சண்டிகர், அக்.12 அரியானா பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (11.10.2024) கூறியதாவது, அரியானா பேரவைத் தேர் தல் முடிவுகள் மிகவும் எதிர் பாராததாகவும், மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு நேர்மாறாகவும் அமைந்தது. இதுதொடர்பாக ஆலோசிக்க கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். கட்சியின் மறுஆய்வுக்குப் பிறகுதான் உண்மையான காரணங்கள் தெரியவரும். அரியானா தேர்தல் முடிவுகளின் தாக்கம் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் எதிரொலிக்காது என்றார்.
ராஜஸ்தானில் மேனாள் காங்கிரஸ் அரசு எடுத்த முடிவு களை தற்போதைய பாஜக அரசு மறுபரிசீலனை செய்வது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் எங்கள் திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன். இதுபோன்ற திட்டங்களை நிறுத்துவதன் மூலம், அவர்கள் மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள். எனவே அவற்றை நிறுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அரியானா சட்டப் பேரவைக்கு கடந்த 5-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு முடிவுகள் 8-ஆம் தேதி அறிவிக்கப் பட்டன. அதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.