வல்லம், அக். 12- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 10.10.2024 அன்று முப்பெரும் விழா மாணவர் நலன் மற்றும் நிர்வாகப் பிரிவின் ஏற்பாட்டின் கீழ் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாணவர் நலன் மற்றும் நிர்வாகப் பிரிவின் இயக்குநர் முனைவர் சி.வி.சுப்ரமணியம் வரவேற்பு ரையாற்றினார். அவர் தமது உரையில் (Clubs & Societies and Professional bodies) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் கடந்த ஒரு ஆண்டில் 37 நிகழ்ச்சிகள் மூலம் 7,800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெற்றார்கள்.
இதற்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களை பாராட்டிப் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வெ.இராமச்சந்திரன் (Clubs and Societies) அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கான வலைதள பக்கத்தினை தொடங்கிவைத்தார். அவர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நாகாலாந்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர் அமைப்பு பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா “அமைப்புகள் மற்றும் சங்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பல்கலைக்கழக செயற்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்கள் உரையாற்றும் போது அமைப் பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கவுரவித்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
இரண்டாம் ஆண்டு விண்வெளித் துறை மாணவர் முகேஷ்முத்துராமன் மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதினை பெற்ற மைக்கும், ரபிதா (இறுதி ஆண்டு உயிரி தொழில்நுட்பத் துறை) பன்னாட்டு அளவில் கல்வி உதவித்தொகை பெற்று பயிற்சி பெற்றமைக்கும் மாணவி கண்மணி (இறுதியாண்டு மின் தொடர்பு மற்றும் பொறியியல் துறை) பன்னாட்டு அளவில் கராத்தே வாகையர் பட்டம் பெற்றமைக்கும், கார்த்திகேயன் (இறுதியாண்டு உயிரி தொழில்நுட்பத் துறை) 85 கிலோ (மேல்) பிரிவினருக்கான முதல்வர் கோப்பை போட்டியில் சிலம்பாட்டத்தில் முதல் பரிசு மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையினையும் பெற்றமைக்கும் மற்றும் மாணவர் ஜி.அரிகரன் (இரண்டாம் ஆண்டு கட்டடவியல் துறை) 85 கிலோ (கீழ்) பிரிவினருக்கான முதல்வர் கோப்பை போட்டியில் சிலம்பாட்டத்தில் முதல் பரிசினையும் அதற்கான ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையினையும் பெற்ற தற்கு பாராட்டினைப் பெற்றனர்.
இறுதியாக பல்கலைக்கழக மனநல ஆலோசகர்களான லில்லிபுஷ்பம் மற்றும் அலமேலு, அன்புமதி, ராகவி ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து மாணவ மாணவியர்கள் தங்கள் பிரச்சினைகளை அவர்களிடத்தில் கூறி பயனடையுமாறு அறிவுறித்தினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர் அமைப்பின் செய லாளர் அரிகரன் நன்றியுரை கூறினார்.