சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் சிந்துவெளி நாகரிகம் : பிரகடன நூற்றாண்டு கருத்தரங்கம் தியாகராயர் நகர் முத்தரங்கம் சாலை மு.க.ஸ்டாலின் அரங்கில் 09.10.2024 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் கலந்து கொண்டு உரை யாற்றும்போது, “சிந்துவெளி நாகரிகம் ஆரியர் நாகரிகமாம்: மோடி அரசின் திரிபுவாதத்தை முறியடிப்போம்!” என்று குறிப்பிட்டார்.
அவருடைய உரை வருமாறு:
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு, இந்திய பொது உடமை இயக்கத்தின் நூற்றாண்டு, வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு. சேரன்மாதேவி குருகுல போராட்டத்தின் நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு ஆகியவைகளின் வரிசையில் சிந்து சமவெளி அறிவிப்பின் நூற்றாண்டும் 20.09.2024 அன்று தொடங்கியது என்பது திராவிட இயக்கத் தோழர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாகும்!
இந்திய தொல்லியல் துறையின் இயக்குநரான சர் ஜான் மார்ஷல் அவர்கள் ‘தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ (The Illustrates London News) என்ற இதழில் சிந்து வெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே என அறிவித்தது; அந்த இதழ் 20.09.1924 அன்று வெளிவந்தது என்பதால் அத்தகைய சிந்து சமவெளி அறிவிப்பின் நூற்றாண்டினை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
சர்.ஜான், மார்ஷல் அவர்களுக்கு ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்றும், சிந்துவெளி பண்பாட்டு நூற்றாண்டு விழாவை, தொல்லியல்துறையின் சார்பில் பன்னாட்டு அறிஞர் பெருமக்களை அழைத்து சிறப்பான கருத்தரங்கம் நடத்தப்படும் என்றும் ‘திராவிட மாடல் அரசின்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நூற்றாண்டு நாளில் 20.09.2024 அன்று அறிவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்கும். போற்றுதலுக்கும் உரியது! சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிலும், காஞ்சியில் நடைபெற்ற திமுக பவள விழாவிலும், திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அவர்கள். சிந்துவெளி நாகரிக சிறப்புக்களை நினைவு கூர்ந்து உரையாற்றியது வரவேற்புக்கும். வாழ்த்துக்கும் உரியது! இதனை சகித்துக்கொள்ள இயலாத சங்பரிவார் கூட்டம் கண்டன காகித அம்புகளை. ஆசிரியருக்கு கடிதங்களாக நாளேடுகளில் வெளியிட்டு திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்கின்றன.
சிந்துவெளி நாகரிகத்தை வேத நாகரிகம் என்றும். ஆரியர் நாகரிகம் என்றும், இல்லாத சரஸ்வதி நதியை இட்டுக்கட்டி. அதன் பெயரால் சரஸ்வதி நதி நாகரிகம் என்றும் திரிபுவாத தில்லுமுல்லு செய்வோரின் சதிச்செயலை நாடு நன்றாகவே அறியும்! சிந்து வெளியில் காளைகள்தான் இருந்தன. இது திராவிடச் சின்னம் ஆகும். அதை மறைத்துவிட்டு, குதிரைகளும், சக்கரம் பொருத்தப்பட்ட தேரும் ஆரியர்களின் சின்னமாக இருந்தது என்று திசை மாற்றும் காவிக் கூட்டம் திரிபுவாதிகள்தான் என்பதையும் நாடறியும்!
கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட மோடி அரசு, அங்கு எதுவும் இல்லை என்று கூறி, தோண்டிய அகழாய்வு குழிகளை மூடி விட்டுச் சென்றது. ஆனால் தமிழ்நாடு அரசுதான். கீழடியை கையில் எடுத்து ஆய்வு செய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தொல் பொருட்களை தோண்டி எடுத்து, தமிழ்ப்பண்பாட்டின் மேன்மையினை உலகுக்கு அறிவித்தது!
தொல்லியலாளர், வரலாற்று அறிஞர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களின் ஆய்வுப் பணிக்கு பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல. அவர் உருவாக்கிய ஆய்வு அறிக்கையையும் வெளியிடாமல் நிறுத்தி வைத்து முடக்கிப் போட்டது மோடி அரசு!
ஆனால், கீழடி ஆய்வுகளை, பொருநை, சிவகளை, வெம்பக்கோட்டை, பொற்பனைக் கோட்டை ஆகிய இடங்களிலும் நீட்டித்து அகழ்வு ஆய்வு செய்து தமிழர் பண்டைய வரலாற்று மாண்புகளை வெளிக்கொண்டு வருகிறது மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ அரசு!
இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுவதற்காக 17 பேர் கொண்ட அறிஞர் குழுவை மோடியின் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் 3 பேர் அரசுத்துறை அலுவலர்கள், எஞ்சிய 14 பேரும் பார்ப்பனர்கள். கனடா நாட்டில் வாழும் பார்ப்பனர் சங்கத் தலைவர், கேரளாவில் வாழும் பார்ப்பனர் சங்கத் தலைவர் ஆகியோர் எல்லாம் இந்தக் குழுவின் உறுப்பினர்கள்! 2015 ஆம் ஆண்டு அரியானா மாநில அரசு 50 கோடி ரூபாயை ஒதுக்கி சரஸ்வதி நதி குறித்து ஆய்வு செய்ய கட்டளையிட்டது. வேதங்களில் குறிப்பிடுகிற சரஸ்வதி என்ற ஆறு இப்போது பூமிக்கு அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நம் கண்களுக்கு அது தெரியவில்லை என்று அந்தக் குழு கண்டறிந்த கேலிக்கூத்தை, Searching for Saraswathi என்ற, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆவணப்படம் அம்பலப்படுத்திக் காட்டுகிறது!
வரலாற்றை திரித்துக் கூறும் சங் பரிவார் கூட்டத்தின் சதிச்செயலுக்கு சில திரைப்பட இயக்குநர்களும் துணை போனதை நாம் மறந்துவிடக் கூடாது. அசுவதோஷ் கோவரிகர் என்ற ஹிந்தி திரைப்பட இயக்குநர் 12.08.2016 அன்று ஒரு ஹிந்தி திரைப்படத்தை வெளியிட்டார். திரைப்படத்திற்கான நிதி உதவியை ஸநாதன பிரச்சார அறக்கட்டளை என்ற அமைப்பு வழங்கியது. இந்த திரைப்படத்தில் சிந்துவெளி நாகரிகம் – ஆரிய நாகரிகமே என்றும், இந்த இயக்குநர் தயாரித்த ‘ஜோத் அக்பர்” என்ற திரைப்படமும் சிந்துவெளி நாகரிகம், ஆரிய நாகரிகமே என்றும் சித்தரித்துக் காட்டியது. இதனைப்போல ஹவாய்ஜாதா என்ற ஹிந்தி திரைப்படமும் வரலாற்றுக்கும். அறிவியலுக்கும் புறம்பான செய்திகளை மிகைப்படுத்திக காட்டியது. ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே வேதகாலத்தில் விமானம் போன்ற ஒரு வாகனத்தை இயக்கியதாகவும், சிந்துவெளி நாகரிகத்தில் குதிரைகள் பயன் பட்டதாகவும், சமஸ்கிருத மொழி பேசப்பட்டதாகவும் சித்தரித்துக் காட்டியது.
1999 ஆம் ஆண்டு மராட்டியத்தில் பாஜக சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்ற காலத்தில் அங்கிருந்த பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த சிந்துசமவெளி பொருட்கள் இருந்த பகுதியில் திராவிட நாகரிகத்தின் எச்சங்கள் என்ற அறிவிப்பு பலகை மாற்றப்பட்டு அடையாளம் தெரியாத நாகரிக மக்கள் பயன்படுத்திய பொருட்கள் என்ற புதிய அறிவிப்பு பலகை அங்கே வைக்கப்பட்டது. சமஸ்கிருத மொழி இந்து அய்ரோப்பிய மொழி என்றும் இவைதான் சிந்துவெளி காலத்தில் பேசப்பட்டது என்றும், சரஸ்வதி நதி அங்கே ஓடியது என்றும், ஸநாதனமுறை நடைமுறையில் இருந்தது என்றும் வரலாற்றை அவர்கள் திரித்து எழுதினார்கள்.
சி.பி.எஸ்.சி. திட்டத்தின் 12 ஆம் வகுப்பு பாடத்தில் முகலாயர்கள் வரலாறு நீக்கம். 11 ஆம் வகுப்பு பாடத்தில் அபுல் கலாம் ஆசாத். காஷ்மீரின் தன்னாட்சி வரலாறு நீக்கம், 10 ஆம் வகுப்பு ம் பாடத்தில் டார்வின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை நீக்கப்பட்டு, பரிணாமம் என்பதற்கு பரம்பரையாக என திரித்து விளக்கம் என காவிகளின் அரசு வரலாற்றை திரிக்கும் வேலையில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதனைக் கண்டித்து அறிவியல் அறிஞர்கள். வரலாற்று ஆய்வாளர்கள், கல்வியாளர்கள். ஓய்வு பெற்ற உயர்நிலை அலுவலர்கள் என 1800 பேர் மோடி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதையும். 33 கல்வியாளர்கள் திரித்து எழுதப்பட்ட அந்த பாடங்களில் இருந்து தங்கள் பெயர்களை எடுத்து விட வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதையும் மோடி அரசு பொருட்படுத்தவே இல்லை!
இந்த பின்னணியில் சிந்துவெளி நாகரிகம் தொடர்பான செய்திகளை – நூற்றாண்டு விழாவின் கடமையாக நாட்டு மக்களிடம் நாம் பரப்புரை செய்திட வேண்டும். ஆங்கில அரசின் வைசிராயாக பணிபுரிந்த கர்சரன் பிரபு. இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்யும், இந்திய தொல்லியல் கழகத்தின் {Archeological Suney of garhwa) இயக்குநராக 1902 ஆம் ஆண்டில் சர் ஜான் மார்ஷல் அவர்களை நியமித்தார். தொல்லியல் துறையில் பணியாற்றிய ஹீரானந்த சரஸ்வதியை, ஹரப்பா பகுதிகளில் ஆய்வு செய்யுமாறு சர் ஜான் மார்ஷல் பணித்தார். அதன்பின், தயாராம் சாஹினி, ஆர்.டி.பானர்ஜி. எம்.எஸ்.வாட்ஸ். ஆர்.டி.பந்தர்கார் ஆகியோர்களை மொகஞ்சதாரோ – ஹரப்பா பகுதி களுக்கு ஆய்வுப் பணிகளுக்காக சர்.ஜான்.மார்ஷல் அனுப்பி வைத்தார். இவர்களோடு சர் ஜான் மார்ஷல் அவர்களும் இணைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள்.
1920 ஆம் ஆண்டில் வெண்கல கால ஹரப்பா. மொகஞ்சதாரோ உள்ளிட்ட நகரங்கள் குறித்த ஆய்வுகள் கண்டறியப்பட்டன. இவைகள் குறித்த ஆய்வு முடிவுகளைத்தான், தி இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ் (20.09.2024) இதழில் A Forgotten Age Revealed என்ற தலைப்பில் சர் ஜான் மார்ஷல் கட்டுரை எழுதினார். “ஒரு மறைந்து போன நாகரிகத்தின் எச்சங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சும் வாய்ப்பு. ஒரு தொல்லியலாளருக்கு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் இந்த தருணத்தில் சிந்துவின் சமவெளி பகுதிகளில் அம்மாதிரி கண்டு பிடிப்புக்கு அருகில் நாங்கள் இருக்கிறோம்” என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டார் சர் ஜான் மார்ஷல்! இதன் அடுத்த இதழில். பிரிட்டனின் வரலாற்று அறிஞர் ஆர்ச்சி பால்ட் சாய்ஸ் என்பவர் இது குறித்து எழுதியவைகளை தொடர்ந்து எழுதினார் சர் ஜான் மார்ஷல்! வேதகாலத்தில் இருந்துதான் நாகரிகம். அறிவு. பண்பாடு தொடங்கியது என்ற கருத்து தவறு தலானது என்றும், கி.மு. 3500–1700 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சிந்துவெளி காலத்தில் திராவிட நாகரிகம் ஒளிர்ந்தது என்றும் அறிவித்தார் ஜான் மார்ஷல்!
“சிந்துவெளி நாகரிகமும். வேதகால நாகரிகமும் இருவேறு சமூகங்களுக்கு உரியவை என்றும் சிந்துவெளி நாகரிக மக்கள் வேதகாலத்தவருக்கு முற்பட்டவர்கள் என்றும் “ஆரியர்களுக்கு முற்பட்ட சில தொல்குடிகள், இந்து மதம் என்று தற்போது அறியப்படும் சமய மரபுக்குள் ஒருபோதும் வந்துசேரவில்லை. அத்தகைய தொல்குடியினரின் தாய்த் தெய்வ வழிபாடு மிக வலுவானது. மிக ஆழமாக வேரூன்றியது. ஆரியர்கள் வாழ்ந்த எந்த இடத்திலும் பெண் தெய்வங்கள் கடவுளர் கூட்டத்தின் தலைமை இடத்துக்கு தாய்த் தெய்வமாக முதல் நிலைக்கு உயர்த்தப்பட்டதற்கு சான்றுகள் எதுவும் இல்லை’’ என்றும் சர் ஜான் மார்ஷல் சுட்டிக்காட்டினார்.
“இந்திய வரலாற்றை. வேதங்கள், இதிகாசங்கள். புராணங்கள் ஆகியவைகளோடு மட்டும் தொடர்பு படுத்தி காலவரையறை செய்யப்பட்டு வந்த கால கட்டத்தில் இந்திய வரலாறு அதற்கும் முந்தையது, அது நகர்மய வரலாறு. அறிவியல் சார்ந்த. வணிகம் சார்ந்த, மக்கள் வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை ஜான் மார்ஷலையே சாரும்’’ என்று ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை நூலின் ஆசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்கள் சுட்டிக்காட்டு வதை நாம் நினைவு கூர வேண்டும்.
“சிந்து வெளியில் பேசப்பட்ட மொழி, இன்றைய திராவிட மொழிகளுக்கு முன்னோடியாகக் கொள்ளத் தக்கது. சிந்து வெளி மக்களின் வீழ்ச்சிக்குப் பின்னரே ஆரியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது” என்று சிந்து வெளியில் 40 ஆண்டு ஆய்வு செய்த ஃபின்லாந்து நாட்டு அறிஞர் அஸ்கோ பர்போலா குறிப்பிடு வதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்!
சிந்து வெளி மக்கள் பயன்படுத்திய முத்திரைகளில் உள்ள வாசகங்கள் உணர்த்தும் பண்பாடு, சங்கத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டுடன் ஒத்திருப்பதைக் காணலாம். என்ற அய்ராவதம் மகா தேவன் அவர்களின் ஆய்வும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஹரப்பா, மொகஞ்சதாரோமுத்திரைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துச் சேர்ப்புக்களை தமிழக பாறை ஓவியங்களுடன் ஒப்பிட்டு வாதிடுபவர்களும் இருக்கிறார்கள் என்ற தமிழ் இந்து (20.09.2024) நாளேட்டின் தலையங்க வரிகளும் நம் பாரம்பரிய பெருமையை விளக்குகிறது. இவ்வாறு சிந்துவெளி நாகரிகத்தின் தனிச்சிறப்புக்களை முதலில் தரணிக்கு அறிவித்த சர் ஜான் மார்ஷலை திராவிட இயக்கம் தொடக்க முதலே நன்றியுடன் பாராட்டி வருகிறது.
“ஜான் மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆய்ந்தறிந்து கூறியபோதுதான் மேனாட்டாரின் கண்களில் இருந்த களையும், கருத்தில் இருந்த மாசும் நீங்கியது. ஆரியம் திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்தியது என்ற ஆராய்ச்சி வரத் தொடங்கியது” என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயையில் எழுதினார்.
சுயமரியாதை இயக்ககால எழுத்தாளாரான சாத்தான் குளம் இராகவன் அவர்கள், ஆதிச்சநல்லூரும் பொருநை வெளி நாகரிகமும் என்ற நூலை அப்போதே எழுதினார். சிந்துவெளி நாகரிகம் குறித்து தந்தை பெரியாரிடமும் எடுத்து விளக்கினார் இவர். பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார். தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு செய்து எழுதினார்கள்.
அன்று தொடங்கி இன்று ‘வரை திராவிடர் இயக்கம் இதே திசையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திராவிடர் கழகத்தின் திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் 19.07.2024 அன்று சென்னை பெரியார் திடலில், வரலாற்று அறிஞர்களை அழைத்து ஜான் மார்ஷல் அறிக்கையின் நூற்றாண்டு விழாவினை சிறப்புடன் நடத்தியது. சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறையும் 04.01.2024 அன்று ‘சிந்து முதல் பொருநை வரை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தையும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 24.09.2024 அன்று சென்னை பெரியார் திடலில், வரலாற்று ஆய்வு அறிஞர்களை அழைத்து, சிந்துவெளி நாகரிக பிரகடன நூற்றாண்டு விழாவினை திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. மக்கள் மத்தியில், மக்கள் இயக்கமாக இதைக் கொண்டு செல்வோம் என்று திராவிடர் கழக தலைவர். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அந்த விழாவில் சூளுரைத்திருக்கிறார்!
காவிக்கும்பலின் திரிபுவாதத்தை தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைத்திட, சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்ற உண்மையை ஊர் தோறும் எடுத்துச் செல்வோம்! உரத்த குரலில் ஓங்கிச் சொல்வோம்!! சூதுமதியாளர்களை வெல்வோம்!!!
தமிழர்களின் – திராவிடர்களின் வரலாற்றுச் சிறப்பினை எடுத்து விளக்கும் சிறப்பு மிகுந்த இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றக் கூடிய அரிய வாய்ப்பினை வழங்கிய திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி: ‘சங்கொலி’ – 18.10.2024