சென்னை, அக். 13- தமிழ் வழியில் ஜப்பானிய மொழி படிக்க அருமையான வாய்ப்பை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. ஜப்பானிய மொழியை கற்றுக் கொண்டால், இந்தியாவில் உள்ளதைவிட 6 மடங்கு வரை அதிக ஊதியம் கிடைக்கும்.
ஜப்பானுக்கு 18 லட்சம் பேர் வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற நிலையில், கற்றுக்கொள்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் நிச்சயம் உண்டு என்கிறார்கள். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்றுத் தரப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கிடைக்கும் ஏராளமான வேலை வாய்ப்பு களை பெறுவதற்காக இந்த திட்டம் நிச்சயம் உதவும்.
ஆங்கிலமே சரளமாக பேச முடியாத என்னால் எப்படி ஜப்பானிய மொழியை கற்று சரளமாக பேச முடியும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஜப்பான் மொழி எளிது: ஆனால் இதுபற்றி ஜப்பானில் உள்ள தமிழர்கள் கூறும் போது, உங்களால் தமிழ் மொழியை சரளமாக பேச முடிந்தால், நிச்சயம் ஜப்பான் மொழியை பேச முடியும் என்கிறார்கள்.
ஆங்கிலமே சரளமாக பேச முடியவில்லை என்றாலும், ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டு தமிழர்களால் நிச்சயம் சரளமாக பேச முடியும் என்கிறார்கள்.
ஏனெனில் தமிழ் மொழியும், ஜப்பானிய மொழியும் ஒத்துப்போகிறதாம்.. தமிழ் இலக்கணம், உயிர் எழுத்துக்கள் போன்றவை ஒத்துப்போகிறது என் கிறார்கள்.
ஜப்பான் மொழியை கற்றுக்கொண்டால் என்ன பயன்
உலகில் வளர்ந்த நாடுகளில் ஒன்று ஜப்பான். நல்ல வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம், தரமான கல்வி, மிகச்சிறப்பான எதிர்காலம் போன்றவை உறுதியாக கிடைக்கும்.
ஏனெனில் ஜப்பானில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அங்கு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக தொழிற்சாலைகள் அதிக அளவில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நல்ல கல்வி அறிவு, சுய ஒழுக்கம் அதிகம் உள்ள நாடு என்பதால், அங்கு தொழில் நிறுவனங்களும் அதிகமாக முதலீடுகள் செய்கின்றன. இதன் காரணமாக ஜப்பானில் வேலை வாய்ப்புகள் மிக அதிகம்.
என்ன வேலைகள் அதிகம்:
குறிப்பாக சொல்வது என்றால், ஜப்பானில் ஸ்கில்டு மேன்பவர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், தொழில்நுட்ப பணியாளர்கள் 18 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள்.
அவ்வளவு பணியாளர்கள் அந்த நாட்டில் இல்லை.. இதன் காரணமாக ஜப்பான் நாடு, ஜப்பான் மொழி தெரிந்த வர்களை தேவையான வேலைக்கு எடுத்துக் கொள்கிறது. எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் உற்பத்தியில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதேபோல் மெக்கானிக்கல், ஏஅய், எம்எல் போன்ற துறைகளிலும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
ஓட்டல் மேனேஜ்மெண்ட், ஹாஸ் பிட்டாலிட்டி, செவிலியர் உள்பட பல்வேறு துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
ஜப்பானில் எந்த வேலைக்கும் இந்தியாவில் உள்ளதைவிட 3 முதல் 6 மடங்கு அதிக ஊதியம் கிடைக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், பொறியாளர்கள் என்2 லெவல் என்றால் ஆண்டுக்கு 21 லட்சம் ஊதியம் கிடைக்கும்.
பொறியாளர் அல்லாத என்4 லெவல் பணிகள் என்றால் 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகை கள் கிடைக்கும். ஜப்பானில் உள்ள வேலை வாய்ப்பை அறிந்து அந்த மொழியை கற்க பலரும் ஆர்வம் காட்டு கிறார்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் ஜப்பானிய மொழி படிக்க அருமையான வாய்ப்பை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கி உள்ளது. ஜப்பான் மொழியை இலவசமாக கற்று தருகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்.
அல்லது லிங்கில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். ரிஜிஸ்ட்ரேசன் நாளை மறுநாள் முடிகிறது. வாரத்தில் அய்ந்து நாட்கள், நாள்தோறும் 2 மணி நேரம் வகுப்பு நடைபெறும். டிகிரி பிடித்தவர்களும், டிப்ளமோ, அய்டிஅய் படித்தவர்களும் ஜப்பான் மொழி கற்க விண்ணப்பிக்கலாம். என்5 லெவல் கற்க 3 மாத பயிற்சி, என்4 லெவல் கற்க 3 மாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. டிசம்பர் முதல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeQbhsdAOXydQLVtHkZjgVpnWnszG90L8FmrgaZ0KLxxg836Q/viewform என்ற லிங்கில் பதிவு செய்யலாம்