சுயமரியாதை இயக்கம் – (திராவிடர் கழகம்) ஏன்? எப்படி? – கட்டுரைத் தொடர் (7)
– கி.வீரமணி –
“சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்!” என்கிற தலைப்பில் 6 ஆவது தொடர் கட்டுரையாக 20.8.2024 அன்று எழுதினோம். இடையில் பல இயக்கப் பணிகள், தொடர் வெளிநாட்டு – உள்நாட்டுப் பயணங்கள் முதலிய குறுக்கீடுகளால் தொடர் தேக்கமுற்றது. நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம் பற்றி ஒப்பற்ற உலகத் தலைவரும், உயரிய சுதந்திர சுய சிந்தனையாளருமான அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தனது இயக்கத்தின் நெறிமுறை குறித்து சிறப்பாக எழுதியிருந்ததை 6ஆவது கட்டுரையில் அப்படியே வழங்கியிருந்தோம்.
பொதுமக்கள் நம் இயக்கத்தை மதிப்பதற்கு அடிப்படைக் காரணம் ரகசியமில்லா இரட்டை வேடம் போடாத இயக்கமாய், அதன் முடிவுகளும், முறைகளும் உள்ளது தான் என்று விளக்கி அதன் வெளிப்படைத்தன்மை தான் அதன் பலத்தின் – வெற்றியின் ரகசியம் என்பதை சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் இப்படி ஓர் அப்பட்டமான உண்மையை அப்படியே, ஒப்பனை சிறிதுமின்றி, உடல் பரிசோதனையாளருக்கு எப்படி உடையற்ற ஆய்வு இன்றியமையாததோ, அதுபோன்று உண்மையை அதன் நிர்வாணத் தன்மையிலேயே ஆராயும் ஒரு சமூக விஞ்ஞானத்தை, விருப்பு வெறுப்புக்கு இடந்தராது விளக்கும் ஒரு தத்துவ ஞானி போல, வெளிப்படையாக விவரித்ததன்படி அவ் இயக்கம் இன்றும், நாளையும், என்றும் நடைபெறும் என்பது மறுக்க முடியாத உண்மை.
‘Transperancy‘ என்பது ஒளிவு மறைவற்ற வெளிப்ப டைத் தன்மையைக் குறிக்கும். யார் வேண்டுமானாலும் கண்டு ஆராயலாம், ஆட்சேபனையும் இல்லை.
இப்படி உண்மையை – கலப்பில்லாத பச்சை உண்மையைக் கூறினால் வெற்றி ஏற்படுமா? புகழ் பெற முடியுமா? என்று பார்க்காத விஞ்ஞான அணுகுமுறை அவருடையது.
அதற்கு மூலம் – வேர் எங்கிருந்து அவருக்குக் கிடைக்கிறது? என்பது நியாயமான கேள்வி.
தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவர் புள்ளிக்குதவாத பள்ளிப் படிப்பைப் பெறாமல், மற்ற எவரும் எளிதில் பெற முடியாத இயற்கை அறிவு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் – சுற்றுச்சார்பு, சூழ்நிலையில் கண்டறிந்தவற்றையே தனது கொள்கைக்கான – சமூக சமத்துவ சுயமரியாதை லட்சியப் பயணத்திற்கான, போதனைக்கான, பாடத்திட்டங்களாகக் (syllabus) கொண்டே தனது இயக்கத்தை வலுவான கட்டுமானத்துடன் கற்கோட்டையாகக் கட்டி விட்டார்.
அது எப்போதும் உண்மையையே பேசும். பொய் பேசக் கூசும். மனதிற்பட்டதையும், சமூகத் தேவையான அறுவை சிகிச்சையையும் செய்ய அது தயங்காது; அதன் அணுகுமுறை surgeon’s cure என்ற அறுவை சிகிச்சை முறையே! அதற்குக் காரணம் அதற்கு முன் வாழ்ந்த பலராலும் கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சை முறை physician cure போதாமைக்கு ஆளாகியதேயாகும்.
அதனால்தான் பல சீர்திருத்தவாதிகள் ஜாதியை, மூடநம்பிக்கைகளை – தீண்டாமை, பாராமை, நெருங்காமையை எதிர்த்தவர்கள் தம் வாழ்நாளின் இறுதியில் “கடைவிரித்தோம் கொள்வார் இல்லை; கட்டி விட்டோம்” என்று கூறிட வேண்டிய நிலை. ஆனால், தந்தை பெரியாரது விடாமுயற்சி, எதிர்நீச்சல், அளவு கடந்த அறிவும், துணிவும் கலந்த தன்னம்பிக்கையே அவருக்குக் களமாடிய போர்த் தலைவனுக்குரிய வெற்றியைத் தந்தது. அவர் வாழ்ந்த காலத்திலும், உடலால் மறைந்து – உணர்வில் நிறைந்த ‘அவருக்குப்பின்’ என்ற இந்தக் காலகட்டத்திலும் வரலாற்றாளர்களின், ஆய்வாளர்களின் வியப்புக்கும், பதிவுக்கும் வாய்ப்பாக ஆகி வருகிறது!
அவரது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய உண்மையின் பயனுறு சிறப்பை அவரது தனி வாழ்வில் இயல்பாகவே அவரது 24ஆவது வயதில் (1903இல்) ஈரோட்டின் பிரபல வியாபாரியாக விளங்கியபோதே ஒரு தெளிவான திடசித்தத்துடன் வாழ்ந்த எடுத்துக்காட்டான (exemplary) மனிதராகத் திகழ்ந்து, மற்ற சராசரி மனிதர்களிடமிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கிறார்.
அய்யா கைப்படத் தந்துள்ள graphic description என்று சொல்லப்பட வேண்டிய அளவுக்கு ஒரு சமூகவியல் படமாகவே அது அமைந்துள்ளது.
இதோ அவ்வறிக்கையைப் படியுங்கள்
நம் போராட்ட நேர்மை
‘‘ஒரு நண்பர் என்னிடம் வந்து, “என்ன இப்படி எழுதியிருக்கிறாயே? இந்தி எழுத்துப் பெயரை அழிக்கவேண்டும் என்கின்ற எண்ணம் உனக்கு இல்லைபோல் தெரிகிறதே! அழிக்கப் போகிறவரின் பெயர் விலாசம் கொடுத்தால், கொடுத்தவர்களை வீட்டில் இருக்கும்போதே, போலீசார் வந்து பிடித்துக்கொண்டு போய்விடு வார்களே அப்புறம் யார் இந்தியை அழிப்பது? இது என்ன போராட்டம்!’ என்று கேட்டார்.
அதற்கு நான் என்ன பதில் சொன்னேன் என்றால், நமது போராட்டம் காங்கிரஸ்காரர்களின்ஆகஸ்டுப் போராட்டம்’ போன்ற நாசவேலைப் போராட்டம் அல்ல; திருட்டு வேலைப் போராட்டமும் அல்ல. இது ஆண்மைப் போராட்டம்; உண்மைப் போராட்டம் ; அதுவும் நமது வெறுப்பையும், வேண்டாமையையும் காட்டும் வீரப் போராட்டம்; இதில் பயன் ஏற்படவில்லையென்றால் நான் விலகிக்கொள்கிறேன். மற்றதில் நம்பிக்கையுள்ள மற்றவர்கள் அவரவர் ஆசைப்படி நடந்து கொள்ளட்டும்’ என்று சொன்னதோடு-
எனது 30 வருஷ பொதுத் தொண்டில் ஒரு செயல்கூட, ஒரு போராட்டம்கூட நான் மறைவாய் நடத்தினது கிடையாது; நடத்த அனுமதித்ததும் கிடையாது.
என்மீது பொதுவாழ்வில் சுமார் 20 வழக்குகள் நடத்திருக்கும். என் சொந்த வாழ்விலும் சில வழக்குகள் நடந்திருக்கும். ஒன்றுக்குக்கூட நான் எதிர் வழக்காடி இருக்க மாட்டேன்; ஒப்புக்கொள்ளவும் தயங்கி இருக்கமாட்டேன்’ என்று சொன்னேன்.
ஒரு சிறு எடுத்துக்காட்டு
1903இல் அப்போது எனக்கு சுமார் 24 வயது இருக்கும். அப்போதே வியாபாரத்தில் எனக்கு விளம்பரம் உண்டு; என் தகப்பனார் பெயரில் பெற்று இருந்த ஒரு ஆயிரம் ரூபாய் டிக்கிரியை திருச்சியில் நிறைவேற்ற ‘டிக்கிரிநகலை எடுத்துக்கொண்டுபோய் வக்கீ லிடம் கொடுத்து, வக்காலத்து பாரத்தில் என் தகப்பனார் கையெழுத்தை நானே போட்டுக் கொடுத்து, அவசரப் படி கட்டி, ஆளைப்பிடித்துச் சேவகன் கையில் விட்டு உடனே ஈரோட்டிற்கு வந்துவிட்டேன்.
பிரதிவாதி டிக்கிரி பணத்தை வக்கீலிடம் கட்டி,வக்கீலை ரசீது கேட்டார்; அதோடு செல வைத் தள்ளிவிடுங்கள் என்றார். அதற்கு வக்கீல், இப்பொழுதுதானே வாதி ஊருக்குப் புறப்பட்டார்; சற்றுமுன் வந்திருந்தால் வாதி இடமே ரூபாயைக் கட்டி ரசீது வாங்கி இருக்கலாமே; அவர் ஏதாவது தொகையில் தள்ளிக்கொடுப்பாரே என்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் பிரதிவாதி வக்கீலிடம், ‘வந்திருந்தவர் வாதி அல்ல; வாதியின் மகன்; இவர் பெயர் இராமசாமி நாயக்கர் என்றார். உடனே வக்கீல் ஆத்திரப்பட்டு அப்படியா? என்று கேட்டு ரசீது கொடுத்து பிரதிவாதியை அனுப்பிவிட்டு, மறுநாள் முனுசீப் கோர்ட்டில் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்து பணத்தைக் கட்டிவிட்டார். அந்த விண்ணப்பத்தில் நான் ஆள் மாறாட்டம் செய்துவிட்டேன் என்றும், போர்ஜரி’-கள்ளக் கையெழுத்துச் செய்து தன்னை மோசம் செய்துவிட்டேன் என்றும் எழுதி இருந்தார்.
முனுசீப் எனக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டார். அந்த நோட்டீஸில் உன்மீது (கேஸ்) வழக்கு நடத்த ஏன் சாங்கிஷன் கொடுக்கக்கூடாது !” என்று கண்டிருந்தது.
இந்த நோட்டீஸ் எனக்கு வந்ததும், தென் இந்திய வியாபார உலகமே ஆடிவிட்டது. காரணம், அப்போது என் தகப்பனாருக்கும், எனக்கும் வியாபார உலகில் இருந்த பிரபலப் பெயராகும்.
என் தகப்பனார் இந்த நோட்டீசை எடுத்துக்கொண்டு பி.டி. சுப்பிரமணிய அய்யர் C.விஜயராகவாச்சரியார் என்ற இரண்டு பிரபல சேலம் வக்கீல்களிடம் சென்றார். அவர்கள் இருவரும் ஒரேமாதிரிச் சொன்னார்கள்;அதாவது, உங்கள் மகன், இந்தக் கையெழுத்து நான் போடவில்லை?என்று சொல்லிவிடவேண்டும் என்று சொன்னார்கள். என் தகப்பனார் நான் ஜெயிலுக்குப்போகாமல் இருப்பதற்கு எதுவும் செய்யத் துணிவு கொண்டவர்; ஆதலால், அவர் அதற்குச் சம்மதித்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோட்டுக்கு வந்து என்னைக் கேட்டார். நான் அதற்கு இணங்கவில்லை. இதற்காக 2 பெரும் பொய்களைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை; வருவது வரட்டும்’ என்று சொல்லிவிட்டேன்.
என் மைத்துனன் நோட்டீசை எடுத்துக்கொண்டு நார்ட்டன் துரையிடம் சென்றார். அவரும், இதில் கையெழுத்து நான் போடவில்லை என்பது தவிர வேறு டிபன்ஸ்’ இல்லை; இதற்காக எனக்கு ஏன் 2000, 3000 கொடுக்கவேண்டும்!” என்று சொல்லி, தனக்கு வர விருப்பமில்லை என்பதைக் காட்டிக்கொண்டார்.
கடைசியாக டி.டி. ரெங்காச்சாரியார் என்ற ஒரு முனுசீப்பை சிபார்சு பிடித்து .தேசிகாச்சாரியை வக்கீல் வைத்து முனுசீபிடம் என் தகப்பனார் எவ்வளவு கெஞ்சியும் அவர் ‘சாங்கிஷன் கொடுத்துவிட்டார். உடனே நான் காப்பு, கொலுசு, கடுக்கன் எல்லா வற்றையும் கழற்றி எறிந்துவிட்டு, தாடி வளர்த்துக்கொண்டு-கேப்பைக் களி (கேழ்வரகு (கேழ்வரகுக் களி) சாப்பிட்டுப் பழகிக்கொண்டு-தலையணை இல்லாமல் பாயில் படுத்துப் பழக ஆரம் பித்துவிட்டேன். என் தாயாருக்கு அன்று முதல் ஒரே வேளை சாப்பாடு; பல கோயில் களுக்கு அர்ச்சனை செய்கிற வேலை. ஆனால் நான் மாத்திரம், நாம் ஜெயிலுக்குப் போவது என்னமோ உறுதி; ‘கேஸ் நடந்து தண்டனை கிடைக்கிறவரை அனுபவிக் காததை எல்லாம் அனுபவித்துவிடுவோம் என்று நல்ல மைனர்போல் திரிந்துகொண்டு இருந்தேன். சாப்பாடு-களி; படுக்கை-பாயில்; அவ்வளவுதான்; மற்றவையெல்லரம் ‘ஜமீன் மைனர்’தான்!
2 மாதம் பொறுத்து திருச்சியில் அசிஸ்டெண்ட் கலெக்டர் மெக்பர்லெண்டு (என்று – ஞாபகம்) என்பவரிடம் கேஸ் வந்தது. கோர்ட்டுக்குப் போனோம்; அன்று 500 பேர்கள் வர்த்தகர்கள் உட்பட கோர்ட்டில் வேடிக்கை பார்க்க வத்த கூட்டம்.
கலெக்டர் ஆசனத்தில் அமர்ந்து 5, 6 வழக்குகளைக் கூப்பிட்டு விசாரித்து முடிவு சொல்லிவிட்டார். எல்லா ‘கேஸ்’களையும் தண்டித்துவிட்டார். அவர் சிறு வயது 28 அல்லது 30 வயதுதான் இருக்கும்.என் பெயரைக் கூப்பிட்டார்.
எனக்கு, வக்கீல் கணபதி அய்யர்-அப்போது அவர் பப்ளிக் பிராசிகியூட்டர். எனக்காக பெரிய கலெக்டரிடம் அனுமதிபெற்று, ‘எதிரிக்கு’ ஆஜராகிறார். அவரும் நானும் ஒன்றாய்க் கோர்ட்டுக்குள் போனோம். அவர் என் தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டு கோர்ட்டுக்குள் வந்து, என்னைக் கூண்டிற்குப் பக்கத்தில் விட்டுவிட்டு, அவர் தனது இடத்திற்குச் சென்று அமர்ந்தார். கலெக்டர் இதைப் பார்த்துவிட்டு அவரிடம், “எங்கு வந்தீர்கள்! உங்களுக்கு இன்று இங்குக் கேஸ் இருக்கிறதா?” என்றார். கணபதி அய்யர்,ஆம்! போர்ஜரி கேஸ் இருக்கிறது என்று கேஸ் நம்பரைச்சொன்னார். அதற்கு, ‘சர்க்கார் தரப்பில் உம்மை அழைக்கவில்லை போலிருக்கிறதே? என்றார், கலெக்டர். *நான் எதிரிக்காக ஆஜராகிறேன் என்றார் வக்கீல். ‘சர்க்கார் வக்கீல், சர்க்கார் வழக்கில் எதிரிக்கு ஆஜராகலாமா இதென்ன புது வழக்கமாக இருக்கிறதே!” என்றார். கலெக்டர் அனுமதிமீது ஆஜராகிறேன்’ என்றார் வக்கீல். ஏன் அப்படி’ என்றார் கலெக்டர். கேஸ் சர்க்காருக்கு உபயோகமற்ற-பலமற்ற கேஸ். அதோடு இது ‘சென்சேஷனல்” கேஸ் ஆனதால், அனுமதி கேட்டேன்; கொடுத்தார்’ என்றார் வக்கீல்.
என்னைப் பார்த்துக்கொண்டே, “சரி, சாட்சியைக் கூப்பிடு” என்றார் சுலெக்டர்.
முதல் சாட்சி வக்கீல் ஜம்புநாதய்யர். அவர் கொஞ்சம் சுரக்குச் சேர்த்து, “இந்த ஆளை, நீ தான் வாதியா என்றேன், உன் பெயர் என்ன” என்றேன். ஆம்; வெங்கிட்ட நாய்க்கர் என்றான் என்றார். ஏன் அப்படிக் கேட்டீர்? என்றார் கலெக்டர். யார் வந்தாலும் நான் அப்படித்தான் கேட்பது என்றார் வக்கீல். வக்காலத்து பாரம் ரிஜிஸ்டர் செய்த கிராம முன்சீப் ஒரு சாயபு: அவர் கிழவனார். அவருக்கு கண் பார்வை சரியாகத் தெரியாது. ‘அவர் ஒரு வாலிபமான ஆள்-காப்பு, கொலுசு, கடுக்கன் போட்டுக்கொண்டு வந்து என் எதிரில் நான்தான் வெங்கட்ட நாய்க்கன் என்று சொல்லிக் கையெழுத்துப் போட்டார். அந்த ஆள் இதோ காப்பு கொலுசு போட்டுக்கொண்டு நிற்கிறாரே இவர் தான் என்று கையை நீட்டி என்னைக் காட்டினார். எல்லோரும் சிரித்தார்கள்.
கலெக்டர் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில், “நீ என்ன சொல்லுகிறாய்” என்று கேட்டார். என் வக்கீல் அதை மொழிபெயர்த்து என்னைக் கேட்டார். நான் தயங்கித் தத்தளித்துப் பேசுகிற தன்மையில், ‘நான்தான் கையெழுத்துப் போட்டேன்’ என்றேன்.
‘ஏன் போட்டாய்!’ என்றார். அப்படித்தான் கோர்ட்டு, ரயில் நடவடிக்கைகளில் எப்போதும் நான் போடுவது வழக்கம்? என்றேன். ஏன் அந்த வழக்கம் !” என்றார்.
எங்கள் அப்பா கிழவனார். நான்தான் வேலை பார்ப்பது; அத்த வியாபாரமும் பணமும் என்னுடையது. அவர் பெயர் பிரபலம்; ஆனதால் அந்தப் பெயர் வைத்து நான் வியாபாரம் செய்கிறேன்’ என்றேன்.
“சரி; வெங்கிட நாயக்கரை கூப்பிடு!” என்றார் கலெக்டர். வெங்கிட நாயக்கர் அழுது கொண்டே பெட்டிமேலேறி, வக்கீல் கேட்டதற்கு நான் சொன்னதை ஆதரித்தே பதில் சொன்னார். ஜம்புநாதய்யரைப் பார்த்து, கலெக்டர், “எனிதிங்?” என்றார். எல்லோரும் சிரித்தார்கள். ஜம்புநாதய்யர் ஒன்றும் பேசவில்லை.
உடனே கலெக்டர் 4 வரி எழுதிப் படித்துவிட்டு அடுத்த கேஸ் கூப்பிட்டார். அவர் படித்தது விளங்கவில்லை. மேஜிஸ்ட்ரேட் கிளார்க்கு ஒரு நாயுடு. அவர், “கேஸ் தள்ளப் பட்டுவிட்டது; நீ போகலாம்” என்றார். என் தகப்பனார் என்னைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டு, கணபதி அய்யர் காலில் விழப்போனார்; அவர் எட்டிப்போய்விட்டார். தீர்ப்பு என்னவென்றால், இந்த நடவடிக்கை இந்த செக்ஷனின் கருத்துக்குப் பொருந்தாது. எதிரி யாரையும் மோசம் செய்ய இந்தக் காரியம் செய்யவில்லை. வழக்குத் தன்ளப்பட்டது’ என்று இருந்தது.
இப்படி இன்னும் சில உண்டு. இந்த எனது நடத்தை கடவுளுக்காக -மோட்சத் திற்காக-சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. நேர்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், நம்மை நாமே எண்ணிக் கொள்ளுவதில் ஒரு பெருமை, ஒரு அகம்பாவம், எங்கும் எப்போதும் யாரிடமும் பேசும்போது ஒரு துணிச்சல், தோல்வியிலும் ஒரு திருப்தி, மற்றவர்களுக்கும் நேர்மை ஒழுக்கம் பற்றிய வழிகாட்டி- பிரச்சாரம். ஆதலால் மறைவாக ஒன்றும் செய்யவேண்டாம்; எதையும் மறைக்காதே! என்றேன். மற்றும் பல எடுத்துக்காட்டுகள் காட்டலாம்; அது தற்பெருமையாக முடியும். சுருக்கமாகச் சொல்லுவேன். நேர்மையாக நடப்பது சுயநலமும்கூட ஆகும்.
எனது பலக் குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும்-பொதுவாழ்வில் இந்த நாட்டில் நான் சாகாமல் இருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும்.’’
(‘விடுதலை’-தலையங்கம்-26-7-1952)
அந்த காலகட்டத்தில், திருச்சி நீதிமன்றத்தில் நடந்தவைகளைக் குறிப்பிட்டு விட்டு, அப்படி உண்மையைத் தாம் பின்பற்றுவதோடு, தந்தை பெரியார் தரும் ஓர் அருமையான அசாதாரணமான விளக்கம் நம்மை இன்ப அதிர்ச்சிக்கும், எப்போதும் மறக்க முடியாத, என்றும் நிலைத்திருக்கும் வகையில், நிரந்தர பாடத்தை தந்து நம் மனங்களில் பதியமாகிறது!
இப்படி இன்னும் சில உண்டு. இந்த எனது நடத்தை கடவுளுக்காக –
மோட்சத்திற்காக-
சத்தியத்தை அடிப்படையாகக்
கொண்டது அல்ல.
நேர்மையை
அடிப்படையாகக் கொண்டது என்பதுடன்,
நம்மை நாமே எண்ணிக் கொள்ளுவதில்
ஒரு பெருமை,
ஒரு அகம்பாவம்,
எங்கும் எப்போதும் யாரிடமும் பேசும்போது ஒரு துணிச்சல்,
தோல்வியிலும் ஒரு திருப்தி,
மற்றவர்களுக்கும்
நேர்மை ஒழுக்கம் பற்றிய
வழிகாட்டி- பிரச்சாரம். ஆதலால்
மறைவாக ஒன்றும் செய்யவேண்டாம்;
எதையும் மறைக்காதே! என்றேன். மற்றும்
பல எடுத்துக்காட்டுகள் காட்டலாம்;
அது தற்பெருமையாக முடியும்.
சுருக்கமாகச் சொல்லுவேன்.
நேர்மையாக நடப்பது சுயநலமும்கூட ஆகும்.
எனது பலக் குறைவினால்
எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் –
(தானே ஒப்புக்கொள்ளும் என்னே அறிவு நாணயம் அப்பப்பா!)
பொதுவாழ்வில் இந்த நாட்டில்
நான் சாகாமல் இருப்பதற்கு
இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும்
ஜாக்கிரதைதான் காரணமாகும்.
(‘விடுதலை’-தலையங்கம்-26-7-1952)
அதாவது 72 ஆண்டுகளுக்கு முன் – அவர்தம் துறவிக்கும் மேலான தொண்டர்களும், இயக்கமும் அதே பாதையில் நடைபோடுவதும், எத்தனை இழிந்த பிரச்சாரத்தையும், இணையற்ற எதிர்ப்பையும் சந்தித்தும் – தணலில் இட்ட தங்கம் போல் தகத்தகாய ஒளிவீச்சுக் கொண்ட பொலிவும், கொள்கை வெற்றிகளின் வலிவும் கொண்டு, நாளும் வளர்ந்து உலகளாவிய இயக்கமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது!
எனவேதான்
‘‘உலகம் பெரியார் மயம்,
பெரியார் உலக மயம்’’
– புரிகிறதா தோழர்களே!