நவம்பர் மாத துவக்கத்தில் வரவேண்டிய நிதிப் பகிர்வை தொடர் விழாக்களை முன்வைத்து இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் நிதிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடி ரூபாயை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுவித்துள்ளார். இந்த நிதிப்பகிர்வில் ஒட்டுமொத்த தென் இந்தியாவுமே புறக்கணிக்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த தென் இந்திய மாநிலத் திற்கான பங்கீட்டை விட அதிகமாக உத்தரப் பிரதேசத்திற்கு நிர்மலா சீதாராமன் நிதியை வாரி வழங்கியுள்ளார்.
இதில் உத்தரப்பிரதேசத்திற்கு மட்டுமே ரூ.31,962 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் தென் இந்திய மாநிலங் களான ஆந்திராவிற்கு ரூ.7,211 கோடி, கருநாடகாவிற்கு ரூ.6,498 கோடி, கேரளாவிற்கு ரூ.3,430 கோடி, ,தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,735 கோடி என்று கல்வி, தொழில்வளம் மற்றும் உற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் தென் மாநிலங்களுக்கு ரூ.28,152 மட்டுமே வழங்கியுள்ளார். இது உத்தரப்பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டதை விட ரூ.3,810 கோடி குறைவான தொகை ஆகும்.
மாநிலம் வாரியாக நிதி ஒதுக்கீடு பட்டியலை பார்க்கலாம்.
ஆந்திரப் பிரதேசம் ரூ.7,211 கோடி, அருணாச்சல பிரதேசம் ரூ.3,131 கோடி, அசாம் ரூ.5,573 கோடி, பீகார் ரூ.17,921 கோடி, சத்தீஸ்கர் ரூ.6,070 கோடி, கோவா ரூ.688 கோடி, குஜராத் ரூ.6,197 கோடி, அரியானா ரூ.1,947 கோடி, இமாச்சல பிரதேசம் ரூ.1,479 கோடி, ஜார்க்கண்ட் ரூ.5,892 கோடி, கருநாடகா ரூ.6,498 கோடி, கேரளா ரூ.3,430 கோடி, மத்திய பிரதேசம் ரூ.13,987 கோடி, மகாராட்டிரா ரூ.11,255 கோடி, மணிப்பூர் ரூ.1,276 கோடி, மேகாலயா ரூ.1,367 கோடி, மிசோரம் ரூ.891கோடி, நாகாலாந்து ரூ.1,014 கோடி, ஒடிசா ரூ.8,068 கோடி, பஞ்சாப் ரூ.3,220 கோடி, ராஜஸ்தான் ரூ.10,737 கோடி, சிக்கிம் ரூ.691.
அதே நேரத்தில் தென்னிந்திய மாநிலங் களுக்கு ஒன்றிய பிஜேபி அரசால் ஓர வஞ்சனை செய்யப்பட்டுள்ளது.
5 தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட உத்தரப்பிரதேச மாநிலம் ஒன்றுக்கு மட்டும் அதிக நிதி என்றால், இதன் பொருள் என்ன?
மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்றால் – இந்த வேறுபாடு ஏன்? பிஜேபி ஆளும் மாநிலம் என்றால், அது தனி வகை ‘அக்மார்க்’ நெய்யில் பொரிக்கப்பட்ட ஒன்றா?
இது ஒரு வாக்கு வங்கி அரசியல் தானே! பள்ளி மாணவனை நரபலி கொடுக்கும் மாநிலம் என்பதுதான் அதன் தனிச் சிறப்பா?
தலித் மக்கள் வாழும் பகுதிக்கு சாமியார் ஆதித்யநாத் செல்வார் என்றால் அதற்கு முதல் நாள் அதிகாரிகள் படையெடுப்பு நடக்கும்.
எதற்குத் தெரியுமா? தலித் மக்களுக்கு சோப்பு, பவுடர், வாசனைத் திரவியங்கள் அளித்து அவர்களைச் சுத்தப்படுத்திடவே, தலித் என்றால் தீண்டப்படாத மக்கள் மட்டுமல்ல; சுகாதார மற்றவர்கள், குளிக்காதவர்கள் என்ற மனவோட்டம்தான். என்னே ஆணவ அறியாமை?
இவற்றையெல்லாம் ஒரு மாநிலம் செய்தால் அதற்குத் தனி சலுகையும், கொஞ்சலுமா?
பா.ஜ.க. என்றால் பார்ப்பனீய ஜனதாதானே!