முதலமைச்சர் உத்தரவுப்படி விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விரைந்தார்!
காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை – மீட்புப் பணி தீவிரம்!
திருவள்ளூர், அக்.12–- திருவள்ளூர் மாவட்டம் – கவரப்பேட்டை ரயில் விபத்து செய்தியறிந்ததும் துரிதமாக சூழ்நிலையை கண்காணிக்கவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அமைச்சர் ஆவடி
சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்க்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தர விட்டார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டதுடன் துரிமாக மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
கருநாடக மாநிலம் மைசூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை நோக்கி பீகார் மாநிலம் தர்பாங்காக்கு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.
கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 10 பெட்டிகள் தரம் புரண்டன இதில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள் தீ பற்றி மள மள என எரிந்தன.இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் ரயில்வே அதிகாரியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்!
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்ட செய்தியறிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெற்கு ரயில்வே அதிகாரியிடம் விபத்து குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று கண்காணிக்க உத்தரவிட்டார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று சூழ்நிலையை கண்காணிக்கவும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரயில் விபத்தில் காயமடைந்த பயனிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு சிறுபான்மை யினர் மற்றும் வெளிநாடு வாழும் நலத்துறை அமைச்சர் ஆவடி சாமு.நாசர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தினை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டு அறிந்து ரயிலில் பயணித்த பயனாளிகளுக்கு உதவி செய்து தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் மீட்பு பணிக்கான பணிகளையும் மேற்கொண்டார்.
படுகாயம் அடைந்தவர்களை கவரப் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சமூக வலைத்தளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத் தளப் பதிவு.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப் பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் சா.மு.நாசர் அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.
மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.
– இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களை துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல்!
ரயில் விபத்தில் காயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்து குறித்து தகவலுக்கு: 044-25330952, 044-25330953, 044-24354995 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.