ராமேசுவரம், அக்.14- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், அவர்களது வலைகளை அறுத்தனர்.
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் 12 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்று, கடந்த 12.10.2024 அன்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
நேற்று (13.10.2024) அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகக் கூறி, உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
பின்னர், 5-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வலைகளை வெட்டிச் சேதப்படுத்தினர். இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள், உடனடியாக கரைக்குத் திரும்பினர்.
வட மாநிலத்தவர் நான்கு பேர் கைது!
சென்னை, அக். 14- மயிலாப்பூர் மந்தைவெளி ராம கிருஷ்ண மடம் சாலையில் நகை அடகுக்கடை வைத்திருப்பவர் பிரகாஷ் சந்த் (59). இவரது கடைக்கு கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி காலை 11 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் நகையை அடகு வைக்க வந்தார்.
வந்தவர் இங்கு ஏற்கெனவே, நான்கு முறை நகைகளை அடகு வைத்து மீட்டுள்ளேன். தற்போது அவசரமாக பணம் தேவைப்படுவதால் மீண்டும் நகைகளை அடகு வைக்க வந்திருப்பதாக கூறவே, அவர் வைத்திருந்த 307 கிராம் எடை கொண்ட நகைகளை பெற்றுக்கொண்டு ரூ.15 லட்சம் கொடுத்து அனுப்பியுள்ளார். பிறகு அந்த நகைகளை பிரகாஷ் சந்த் சோதனை செய்து பார்த்த போது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற கும்பல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு விரைந்த சென்னை காவல் துறையினர், அங்கிருந்த ராஜஸ்தானை சேர்ந்த பிந்து (43), சுந்தர்பாபா (44), விக்ரம் பகத் (58), உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சோனல் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் தெரியவந்ததாவது: ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியமான பெரு நகரங்களின் அருகில் உள்ள மாவட்டங்களில் ஒருமாதம் தங்குவார்களாம். பெருநகரங்களில் கைவரிசை காட்டிவிட்டு, பங்கு பிரித்துக் கொண்டு பிறகு சொந்த ஊருக்கு செல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
போலி ஆதார் கார்டுகள் மூலம் அலைபேசி எண்களை வாங்கி உபயோகித்தும் வந்துள்ளனர். சென்னையில் ராயப்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளிலும் இதேபோல போலி நகைகளை அடகு வைத்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
போயிங் தொழிற்சாலையில் வேலைநிறுத்தம்
17 ஆயிரம் பேரை
பணி நீக்கம் செய்ய திட்டம்!
நியூயார்க், அக்.14- போயிங் விமான தொழிற் சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். போயிங் தயாரிக்கும் விமானங்களை உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிறுவன தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக, நிறுவனத்துக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படவில்லை.
அடுத்த நான்கு ஆண்டுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கை. இதை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாத நிலையில், 33 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், போயிங் பங்குகள் 1.7% சரிந்தன. நிறுவனத்துக்கு நாள்தோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிதி இழப்பை சரி செய்ய, 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக போயிங் தொழிற்சாலை தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த செய்தியில், அவர் கூறியிருப்பதாவது: தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்திற்குப் பிறகு, நிறுவனம் தனது 737 MAX, 767 மற்றும் 777 ஜெட் விமானங்களின் உற்பத்தியை ஒரு ஆண்டு தாமதப் படுத்துகிறது.
வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது. நிதி இழப்பை சரி செய்ய பணியாளர்களை குறைக்க வேண்டும். வரும் மாதங்களில், எங்கள் மொத்த பணியாளர்களின் அளவை தோராயமாக 10 சதவிகிதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த குறைப்புகளில் நிர்வாகிகள், மேலாளர்கள், தொழிலாளர்கள் அடங்குவர். இவ்வாறு அவர் கூறினார். 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செ ய்ய முடிவு செய்து இருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.