காவல்துறை தலைமை இயக்குநர்
சங்கர் ஜிவால் தகவல்
சென்னை, அக்.15- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் மேற்கொள் ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று (14.10.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த மாதம் 30 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விரிவான அறிவுரைகள் வழங்கினார்.
அதன்படி அனைத்து காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவு ரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சிப் பள்ளி மூலம் 20,898 காவல்துறையினருக்கு பேரிடர் மீட்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 136 பேரிடர் மீட்புக் குழுக்களாக பிரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 6 கம்பெனிகள் பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
வானிலை ஆய்வு மய்யத்தின் அறிக்கை, பேரிடர் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த குழுக்கள் அனுப்பப்பட்டு பேரிடர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மருதம் வளாகத்தில் மாநில காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது.
– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.