‘‘மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே படுத்து உறங்குவதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்’’ என்று உத்தரப்பிரதேச கரும்பு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார் தெரி வித்துள்ளார். மேலும் ‘‘மாடுகளை செல்லமாக வளர்த்து பராமரித்தால் 10 நாட்களுக்குள் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவைக்கு மாத்திரைகள் சாப்பிட தேவையில்லாமல் போய்விடும்’’ என்றும் கூறியுள்ளார்.
பிலிபித்தில் உள்ள பகாடியா நவுகாவானில் கோசாலை எனப்படும் பசு காப்பிடத்தை திறந்து வைத்து அமைச்சர் கங்வார் பேசுகையில், “உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒருவர் காலையிலும் மாலையிலும் ஒரு பசுவை செல்லமாக வளர்த்தால், அவரது நோய் மெல்ல மெல்ல குறைந்து மருந்து மாத்திரைகள் சாப்பிடத் தேவையில்லாமல் போய்விடும்.
புற்றுநோயாளி ஒருவர் மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்து அங்கேயே படுத்தால், புற்றுநோயை குணப்படுத்த முடியும்; நமது வேதங்களில் இதைக் காணமுடியும்; நமது வேதத்தைதான் மேலை நாடுகள் கடைப்பிடித்து மருந்து களைக் கண்டுபிடிக்கின்றனர்’’ என்றும் கூறியுள்ளார்.
மேலும் ‘‘மாட்டுச் சாணத்தை எரித்தால், கொசுக்களை விரட்டலாம். எனவே, ஒரு பசு உற்பத்தி செய்யும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்கள் தங்கள் திருமண நாள் மற்றும் குழந்தைகளின் பிறந்தநாளை பசுக் கூடங்களில் கொண்டாடவும், தீவனம் வழங்கவும் வலியுறுத்தினார்.
இப்படி எல்லாம் உளறுபவர்கள் பிஜேபி ஆட்சியில்தான் அமைச்சராக இருக்க முடியும்; அதுவும் சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச அமைச்சர் அல்லவா! இப்படிப் பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியமாக இருக்க முடியும்.
பள்ளிகளை மாலை நேரத்தில் மூடிய பிறகு பசு மாடுகளைப் பள்ளி வளாகத்தில் வைத்துப் பத்திரமாகப் பாதுகாக்கும் கோமாதா புத்திரர்கள் ஆயிற்றே!
அறிவியலுக்கு எதிராக மக்களைத் தவறான திசைக்கு இழுத்துச் செல்லும் இத்தகையவர்களை, அமைச்சரவையி லிருந்து நீக்குவது மட்டுமல்ல; தண்டிக் கவும் வேண்டும்.
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் என்றும் சொல்லுகிறது!
ஆனால், ஓர் அமைச்சரே சட்ட விரோத மாக நடந்து கொண்டால் தண்டனை கிடையாதா?
பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் வரை, மக்கள் மாட்டு மூத்திரத்தையும், சாணி யையும் கரைத்துக் குடிக்க வேண்டியதுதான் போலும்!
உலக நாடுகள் மத்தியில் இந்தியா மண்டியிடும் அநாகரிகம் இது!