சென்னை, அக்.13 திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரயில் விபத்தில் சேதமான ரயில் பாதைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மெயின் லைன் சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மைசூர் – தர்பாங்கா இடையே பாக்மதி வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கருநாடகாவில் இருந்து புறப்படும் இந்த ரயில் தமிழ்நாடு வழியாக ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து பீகார் மாநிலம் தர்பங்காவை சென்றடைகிறது.
தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த நிலையில் 11.10.2024 அன்று சுமார் 8 மணிக்கு பெரம்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டது.
சிக்னல் கோளாறு காரணமாக லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினில் இருந்து சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்டது. தொடர்ந்து விபத்து குறிப்பு தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கினர். மேலும் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்து நடந்த பகுதிக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களும் உடனடியாக களத்தில் இறங்கினர். சுமார் 3 மணி நேர மீட்பு பணிகளுக்கு பிறகு சுமார் 1400க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் முழுமையாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில் 19 பேர் காயம் அடைந்தனர். 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விபத்தில் சிக்கிய காயம் அடைந்த அனைவரும் உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அப்பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மின்சார ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்கள் பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனித தவறு காரணமா அல்லது தொழில்நுட்ப தவறு காரணமாக விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ரயில்வே பணியாளர்களுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க ரயில் தண்டவாளத்தினை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் மெகா பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு லூப்லைன் மற்றும் மெயின் லைனை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மழை காரணமாக பணிகள் தாமதமான போதிலும் இடைவிடாது ரயில்வே தொழிலாளர்கள் ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மெயின் லைனை சீரமைக்கும் பணி நிறைவடைந்ததாகவும் ரயில் போக்குவரத்து தொடங்கியதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி 9 மணிக்கு அனைத்து பணிகளும் சீரடைந்த நிலையில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தை நிஜாமுதீன் – எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ராஜதானி எக்ஸ்பிரஸ் கடந்து சென்றது. இதன் மூலம் சாதனை நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டதாக தென்னக ரயில்வே கூறியுள்ளது. 11.10.2024 அன்று சுமார் 8.30 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து சீராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.