தூத்துக்குடி, அக்.15- வாசிப்பு பழக்கத்தால் தொலைநோக்கு சிந்தனை உருவாகும் என்றாா் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி.
தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு அருகே 5ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியின் 4ஆம் நாளான நேற்று (13.10.2024) மாலையில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, ‘நவீன தமிழ்ச்சிறாா் இலக்கியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் உதயசங்கா், ‘இலக்கியமும் – படைப்பாற்றலும்’ என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் சோ.தா்மன் ஆகியோா் பேசினா்.
கப்பலோட்டிய வ.உ.சி. என்ற தலைப்பில் சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி பேசிய தாவது: தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நூலகக் கட்டமைப்பு காரணமாக வாசிப்பு பழக்கம் அதிகரித்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் இந்திய அளவில் தூத்துக்குடி 5ஆவது பெரிய துறை முகமாக இருந்தது.
வ.உ.சிதம்பரனாரின் வாசிப்பு பழக்கம் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தொடங்கி தூத்துக்குடிக்கும் கொழும் புக்கு கப்பல் இயக்க வைத்தது.
சுதந்திர போராட்டத்தில் இவரின் பங்கு அளப்பெரியது. ஆங்கிலேயா்களுக்கு எதிராக மக்களிடம் சொற்பொழிவுகள் ஆற்றியதற்காக வஉசி 1908ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரது சுதேசி கப்பல் போக்குவரத்து 1910ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.
எனவே, பெரிதினும் பெரிது கேள் என்ற வகையில் வஉசியின் தொலைநோக்கு எண்ணம் வாசிப்பு பழக்கம் இருந்தால் மட்டுமே நமக்கு உருவாகும் என்றாா். ‘மெய்யறிவு’ என்ற தலைப்பில் சென்னை விவேகானந்தா கல்லூரி பேராசிரியா் கரு.ஆறுமுகத்தமிழன் கருத்துரை யாற்றினாா்.
இந்நிகழ்வில், ஆட்சியா் க.இளம் பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) சத்யா உள்பட பலா் பங்கேற்றனா்.