சென்னை, அக்.14- சென்னை அருகே நடந்த ரயில் விபத்து தொடர்பாக, கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் உள்பட 13பேருக்கு அழைப் பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவர் களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி 2 நாட்கள் விசாரணை நடத்துகிறார்.
கருநாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங் காவுக்கு செல்லும் வாராந்திர ரயிலான பாகுமதி எக்ஸ்பிரஸ், கடந்த 12ஆம் தேதி இரவு, சென்னை பெரம்பூரை கடந்து திருவள்ளூர் மாவட் டம் கவரைப்பேட்டை அருகே சென்ற போது, மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு தடம் மாறி சென்றது. அப்போது அந்த தடத்தில் நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் பெட்டிகளும் சிதறிக் கிடந்தன. மேலும் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து உடனடியாக ரத்து செய்யப்பட்டது. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
நாசவேலை காரணமா?
நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சீரமைப்புப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு அந்த தடத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப் பட்டன. இதற்கிடையே இந்த நிகழ்வில் நாசவேலை ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து என்.அய்.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
13 பேருக்கு அழைப்பாணை
இதைத்தொடர்ந்து, ரயில்வே பாது காப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தண்ட வாளம், சிக்னல், கட்டுப்பாட்டு மய்யம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 13 பிரிவுகளை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதன்படி கவரைப் பேட்டை ரயில் நிலைய மேலாளர், மோட்டார்மேன், கவரைப்பேட்டை சிக்னல் ஆபரேட்டர்கள், நிலைய கட்டுப் பாட்டு பிரிவு அதிகாரிகள், பயணச் சீட்டு பரிசோதகர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
விசாரணை
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக வருகிற 16, 17ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்
ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்த உள்ளார். சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தின், ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளது.
இந்த விசாரணையில், பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர், துணை ஓட்டுநர், தொழில் நுட்பப் பணியாளர்கள், கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் என அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர்.
ரயில் விபத்து தொடர்பாக நேரில் ஆஜராகும் அனைவரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டு தீவிர விசாரணை நடைபெற உள்ளது.
தண்டவாள பராமரிப்புப் பணியா ளர்கள் குறிப்பிட்ட பகுதியில் முறையாக ஆய்வு செய்தார்களா? சிக்னல் போடப் பட்ட பின்னரும் லூப் லைனில் செல்ல காரணம் என்ன என்பது குறித்து தொழில் நுட்பப் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற இருக்கிறது. விசாரணையில் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் முழுமையாக காட்சிப் பதிவாக பதிவு செய்யப்படும்.
பொதுமக்களும் தெரிவிக்கலாம்
இதேபோல, விபத்து தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அதை பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.