கடந்த இரண்டு மூன்று நாட்களில், நமக்கு வந்த துன்பம், துயரம் மிகுந்த செய்திகள் ஓர்புறம்; அவற்றிலும் இன்பமும், மகிழ்ச்சியும் ஊடுருவிய வாயில் தேனாக, காதுகளுக்கு இதமான செய்திகளும்கூட ஒரு சில உண்டு.
வாழ்க்கை என்றால் இரண்டு நிலைகளும் கலந்தவை தானே!
திருச்சி விமானநிலையத்திலிருந்து அமீரக ஷார்ஜாவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற ‘ஏர் இந்தியா’ விமானம், புறப்பட்ட அரை மணி நேரத்திலேயே வானில் தொடர்ந்து பல முறை வட்டமிட்டபடியே சுமார் 25 தடவைகளுக்குமேல் பறந்து கொண்டே இருக்கிறது; விமானக் கேப்டனும், அவரது சக ஊழியர்களும் கீழே செய்தி அனுப்புகிறார்கள்; விமானத்தின் சக்கரங்கள் மேலே புறப்பட்டவுடனே தானே செயற்பட்டு உள் மடங்க முடியாத நிலை உள்ளது.
அப்படியே ஓட்டினால் விபத்து அபாயம் ஏற்படக் கூடும்; ஆகவே தரை இறங்குமுன் – விமானிகள் குழுவின் தலைவர் (பைலட்) வெகு முன் யோசனையுடன் நடந்து சுமார் 144 பயணிகளை பத்திரமாக தரை இறக்கி உயிர்களைக் காப்பாற்றி, தனது குழுவினரையும் பாதுகாத்துள்ளார்!
ஷார்ஜா விமான நிலையத்துடன் பைலட் தொடர்பு கொண்டபோது, ‘திருச்சிக்கே திரும்பிச் சென்று விமானத்தை சரி செய்த பிறகு பயணத்தைத் தொடருங்கள்’ என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ள நிலையில், திருச்சியில் உடனடியாக தரை இறக்கினால் – சுமார் 5 கிலோ விமான எரிபொருளுடன் முழுமையாக விமானத்தில் நிரப்பப்பட்டு புறப்பட்டுள்ள நிலையில் –விமானம் தீப்பிடித்தால் பற்றி எரியும் மிகப் பெரும் ஆபத்து – உயிர்ச்சேதம் ஏற்படக் கூடும் என்று விமானி சரியான முன்யோசனை முடிவு செய்து, அதனால் விமானத்தில் உள்ள பெட்ரோல் பெரும் அளவு குறையும் வகையில் வட்டம் அடித்து அடித்து குறைந்த அளவே எரிபொருள் இருந்த நிலையை உருவாக்கி தரை இறங்கிட முடிவு எடுத்து, கீழே விமான நிலையத்தில் ஏராளம் தீயணைப்பு வாகனங்கள், காவலர்கள், அதிகாரிகளின் தலைசிறந்த அக்கறை – பயணித்தவர்களின் ‘திக் திக்’ தொடரும் நிலை எல்லாம்!
ஒரு வழியாக யாருக்கும், எந்த சேதாரமும் இன்றி மிக அருமையாக எவருக்கும் பதற்றம் மிகுந்த மனக் குழப்பம் ஏற்படும் சூழ்நிலையிலும் நிதானமாக விமான பைலட்டும், அவர்தம் குழுவினரும் சீட் பெல்ட்டை கட்டிக் கொண்டு, அமைதியாக அமர்ந்திருந்தனர். கவலை கொள்ள வேண்டாம் என்று தன்னம்பிக்கையை பயணிகளிடம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்!
ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.
‘நீங்களாக இருந்தால் பதற்றமின்றி இருந்திருப் பீர்களா?’
தமிழ்நாடு முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ மு.க. ஸ்டாலின் அவர்கள் திருச்சி அதிகார வர்க்கத்தை வெகு வேகமாக முடுக்கி விட்டு இமைப் பொழுதும் வீணாகாத வண்ணம் இயக்கிக் கொண்டே உள்ளார்.
பதற்றமற்ற பகுத்தறிவு சிந்தனை விமானியின் வியூகத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு ஒரு புதிய பொன்னேடு இணைக்கப்பட்டது.
நெருக்கடி ஏற்படும்போது நிதானம் இழக்காமல், செயல் திட்டத்தினைச் செம்மையுடன் செய்தால் சரியான பலன் கிட்டும் என்ற பாடத்தை நாம் பெறுகிறோம்.
கடமை தவறாத விமானிகளான இக்ரோம் ரிபாட்லி பாமிஜைனல், மைத்ரி விதேல் மற்றும் குழுவினருக்கும், மக்களின் பாராட்டும், வாழ்த்தும் குவிகிறது. அதிகாரிகளுக்கும், ஊழியத் தோழர்களுக்கும் பாராட்டு.
அதுபோல கோர ரயில் விபத்து – கவரப்பேட்டையில். அதே கால கட்டத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு, அநேகமாக மரணத்திற்குள்ளே சென்று கொண்டுள்ளார். அந்தப் பயணிக்கு ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவரே – அவரது அனுபவத்தைக் கொண்டு மருத்துவமனைக்குப் போகும் முன்பே அந்த அம்மையாருக்கு சி.பி.ஆர். சிகிச் சையை துணிந்து – அங்கேயே முதலுதவி கொடுத்து விட்டார்.
மார்பில் குத்தி மாரடைப்பை விலகச் செய்யும் முறையினைச் செய்து காப்பாற்றியுள்ளார். சி.பி.ஆர். என்பது வார்த்தைச் சுருக்கம் மருத்துவத்துறையில் (Cardio Pulmonary Resuscitation) இதய தமனியை மீண்டும் இயங்க வைப்பது என்பதன் சுருக்கம் ஆகும்!
எத்தனை அவலச் செய்திகள், அவற்றை மீறி சுயநல அலைகள், மனிதர்களிடம் இப்படி மனிதம் பொங்கும் செய்திகளை, உலகம் பகுத்தறிவிற்கும், மனிதநேயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டுதான் உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சி.
‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’
அதில் உயர்ந்தோர் இவர்கள் போன்றோரே!