கேள்வி: தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்று தமிழக அமைச்சர் உதயநிதி கூறியுள்ளது சரியா?
பதில்: தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று ஈ.வெ.ரா.வை தாண்டி,மீறி, தொடாமல் அரசியல் செய்ய முடியாது. ஆனால், நாகரிகமான தமிழர்கள் செய்யலாமே!
– ‘துக்ளக்’, 16.10.2024, பக்கம் 27
‘துக்ளக்கே’, குருமூர்த்தியே ஒப்புக்கொண்ட உண்மையாயிற்றே!
‘துக்ளக்’ (19.2.2020, பக்கம் 21)அய் நிதானமாகப் புரட்டிப் பாரும் குருமூர்த்தியே!
கேள்வி: ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களின் தனித்தன்மை என்று நீங்கள்தானே ‘நிதானமாக’ இருக்கும்பொழுது எழுதினீர்கள்.
தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவராக வந்த திருவாளர் முருகன், தமிழ்நாட்டில் பெரியாரை விமர்சிக்க வேண்டாம் என்று கூறியபோது, பெரியாரை பா.ஜ.க. புகழக்கூடாது (‘துக்ளக்’, 7.10.2023, பக்கம் 3) என்று ‘துக்ளக்’ எழுதியது இருக்கட்டும்; பி.ஜே.பி. தலைவரே பெரியாரை விமர்சிக்கவேண்டாம் என்று சொல்லவேண்டிய அவசியம் எதைக் காட்டுகிறது?
1971 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திராவிடர் கழகம் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் இராமனை தி.க.வினர் செருப்பால் அடித்துவிட்டனர் – அய்யகோ, இந்த தி.க. ஆதரிக்கின்ற தி.மு.க.வுக்கா வாக்கு என்று ‘துக்ளக்’ கட்டுரைகளாகவும், கார்ட்டூன்களாகவும், கேள்வி – பதில்களாகவும் வரிந்து தள்ளியதே! முடிவு என்ன? இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெற்றிராத அளவுக்கு 184 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது – எதைக் காட்டுகிறது?
ஆச்சாரியாரும், காமராசரும் கூட்டணி வைத்து 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டும், வெற்றி பெற்றது யார்?
அந்தத் தேர்தலில் ‘தினமணி’ அய்யப்பனையும், இந்துக் கடவுள்களையும் படம் போட்டு, கைகூப்பி கும்பிட்டு, தி.மு.க. தோற்கவேண்டும்! என்று நாள்தோறும் பிரார்த்தனை செய்தும், தந்தை பெரியார் ஆதரித்த தி.மு.க.தானே இமாலய வெற்றி பெற்றது!
‘துக்ளக்கே’ நீர் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி யாரும் அரசியல் செய்ய முடியாது என்பது பாறாங்கல் போன்ற கெட்டியான உண்மைதான்.
பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஓடியும், அவரின் சிலைகள் உங்களை உறுத்துகிறதே – புரட்டி எடுக்கிறதே – இது எதைக் காட்டுகிறது? அறிவு நாணயம் இருந்தால், உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும்.
– மயிலாடன்