திருச்சியில் இருந்து கடந்த 11.10.2024 அன்று மாலை ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சக்கரம் உள்ளே செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தை மீண்டும் தரையிறக்க திட்டமிட்டார். தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க வேண்டி, சுமார் இரண்டு மணி நேரம், விமானத்தை வானத்தில் பறக்கவிட்டார். திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதியில் விமானம் சுற்றி வந்தது.
இந்த விமானத்தில் 141 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்தனர். விமான பயணியரின் உறவினர்கள் கதறத் துவங்கினர்.விமானம் பத்திரமாரக தரையிறங்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் இணையவாசிகள் தங்கள் பதைபதைப்பை பதிவிட்டபடியே இருந்தனர்.
வெகு நேரம் தங்கள் பகுதிக்கு மேல் விமானம் சுற்றி வருவதைப் பார்த்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி விமான நிலையத்தில் மக்கள் பதைபதைப்போடு குவிந்தனர்.
இன்னொரு புறம், தொலக்காட்சியில் இக்காட்சிகளைப் பார்த்த பல லட்சம் மக்கள் பீதியில் உறைந்தனர்.
விமான சிக்கல் குறித்த தகவல் கிடைத்ததும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அலுவலர் களுடன் உடனடி யாக ஆலோசனை செய்தார். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திட உத்தரவிட்டார்.
சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட விமானத்தை, இரவு 8:15க்கு மிக மிக பத்திரமாக, விமானி தரையிறக்கினார். மெதுவாக புகை கிளம்பத் துவங்கியது. ஆனால், சற்று நேரத்தில் அடங்கியது.
ஒருவழியாக விமானம் பாதுகாப்பாக தரை யிறங்கியது.
இதையடுத்து விமானி இக்ரம் ரிபத்லி, சக விமானிகள் மைத்ரி ஶ்ரீகிருஷ்ணா, லைஷ்ராம் சஞ்சிதா தேவி, வைஷ்ணவி சுனில் நிம்பல்கர், சுஷி சிங் மற்றும் சாகேத் திலிப் வதனா ஆகியோருக்கு பயணியர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
‘விஞ்ஞான’ ஜோதிடரின் விபரீத காரணம்!
இதற்கிடையே, தன்னை, ‘விஞ்ஞான ஜோதிடர்’ என அழைத்துக்கொள்ளும் ஆம்பூர் வேல்முருகன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அதிர்ச்சி அளித்தது.
அந்த பதிவில் அவர், ”குரு ரிஷபத்தில் வக்கிரமாகி மேஷம் நோக்கி வரும் போது ஆகாய விமான தொடர்பான பிரச்சினை ஏற்படும்.
சம்பவம் நடந்தது திருச்சி…
திரு என்பது மேஷம், சிம்மம், தனுசு ராசியை குறிக்கும்… உச்சி என்பது மேஷ ராசியை குறிக்கும். திரு+உச்சி = திருச்சி… குரு வக்கிரமாகி மேஷத்தில் சஞ்சரிப்பது கொண்டு சனியின் பார்வை படுவதால் திருச்சி விமான நிலையத்தில் விமானம் தொடர்பான பிரச்சினை.
ஏன் மற்ற விமானங்களுக்கு இது போன்ற பிரச்சினை ஏற்படவில்லை என்றால், இந்த விமானத்தை ஓட்டும் விமானியின் பெயர், அவருக்கு நடக்கும் திசை, புத்தி, கோள்சாரம் குரு தொடர்பு இருக்கும்” – என்றுபதிவிட்டு இருந்தார் ‘விஞ்ஞான’ ஜோதிடர் வேல் முருகன்.
இது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
“திருச்சி என்பது ‘திரு + உச்சி’ அல்ல. அப்பகுதி மலையில், ‘சிரா’ என்கிற சமண முனிவர் வாழ்ந்தார். அவர் பெயரில், ‘சிரா பள்ளி’ என அழைக்கப்பட்டது. மரியைதாக்குரிய சொல்லாக , ‘திரு’ சேர்க்கப்பட்டு, ‘திருச்சிராப்பள்ளி’ ஆனது. இதைக்கூட இந்த ஜோதிடர் என்கிற நபர் அறியவில்லையே” என்று நெட்டிசன்கள் ஆதங்கப்பட்டனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர், டி.வி.சோமு, “நடந்துருச்சு.. ஏதோ சொல்றீங்க! இதை, நடக்கப்போறதுக்கு முன்னால கணிக்க முடியாதா?” என்று பின்னூட்டம் இட்டார்.
அதற்கு ‘விஞ்ஞான’ ஜோதிடர் வேல் முருகன், “மெண்டல், முட்டாள், மானம் கெட்டவன், லூசு, சைக்கோ, மானங்கெட்டவன்” என்றெல்லாம் பத்திரிகையாளர் டி.வி.சோமுவை கடுமையான வார்த்தைகளால் ஏசி, பின்னூட்டம் இட்டார்.
“டி.வி.சோமு நியாயமான கேள்வியைத்தானே கேட்டு இருக்கிறார்… எதற்காக தரம் தாழ்ந்து பதிவிடுகிறீர்கள்” என Moorthi Erode என்பவர் உள்ளிட்ட பலர் பின்னூட்டம் இட.. அதை ‘விஞ்ஞான’ ஜோதிடர் ஆம்பூர் வேல் முருகன் நீக்கிவிட்டார்.
மேலும் தான் பத்திரிகையாளர் டி.வி.சோமுவை, கடுமையாக ஏசியதை பெருமையுடன் தனிப்பதிவாக வெளியிட்டுள்ளார் ஜோதிடர் வேல் முருகன். அதிலும் பலர், “இது தவறு” என சுட்டிக்காட்ட.. அந்த பின்னூட்டங்களை நீக்கி வருகிறார்.
இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமுவும் பதிவிட, ஜோதிடர் என்ற பெயரில் இயங்கும் வேல் முருகன் செயலை, பலரும் கண்டித்து வருகின்றனர்.
சக ஜோதிடர்களை இழிவாக ஏசி, வேல்முருகன் பதிவு
ஜோதிடம் என்ற பெயரில் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைக்கிடமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார் வேல் முருகன்.
வதந்தியை நம்பி பதிவிட்டு சிக்கிய சம்பவம்!
சமீபத்தில் “நடிகர் சூர்யா, பல கோடி ரூபாய்க்கு விமானம் வாங்கினார்” என்று ஒரு வதந்தி பரவியது. இது தெரியாமல், உண்மையென்று நம்பி, சூர்யாவை விமர்சித்து பதிவிட்டார்.
“பிரபலங்கள் பலரது ஜாதகம் உங்களிடம் இருக்கும். சூர்யாவுக்கு வாகன யோகம் இருக்கிறதா என்பதை ஆராயாமல் வதந்தியை நம்பி விட்டீர்களே” என்று பின்னூட்டம் இ்ட்டதற்கும் கடுமையான வார்த்தைகளை வீசினார் ஜோதிடர் வேல் முருகன்.
மனநல, மது பிரச்சினையை ஜோதிடத்தால் சரி செய்வேன்!
மேலும், “ஜோதிடத்தில் இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்தால் மருத்துவ துறைகளுக்கு வேலை இல்லாமல் போகும். இப்போது என் ஆராய்ச்சி படி செய்வினை, சூனியம், பேய் பிடித்தல், பைத்தியம், மனநிலை பிரச்சினை, போதை பிரச்சினைகளுக்கு ஜோதிடத்தில் பரிகாரம், அதிர்ஷ்ட ரத்தினங்கள் மூலமாக நிரந்தர தீர்வு அளிக்க முடியும்” என்று பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
“பைத்தியக்காரனுங்க..”: சக ஜோதிடர்களை ஏசும் வேல் முருகன்!
அதே போல சக ஜோதிடர்கள் குறித்தும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அவர், “சில பைத்தியக்கார ஜோசியக்காரனுங்க, ராசி, லக்னம் சுத்துது, மயிரு சுத்துதுன்னு ஊரை ஏமாத்தி கொள்ளை அடிச்சுட்டு இருக்கானுங்க…
நாளிதழில் தான் எழுதி வரும் ஜோதிட பகுதியை தினமும் பகிரும் வேல் முருகன்
ஏன்டா டேய் அண்டவெளியில் எங்கடா ராசி, லக்னம் சுத்துது…
ராசி, லக்னம் சுத்துறதுக்கு பின்னாடி ஏதாவது விஞ்ஞான நிருபணம் ஆதாரம் இருக்கா?
ராசி, லக்னம் சுத்துனா உன்னை பெத்த அப்பன், அம்மா, உன் பெயர் குணம் மாறாதா..” என்றும் பதிவிட்டார்.
இதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில நாளேடுகளில் ஜோதிட பகுதியை எழுதி வருகிறார்.
‘வாசகர்களில் ஜோதிடத்தை நம்புபவர்களும் இருப் பார்கள். அவர்களுக்காக அந்த பகுதியை வெளியிட வேண் டும்’ என பத்திரிகை நிர்வாகம் நினைப்பது எதார்த்தமே.
அதே நேரம், அளவுக்கு மீறிய மூடத்தனங்களை எந்த பத்திரிகையும் அனுமதிக்காது.
இதே திருச்சி விமான பிரச்சினை குறித்து, தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களிலும் அவற்றின் இணைய இதழ்களிலும் உண்மை நிலையை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், “இந்நாளிதழ்களில் ஜோதிடப் பகுதிகளை எழுதுகிறேன்” என தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடும் வேல்முருகன், தொடர்ந்து ஜோதிடத்தின் பெயரில் சர்ச்சைக்குரிய பதிவுகளை இடுவதும், சக ஜோதிடர்களை ஏசுவதும் தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழிகளின் நற்பெயருக்கு பங்கம் விளைவப்பதாகிவிடும்” என்பதே வாசகர்களின் மனக்கவலை.
– நன்றி : தமிழன் குரல்.com