ஸ்டாக்ஹோம், அக்.12- தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் கங்குக்கு (53) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துக்கான நோபல்பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசுஅமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான் ஹாப்ஃபீல்டு, இங்கிலாந்து விஞ்ஞானி ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி டேவிட் பேக்கர், இங்கிலாந்து விஞ்ஞானிகள் டெமிஸ் ஹசாபிஸ், ஜான் எம்ஜம்ப்பர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக் கப்பட்டது. புரோட்டீன் கட்டமைப்பு பற்றிய ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் கங்குக்கு 10.10.2024 அன்று அறிவிக்கப்பட்டது. வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை அம்பலப்படுத்தும் அவரது தீவிரகவித்துவமான உரைநடைக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக ஸ்டாக்ஹோமில் நோபல் கமிட்டி கூறியது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும்தென்கொரியாவின் முதல் எழுத்தாளர் ஹான் கங் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
ஜெனீவா, அக்.12 ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு 2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளது. அணு குண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே 1956 ஆம் ஆண்டு நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அணு ஆயுதங்கள் மூலம் ஏற்படும் பேரழிவு மற்றும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம். இதனை இலக்காக வைத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்பின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அந்நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணு குண்டு விசி அடுத்த ஆண்டுடன் 80 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாசிக்கில் பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னி வீரர்கள் பலி
நாசிக், அக்.12 மகாராட்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி மய்யத்தில் குண்டுகளை வெடிக்க வைக்கும் பயிற்சியில் அக்னிவீரர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குண்டுவெடித்து 2 வீரர்கள் பலியாகினர். 10.10.2024 அன்று மதியம் இந்த விபத்து நடந்ததாகக் காவல்துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், அக்னிவீரர்கள் கோஹில் விஷ்வராஜ் சிங் (20), சைஃபத் ஷிட் (21) என்ற இளைஞர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சி எடுத்தபோது, திடீரென ஒரு குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.