிவிட்டது. இன்று அது நாலாயிரம் ஆண்டுகளில் புரிந்த முட்டாள்தனங்களின் காட்சிசாலையாக இருக்கிறது. ஆனால் கிரேக்க சமுதாயம் சூழ்நிலையைப் பொறுத்து மாறிக் கொண்டே இருந்தது. இன்று நன்கு படித்த இந்தியர்களும்கூட வேதங்களையும், உபநிஷத்துக் களையும் இயற்றிய ரிஷிகளையும், முனிவர்களையும் எல்லையற்ற காலத்துக்கு முன்னமேயே சிந்தித்து, தத்துவங்களை எடுத்துக் கூறிய மேதைகளாகக் கருதுகின்றனர்; ஆனால் இன்றைய அய்ரோப்பியப் படிப்பாளிகள் கிரேக்க தத்துவாசிரியர்களான பிளாட்டோவையும், அரிஸ்டாட்டிலையும் தத்துவ இயலைச் சிறப்பாக ஆரம்பித்து வைத்தவர்களாகக் கருதினாலும், அவர்கள் எல்லாவற்றையும் சிந்தித்துவிட்டதாக நினைப்பதில்லை.
இந்த நூற்றாண்டின் முதல்பாகத் துவக்கத்தில் மொகஞ்ஜோதாரோ, ஹரப்பாவில் கிடைத்த சிதைவு களினால் ‘சிந்து நதிப்பள்ளத்தாக்கின் நாகரிகம் தெரிய ஆரம்பித்தது. அக்காலத்திய நகரங்களின் சிதைவுகளும், நாகரிக வாழ்க்கையின் மிச்ச சொச்சங்களும் காணக்கிடைத்தன. அங்குக் கிடைத்தவற்றிலிருந்து மெஸபடோமியாவின் பழைய நாகரிக இனத்தாரைப் போலவே சிந்துப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்களும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில் இருந்து வந்ததாகத் தெரிய வருகிறது. அவர்கள் விவசாயமும், கைத்தொழில்களும், வணிகமும் செய்துவந்தனர். தாமிர யுகத்திலும், பித்தளை யுகத்திலும் அவர்கள் வாழ்ந்தாலும் எவ்வளவோ வளர்ச்சி அடைந்திருந்தனா. முழுமையான ஒரு மதத்தைப் பின்பற்றினர். அவர்கள் சித்திர எழுத்துக்களையும் பயன்படுத்தினர்.
அச்சித்திர எழுத்துக்களையும் மற்ற முத்திரைகளையும் இதுவரையிலும் பூரணமாகப் படிக்க இயலாவிட்டாலும், சிந்து நாகரிகம் அசுர நாகரிகத்திற்கும், கால்திய நாகரிகத்திற்கும் சம காலத்தியதென்றும். அவற்றின் கூடப்பிறந்த நாகரிகமென்றும், அவர்களுடையவை போன்ற மதக் கருத்துக்களையே இவர்களும் கொண்டிருந்தார் களென்றும் மற்ற ஆராய்ச்சிகளால் தெரிகிறது. சிந்து மக்கள் லிங்கத்தையும், மற்ற கடவுள் சின்னங்களையும், விக்கிரகங்க ளையும் வழிபட்டு வந்தாலும் அவர்களிடையே தத்துவச் சிந்தனை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் ஆரியர்களுக்கு முதலிலிருந்தே தத்துவச் சிந்தனையை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது
… குரு (வசிஷ்டர்), வட, தென் பாஞ்சால ராஜ்ஜியங்களில் அதாவது இன்றைய மேற்கு உத்திரப் பிரதேசத்தில் ரிக்வேதம் படைக்கப்பட்டது.
ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்த பிறகு அது அவர்களின் மூன்றாவது இருப்பிடமாகும். அவர்களுடைய முதல் இருப்பிடம் ஆப்கானிஸ்தானத்திலுள்ள காபூல், ஸ்வாத் ஆற்றுப் பள்ளத்தாக்குகளாகும். இரண்டாம் இருப்பிடம் பஞ்சாபிலுள்ள – சப்த சிந்துப் பிரதேசமாகும். மூன்றாவது இருப்பிடம் மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள கங்கை-யமுனை- ராமகங்கா நதிகளின் வளமான பகுதிகளாகும். பிரயாகை (அலகாபாத்) சரஸ்வதி நதியிடையேயுள்ள பிரதேசத்தைப் பிற்காலத்தில் மிகப் புனிதமானதாகவும், பல புண்ணியத் தலங்களுடையதாகவும் ‘ஆர்யா வர்த்த’மென்றும் ஏன் சொல்லப்பட்டதென்று இப்பொழுது விளங்குகிறதல்லவா!
(நூல்: ‘இந்துத் தத்துவ இயல்’
– ராகுல சாங்கிருத்யாயன்,
என்.சி.பி.எச். வெளியீடு, பக். 2-4, 6-7)
(தொடரும்)