கேள்வி 1: உடல் உழைப்புப் பணிக்காக குவியும் வடநாட்டுக்காரர்களையும், தமிழர் வணிகத்தை கைப்பற்றும் வடவர்களையும் ஒரே நிலையில் வைக்க முடியுமா?
– கோ.பாண்டியன், ஆண்டிமடம்
பதில் 1: நல்ல கேள்வி இது. உடல் உழைப்புப் பணியாளர்களாக வரும் தொழிலாளர்களால் தமிழ்நாடு வளருகிறது. நம்மைச் ‘சுரண்ட’ அவர்கள் வரவில்லை; தானும் வாழ்ந்து, நம்மையும் வாழவைக்கவே தொழிலாளர்களாக அவர்கள் வந்து உதவுகிறார்கள்.
சில கொள்ளை – திருட்டு, தகாத நடவடிக் கைக்காரர்களும் அந்தப் போர்வையில் வருவதைக் கண்காணிக்க வேண்டியது இன்றியமையாதது.
தமிழ்நாடு வணிகத்தையே கைப்பற்ற, தமிழ்நாட்டு வணிகர்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சிடும் நிலை – ஏற்கத்தக்கதல்ல. இரண்டும் வெவ்வேறான அணுகுமுறைகளால் அளக்கப்பட வேண்டிய ஒன்றாகும்!
– – – – –
கேள்வி 2: ஆயுதங்கள் எதையுமே கண்டுபிடிக்காதவர்கள் “ஆயுத பூஜை” கொண்டாடுகிறார்களே?
– கார்த்திகேயன், பருத்திப்பட்டு
பதில் 2: ‘பிறர் செய்த ஆயுதங்க’களுக்கு பூஜை என்ற பெயரில் இப்படிப்பட்ட விழாக்களைக் கண்டுபிடிப்பதுதான் இவர்கள் வேலை.
ஆனால், வெற்றுப் பீத்தலில் ‘முன்பே எங்களிடம் ஏவுகணை இருந்தது’ என்பது போன்ற மூடநம்பிக்கைளைக் பரப்புதல் போன்ற ஜம்பம் மட்டுமே நம்மிடம் குறைவில்லாமல் இருக்கிறதே!
– – – – –
கேள்வி 3: சமூக வலைதளங்களில் இன உணர்வைக் காட்டும் இளைஞர்கள் நேரடியாக இயக்கங்களில் களப்பணியாற்றத் தயங்குவதேன்?
– இளமாறன், பெரம்பலூர்
பதில் 3: எல்லோரிடமும் இதை எதிர்பார்க்க முடியாது; இந்த அளவுக்காவது முன்வருகிறார்களே – அதுவே நமக்கு இலாபம்தானே! சுயநலத்தின் அளவில் பல ‘டிகிரி’ – சதவிகித அளவீடு மாறி மாறித் தெரியும்.
– – – – –
கேள்வி 4: அரியானா தேர்தல் பாணியில் இனி பாஜகவிற்கு எல்லா மாநிலத்திலும் வெற்றி வாகை தேடி வரும் என்கிறார்களே பாஜகவினர்?
– வெற்றிமணி, நுங்கம்பாக்கம்
பதில் 4: அதுதான் கடந்த பல ஆணடுகளாக நாடறிந்த ரகசியமாயிற்றே!
– – – – –
கேள்வி 5: மேலைநாடுகளில் தேர்தல் கருத்துக் கணிப்பிற்கும் இந்தியாவில் தேர்தல் கருத்துக் கணிப்பிற்கும் என்ன வேறுபாடு?
– க.செம்மொழி, மதுரை
பதில் 5: மேலை நாடுகளில் குறைந்த அளவுக்கு விருப்பு – வெறுப்புக்கான சதவிகித அளவும் மாறும். அதில் உண்மை நிலவரம் அதிகம்; இங்கே அது குறைவு. பெரும்பாலும் கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பே இடம் பெறும் என்பதே கசப்பான உண்மை!
– – – – –
கேள்வி 6: துணை முதலமைச்சர் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் பொருத்தமானவரா?
– சாக்கியன், வேலூர்
பதில் 6: எல்லா வகையிலும் 100க்கு 100 சதவிகிதம் பொருத்தமானவர் மட்டுமல்ல; மக்கள் மகிழத்தக்க வகையில் செயல்பட உறுதி பூண்டுள்ளார்.
காமாலைக் கண்ணன்களுக்கு இது புரிந்தும், ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். விட்டுத் தள்ளுங்கள்!
– – – – –
கேள்வி 7: ஜம்மு – காஷ்மீர் அரசை நிம்மதியாக ஆள விடுவார்களா?
– ரவிமதியன், தஞ்சை
பதில் 7: தமிழ்நாட்டைப் படுத்தும் பாடு அங்கும் நடக்கக் கூடும்! அரசியல் நிதி கொடுக்க, குத்தல் குடைச்சல் மூலம் நித்தம் நித்தம் தொல்லைகள் தொடரக் கூடும்! பொறுத்திருந்து பார்ப்போம்.
– – – – –
கேள்வி 8: சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களின் வேலை நிறுத்தம் – தமிழ்நாடு அரசின் தலையீடு எவ்விதமிருக்கும்?
– த.மன்னன், நெல்லை
பதில் 8: நமது முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு இதை சுமூகமாக முடித்து பாஸ் – பாஸ் முடிவை ஏற்படுத்த வேண்டும். ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம்.
– – – – –
கேள்வி 9: கூட்டணிக் கட்சிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு காங்கிரசுக்கு அறிவுரை கூறுகிறாரே மோடி?
– கே.விக்னேஸ்வரன், திருச்சி
பதில் 9: மோடி வித்தைகள் மிகச் சிறப்பானவை ஆயிற்றே! அது போன்றதே இது!