நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, எல்லோரும் நிற்க அது நிறைவேறியது.
தமது சமஸ்தான நிருவாகத்திற்கு உட்பட்ட எல்லா கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரவேசிக்க உரிமை அளித்த திருவாங்கூர் மகாராஜா அவர்களை இம்மாநாடு பாராட்டுவதுடன், மகாராஜா உரிமை அளித்த பிரகடனத்தில் கண்ட விதிவிலக்குகளையும் எடுத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறது என்ற மற்றொரு தீர்மானம் தலைவரால் கொண்டுவரப்பட்டு நிறைவேறியது.
கட்சி பிரச்சாரத்திற்காக ‘திராவிடனை’ புதுப்பிக்க வேண்டும் அல்லது ‘விடுதலை’ பத்திரிகையை உடனே தினசரி ஆக்க வேண்டும் என்று இம்மாநாடு மூன்று மந்திரிகளையும் கேட்டுக் கொள்வதென அண்ணல் தங்கோவால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. தினசரியின் அவசியத்தை குறித்து அண்ணல் தங்கோ வெகுவாகப் பேசினார்.
வரப்போகும் சீர்திருத்தத்தில் பல குறைபாடுகள் இருந்த போதிலும், நமது கட்சி சட்ட வரம்புக்குட்பட்ட வழியில் ஏற்று குடியேற்ற நாடு அந்தஸ்தைப் பெற முயற்சிக்க வேண்டும் என திரு. பண்டிதர் திருஞானசம்பந்தம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். திரு விஸ்வநாதன் முதலியாரும் கனம் செட்டிநாடு குமாரராஜாவும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்; தீர்மானம் நிறைவேறியது.
ஜஸ்டிஸ் மாநாட்டை ஜனவரி முதல் வாரத்தில் கூட்டும்படி சென்னை தென்னிந்திய நல உரிமைச் சங்க நிருவாகக் கமிட்டியினரை மாநாடு கேட்டுக் கொள்கிறது என டி.பி.கோவிந்தராஜ முதலியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர நிறைவேறியது.
திரு. செ.தெ. நாயகம் சென்னை சட்டசபையில் கொண்டு வரவிருக்கும் வகுப்பு சம்பந்தமான தீர்மானத்தை ஜஸ்டிஸ் கட்சியினர் ஆதரித்து நிறைவேற்றுமாறு தக்கோலம் செல்லப்பா அவர்களால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது.
இந்திய சிவில் சர்வீஸ் உத்தியோகத்திற்கு போட்டிப் பரிட்சை இல்லாமல் யோக்கியதை, திறமை முதலியவற்றை அனுசரித்து நியமனம் செய்ய வேண்டும் என சர்க்காரை மாநாடு கேட்டுக்கொள்கிறது என ஆரணி திரு. சிவராம அருணகிரி செட்டியாரால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது.
வடார்க்காடு ஜில்லா சர்க்கார் உத்தியோகங்களில் ஒரு வகுப்பினரே ஆதிக்கம் வகித்து வருவதை கண்டு மாநாடு வருந்துவதோடு, உடனே அதை மாற்றி எல்லா உறுப்பினருக்கும் சம உரிமை அளிக்கும்படி சர்க்காரை மாநாடு கேட்டுக்கொள்கிறது என திரு. செல்லப்பாவால் மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது.
திரு. எம்.சி. ராஜா இந்திய சட்டசபையில் கொண்டு வரும் தீண்டாமை விலக்கு மசோதாவை நிறைவேற்றி வைக்கும்படி இந்திய சட்டசபை அங்கத்தினர்களையும் கனம் வைஸ்ராயையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது என ஆர்.சுப்பிரமணியம் ஒரு தீர்மானத்தை கொண்டு வர நிறைவேறியது.
சென்னை சட்டசபையில் இனாம் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்த ஜஸ்டிஸ் கட்சி தலைவர் கனம் பொப்பிலி ராஜாவை மாநாடு வாழ்த்துவதுடன், அம்மசோதாவை அங்கீகரித்து சட்டம் ஆக்கிய கவர்னரையும், வைஸ்ராயையும் இம்மாநாடு வாழ்த்துகிறதென பண்டிதர் திருஞானசம்பந்தம் அவர்களால் மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது.
நில வரியைக் குறைக்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்ய வேண்டும் எனவும், கடன் சமரச போர்டு, விவசாய கடன் உதவி சட்டம் இவைகளை வட ஆற்காடு மாவட்டம் அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென திரு. சீனிவாச முதலியாரால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது.
தலைவர் தமது முடிவுரையில் ‘விடுதலை’ சீக்கிரத்தில் தினசரி ஆக்கப்படும் என்றும், கட்சியின் மூலமே இந்தியாவிற்கு சுயராஜ்யம் கிடைக்க கூடும் என்றும் கூறினார்.
செய்திக் கட்டுரையின் ஒரு பகுதி
– ‘விடுதலை’ – 28.11.1936