அபுதாபி, அக்.13– உலகின் மிகப் பெரிய சொத்து மதிப்பு கொண்ட குடும்பம் எதுவென்று கேட்டால், அது அபுதாபியை ஆளும் அல் நஹ்யான் (Al Nahyan) குடும்பம் தான் சுமார் 300 பில்லியன் டாலர்களைத் தாண்டிய சொத்து மதிப்புடன், இந்த குடும்பம் தனது முதலீடுகளை எண்ணெய், ரியல் எஸ்டேட், விமானங்கள், கால்பந்து கிளப்புகள் மற்றும் பல துறைகளில் பரவச் செய்துள்ளது.
தாங்கள் சம்பாதித்த பணத்தை எப்படி செலவிடுகிறார்கள், மேலும் பெருக்குவதற்காக எதில் எல்லாம் முதலீடு செய்துள்ளார்கள் என்பது வியப்பானதாகும்.
தங்கம் பூசப்பட்ட அரண்மனை
அபுதாபியில் உள்ள கஸர் அல்-வத்தான் அதிபர் மாளிகை இந்த குடும்பத்தின் சொத்துக்களில் ஒரு முக்கியமானது. தங்கம் பூசப்பட்ட இந்த மாளிகை சுமார் 4,078 கோடி ரூபாய் மதிப்புடையது. மூன்று பென்டகன் கட்டடங்கள் அளவுக்கு சமமான 94 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகை, அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டடமாகும். பென்டகன் என்பது அமெரிக்க ராணுவ தலைமை யகமாகும். மிகவும் பாதுகாப்பு அம்சங்க ளோடு கட்டப்பட்டது அது. இதை விடவும், இந்த அரண்மனை 3 மடங்கு பெரிது.
அய்க்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் (MBZ) இந்த பணக்கார குடும்பத்தின் தலைவர். 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் என பெரிய குடும்பத்தை கொண்ட இவர், தனது தந்தையிடமிருந்து பெற்ற செல்வத்தை மேலும் பல மடங்கு பெருக்கியுள்ளார்.
உலகின் எண்ணெய் இருப்புக்களில் 6%: அல் நஹ்யான் குடும்பத்தின் மிக முக்கியமான சொத்துக்களில் ஒன்று. உலகிலுள்ள மொத்த எண்ணெய் இருப்புக்களில் 6 சதவீதம் இவர்களிடம்தான் உள்ளது. இந்த கணிசமான பங்கு உலகளாவிய எரிபொருள் துறையில் அவர்களின் முக்கிய பங்கை உறுதிப்படுத்துகிறது. ஆம், இவர்கள் நினைத்தால் உலகின் பல பகுதிகளில் வாகனங்கள் இயங்க முடியாது, தொழிற்சாலை நடக்க முடியாது.
எண்ணெய் மட்டுமல்லாமல், ரியா னாவின் ப்யூட்டி பிராண்ட், ஃபெண்டி, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற உலகம் அறிந்த பெரும் நிறுவனங்களில் பங்குகள் உள்ளன, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பும் இவர்களுடையது. இப்படி பல துறைகளில் இந்த குடும்பம் முதலீடு செய்துள்ளது.
சுகபோகம்: வணிக நடவடிக்கைகள் மற்றும் அரச கடமைகளைத் தாண்டி, அல் நஹ்யான் குடும்ப உறுப்பினர்கள் சுகபோகமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர். அதிபரின் சகோதரர், ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான், 700 கார்கள் வைத்துள்ளார்.
அதில் உலகின் மிகப்பெரிய எஸ்.யூ.வி., அய்ந்து புகாட்டி வேய்ரான், ஒரு லம்போர்கினி ரெவென்டன், மற்றும் மெக்லாரன் MC12 உள்ளிட்ட கார்களும் அடங்கும். 350,000 படிகங்களால் ஆன ஒரு சான்டிலர் (chandelier) என அவர்களின் சுகபோகம் யாரும் நினைத்து பார்க்காத அளவுக்கு உள்ளது.
உலகளாவிய ரியல் எஸ்டேட்
பாரிஸ் மற்றும் லண்டன் முழுவதும் பல இடங்களில் சொத்துக்கள், மான் செஸ்டர் சிட்டி உட்பட பல கால்பந்து கிளப்புகள் என உலகளாவிய அளவில் ரியல் எஸ்டேட் மற்றும் விளையாட்டுத் துறைகளில் அவர்களின் ஆதிக்கம் நீண்டுள்ளது.
அபுதாபியில் இருக்கும் குயஸ்ர் அல்-வதன் என்ற அதிபரின் அரண்மனையின் பரப்பளவு 94 ஏக்கர். 2008இல் அபுதாபி யூனைடெட் குழுமம் ரூ.2,122 கோடிக்கு மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியை வாங்கியது. அல் நஹ்யான் குடும்பம் தனது செல்வத்தை பல தலைமுறைகளாக கட்டியெழுப்பியுள்ளது. எண்ணெய், ரியல் எஸ்டேட், விளையாட்டு, தொழில்நுட்பம் என பல துறைகளில் அவர்களின் முதலீடுகள், அவர்களை உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக நிலை நிறுத்தியுள்ளது.