ஷைலஜா பாயிக்: இந்தியாவின் குடிசையில் இருந்து அமெரிக்க பேராசிரியையான முதல் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் – சாதித்தது எப்படி?
“நாங்கள் வசித்த பகுதியில் தண்ணீர் வசதி இருக்காது. கழிப்பறைகள்கூட இல்லை. எங்கள் குடியிருப்புகளைச் சுற்றி குப்பை மேடுகள் சூழ்ந்திருக்கும். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய அந்தக் காலகட்டத்தைப் பற்றிய நினைவுகள் இன்னமும் என்னை நிலைகுலைய வைக்கிறது.”
‘கழிப்பறை வசதிகூட இல்லாமல் இருந்த நகர்புற குடிசைப் பகுதியில் இருந்து அமெரிக்காவில் பேராசிரியராக’ பணியில் அமர்ந்தார் ஷைலஜா பாயிக். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. தற்போது மதிப்புமிக்க ‘மேக்ஆர்தர்’ (‘MacArthur’) ஃபெல்லோசிப் ஆதரவு ஊதியத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 8 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 71 லட்சம்) நிதியை அய்ந்து ஆண்டுகளுக்கு வெவ்வேறு கட்டங்களில் பெறுவார்கள்.
இதைப் பெறும் முதல் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஷைலஜா பாயிக் தனது ஆராய்ச்சியின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் வாழ்க்கையை முழுமையாக விளக்கியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் வரலாற்றுப் பங்களிப்புகள் மற்றும் அவர்களின் அதிகரித்து வரும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றைப் பதிவு செய்த புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியராக ஷைலஜா பாயிக் கருதப்படுகிறார்.
‘ஜான் டி. மற்றும் கேத்தரின் டி. மேக்ஆர்தர்’ அறக் கட்டளையால் ஒவ்வோர் ஆண்டும், மேக்ஆர்தர் ஃபெல்லோசிப் / ‘ஜீனியஸ் கிராண்ட்’ பெல்லோசிப் அமெரிக் காவில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20 முதல் 30 படைப்பாளிகள் மற்றும் வல்லுநர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டும், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக வியலாளர்கள், ஆசிரியர்கள், ஊடகப் பணியாளர்கள், தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கு இந்த ஃபெல்லோசிப் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஷைலஜா பாயிக்கும் ஒருவர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ஃபெலோசிப்பை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன்” என்று கூறினார். மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகராட்சியில் இருக்கும் எரவாடா (Yerawada) பகுதியைச் சேர்ந்தவர் ஷைலஜா பாயிக்.
அவர் எரவாடாவின் குடிசைப் பகுதியில் தனது மூன்று சகோதரிகளுடன் ஒரு சிறிய வீட்டில் வளர்ந்தார். தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி பேசிய அவர், “எங்கள் வீட்டில் தண்ணீர் வசதி இல்லை, கழிப்பறை இல்லை. குப்பை மேடுகளில் பன்றிகள் சுற்றித் திரியும். இப்படிப்பட்ட குப்பை மேடுகள் சூழ்ந்த பகுதியில்தான் நான் வளர்ந்தேன். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய அந்தக் கோர நாட்களை மறக்கவே முடியாது.”
“எங்கள் பகுதியில் ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வரும் தண்ணீரை சமையல், குளிப்பது போன்ற வழக்கமான பணிகளுக்குப் பயன்படுத்துவோம்.” இந்தத் தண்ணீருக்காக அவர்கள் நீண்ட வரிசையில் சென்று தண்ணீர் எடுக்க வேண்டியிருந்தது என்பதையும் அவர் நினைவு கூர்கிறார்.
இருந்த போதிலும் ஷைலஜா, “தனது எதிர்காலத்தைப் பிரகாசமாக்க ஆங்கில வழியில் கல்வி கற்க மிகவும் சாதகமான சூழலை அவரின் தந்தை தேவ்ராம் மற்றும் தாயார் சரிதா ஏற்படுத்திக் கொடுத்ததாக” கூறுகிறார்.
“நான் வாழ்ந்த சமூகச் சூழல், எனது கல்வி, உணர்வு மற்றும் மனரீதியாக என அனைத்து நிலைகளிலும் நிச்சயமாக ஆழமான விளைவை ஏற்படுத்துகின்றன. இவ்வளவு கடினமான வாழ்க்கையை வாழ்ந்து, எரவாடா போன்ற பகுதியில், பல வசதிகள் மற்றும் சலுகைகள் இல்லாமல், இந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியே கல்வி பெறுவது எவ்வளவு முக்கியம்.”
அதை உணர்ந்த அவரது பெற்றோர், அவரை ஊக்கப்படுத்தியதாகவும், அதனால்தான் படிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிந்ததாகவும் ஷைலஜா தெரிவித்தார்.
அன்றைய நினைவுகளை நினைவுகூர்ந்த அவர், “சிறிய வீட்டில் போர்வைகளைப் போர்த்தி கொண்டு, குடும்பத்தினரை அமைதியாக இருக்கச் சொல்லி, படிப்பேன். படிக்கும் சூழல் அங்கு இல்லை என்ற போதிலும், நானாக அந்தச் சூழலை உருவாக்கி கொண்டேன்.”
“உண்மையில் இப்படிப்பட்ட சூழலில் படிப்பது பெரிய சவாலாக இருந்தது. மாலை 7:30 மணிக்கு தூங்கி நள்ளிரவு 2-3 மணிக்கு எழுந்திருப்பேன். காலை 6-7 வரை படிப்பேன். அதன் பின்னர் பள்ளிக்குப் போவேன்” என்று விவரித்தார்.
தனது போராட்டத்தைப் பற்றி மேலும் பேசிய அவர், “ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் என்பதால், என் வாழ்க்கையில் பல தருணங்களில் பாரபட்சம் காட்டப்பட்டது. அந்த வலிகளை அனுபவித்திருக்கிறேன்.
உதாரணமாக, நான் ‘ஃபோர்ட் ஃபவுண்டேஷன் ஃபெல்லோசிப்’ பெற்றபோது, என்னைச் சுற்றியுள்ள சிலரால் அதை நம்ப முடியவில்லை. ‘உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?’ என்று அவர்கள் என்னிடம் அடிக்கடி கேட்டார்கள்.”
தனக்குக் கிடைத்த ஆதரவுத் தொகை என் பணிக்காகக் கிடைத்தது என்றும், ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் என்பதால் கிடைத்த தொகை என்று அவர்கள் நினைத்ததாகவும் ஷைலஜா கூறுகிறார்.
‘ஜீனியஸ் கிராண்ட்’ (Genius Grant’) எனப்படும் இந்த ஃபெல்லோசிப் இந்த ஆண்டு 22 பேருக்கு வழங்கப் பட்டுள்ளது.
‘படைப்பாற்றல்’ என்பதே மேக்ஆர்தர் ஃபெல்லோசிப்பின் அடிப்படை அளவுகோல். இந்த பெல்லோசிப்பின் நோக்கம் புதுமையான யோசனைகளுடன் வளர்ந்து வரும் ஆய்வாளர்களின் பணிகளில் முதலீடு செய்வது, ஊக்குவிப்பது மற்றும் ஆதரவளிப்பதாகும்.
இந்த பெல்லோசிப்பை வழங்குவதன் முக்கியக் குறிக்கோள், கடினமான சூழலை அனுபவித்து சாதிக்கத் துடிக்கும் ஆய்வாளர்களுக்கு வாய்ப்புகளைப் வழங்கி முன்னிலைப்படுத்துவதுதான். சமூகப் பிரச்னைகளைச் சமாளித்து, புதுமையான மற்றும் ஊக்கமளிக்கும் விடயங்களை உருவாக்க ஆக்கப்பூர்வமாகவும் கற்பனை யாகவும் சிந்திக்க அவர்களை ஊக்குவிப்பார்கள்.
இந்த ஃபெல்லோசிப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அய்ந்து ஆண்டுகளுக்கு 8 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6 கோடியே 71 லட்சம்) பெறுவார்கள்.
இது பற்றிப் பேசுகையில், “தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதவர்களுக்கான ஜாதிய வேறுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை இந்த ஃபெல்லோசிப் வலுப்படுத்தும்” என்று தான் நம்புவதாகக் கூறினார் ஷைலஜா.
இந்த ஃபெல்லோசிப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர் ஷ்ரத்தா கும்போஜ்கர் கூறுகையில், “இந்த ஃபெல்லோசிப் அதிக நிபந்தனைகள் அற்றது” என்று கூறினார். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த ஃபெல்லோசிப்பிற்கு ஈடாக சிறப்பாக அல்லது வேறு பட்ட எதையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுவதில்லை. இது குறிப்பிடத்தக்கது” என்றார்.
“இந்திய மதிப்பில் இந்த ஃபெல்லோசிப்பின் தொகையும் மிகப் பெரியது. திறமையானவர்களுக்கு முதலீடு செய்யும் நோக்கில் மேக்ஆர்தர் அறக்கட்டளை இந்த ஃபெல்லோஷிப்பை வழங்குகிறது” என்கிறார் கும்போஜ்கர்.
இந்த ஃபெல்லோசிப்பிற்கு விண்ணப்பம் அல்லது நேர்காணல் செயல்முறைகள் எதுவும் இல்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட அறிவார்ந்த மற்றும் நம்பிக்கைக்குரிய நபர்கள் இந்த ஆதரவு ஊதியத் தொகையைப் பெறுகிறார்கள்.
ஷைலஜா பாயிக்கின் ஆய்வு நவீன இந்தியாவில் ஜாதி, பாலினம் மற்றும் பாலுறவு ஆகியவற்றை தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் வாழ்க்கையை மய்யப்படுத்தி ஆராய்கிறது.
அவர் தனது ஒட்டுமொத்த ஆய்வைப் பற்றிப் பேசுகையில், “இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 17 சதவீதம் உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் கல்விக்காக அதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை நான் கவனித்தேன்.
புள்ளிவிவரங்கள் உள்ளன, ஆனால் சரியான நிலைமை குறித்து தரமான ஆராய்ச்சி எதுவும் இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் சரித்திரத்தை யாரும் சரியாக எழுதாததால், அந்த வேலையை நான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.”
“வரலாற்று ரீதியாக இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு கல்வி, பொது உள்கட்டமைப்பு, பொது நீர்நிலைகள் அனுமதிக்கப்படவில்லை. செருப்புகள் அல்லது புதிய ஆடைகளை அணிவதுகூட அனுமதிக்கப்படவில்லை. ஒருவரால் வாங்க முடிந்தாலும்கூட அவற்றை அணியக் கூடாது என்னும் ஒடுக்குமுறை இருந்தது.”
“தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள். ‘தாழ்த்தப்பட்ட வர்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள்தான் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள். ஏனெனில், பாலினம் மற்றும் அரசியலின் கண்ணோட்டத்தில் அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.”
மேலும், “இது நான் வளர்ந்த சமூகம். அதனால்தான் கடந்த 25 ஆண்டுகளாக எனது ஆய்வு, ஆராய்ச்சி, எழுத்து அனைத்துமே அதை மய்யமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார். ஷைலஜா பாயிக் ஒரு நவீன வரலாற்றாசிரியர். அவர் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் வாழ்க்கையை ஜாதி, பாலினம் ஆகியவற்றின் மூலம் ஆய்வு செய்கிறார்.
ஜாதி ஆதிக்க வரலாற்றில் புதிய கண்ணோட்டத்தைத் தனது ஆய்வின் மூலம் வழங்கியுள்ளார் பாயிக். அதனுடன், பாலினம் மற்றும் பாலுணர்வு எவ்வாறு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் சுயமரியாதை மற்றும் அவர்களின் ஆளுமையின் ஒட்டுமொத்த சுரண்டலை பாதித்துள்ளது என்பதையும் தனது எழுத்துகளின் மூலம் அவர் விவாதித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களின் நிலை குறித்து அவரது எழுத்துகள் அனைத்திலும் மய்யப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி மொழிகளில் இலக்கியம் மட்டுமின்றி, சமகால தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் களுடனான நேர்காணல்களையும் அவர்களின் அனுபவங் களையும் இணைத்து இன்றைய சூழலில் ஒரு புதிய பார்வையை உருவாக்கியுள்ளார்.
‘Dalit Women’s Education in Modern India : Double Discrimination’ (2014) மற்றும் ‘The Vulgarity of Caste: Dalits, Sexuality and Humanity in Modern India’ ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். முதல் புத்தகத்தில் மகாராட் டிராவின் நகர்ப்புறங்களில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் கல்விக்காக நடத்திய போராட்டத்தை ஆங்கிலேயர் காலத்துச் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுள்ளார்.
தற்போது ஷைலஜா 2010ஆம் ஆண்டு முதல் சின்சினாட்டி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். அங்கு அவர் ‘பெண்கள், பாலினம், பாலியல் சார்ந்த ஆய்வுகள் மற்றும் ஆசியாவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளின்’ ஆய்வுப் பேராசிரியராக உள்ளார்.
கீழ்நிலை நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த ஷைலஜா வரலாறு பாடத்தில் எம்.ஏ. பட்டப் படிப்பை முடித்தார். 1994-1996இல் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் படித்தார். கடந்த 2000ஆம் ஆண்டில், எம்.ஃபில் படிப்பிற்காக வெளிநாடு செல்ல இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) ஃபெல்லோசிப்பை பெற்றார். பின்னர் அவர் பிரிட்டன் சென்றார். அதன் பிறகு மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இதுவரை அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிக்கு, அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் லேர்ன்டு சொசைட்டி, ஸ்டான்ஃபோர்ட் மனிதநேய மய்யம், மனிதநேயத்திற்கான தேசிய அறக்கட்டளை, அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் ஸ்டடீஸ், யேல் பல்கலைக்கழகம், எமோரி பல்கலைக்கழகம், ஃபோர்டு அறக்கட்டளை, சார்லஸ் ஃபெல்ப்ஸ் டாஃப்ட் ஆராய்ச்சி மய்யம் ஆகியவற்றில் இருந்து நிதியுதவிகளைப் பெற்றுள்ளார்.
பிரிட்டனின் வார்விக் பல்கலைக்கழகத்தில் 2007இல் முனைவர் பட்டம் பெற்றார். யூனியன் கல்லூரியில் (2008-2010) விசிட்டிங் வரலாற்று உதவிப் பேராசிரியராகவும், யேல் பல்கலைக்கழகத்தில் (2012-2013) தெற்காசிய வரலாற்றின் போஸ்ட்-டாக்டோரல் அசோசியேட் மற்றும் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
– நன்றி: பிபிசி