தொல்லியல் ஆய்வுக் கழகத்தினுடைய கருத்தரங்கத்திலும், தேசிய கருத்தரங்கத்திலும்
ஜான் மார்ஷல் பேசப்படவில்லை! சிந்துவெளிப் பண்பாட்டினுடைய உன்னதம் கொண்டாடப்படவில்லை
ஏன் கொண்டாடவில்லை என்பதிலேயே நாம் கொண்டாடுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியும்!
பயணங்களால் கட்டமைக்கப்பட்டதே மனிதனின் வரலாறு!
சென்னை, அக்.11 ஜான் மார்ஷலை இந்த நாடு கொண்டா டவில்லை. இந்த நாட்டில் யாராலும், தொல்லியல் ஆய்வுக் கழகத்தினுடைய கருத்தரங்கத்திலும், தேசிய கருத்தரங்கத்திலும் ஜான் மார்ஷல் பேசப்படவில்லை. சிந்துவெளிப் பண்பாட்டினுடைய உன்னதம் கொண்டாடப்படவில்லை. அதனால்தான் நாம் கொண்டாடுகிறோம். அதை ஏன் கொண்டாடவில்லை என்பதிலேயே நாம் கொண்டாடுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியும். இதைப் புரிந்துகொண்டதால்தான் தொடர்ந்து நாங்கள் இயங்கி வருகிறோம். பயணங்களால் கட்டமைக்கப்பட்டதே மனிதனின் வரலாறு. மனிதனின் வரலாறு என்பது ஒருவகையில் பயணங்களின் கூட்டுத் தொகை. என்றார் ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும், மதியுரைஞருமான பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள்.
சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு தொடக்க விழா!
கடந்த 24.9.2024 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழாவில், ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும், மதியுரைஞருமான பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
தந்தை பெரியாரின் உரையை என்னுடைய
12 வயதில் கேட்டிருக்கிறேன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்ளிட்ட இந்த ஆன்றோர் சபைக்கும், உங்கள் அனை வரையும் வணங்கி என்னுரையைத் தொடங்குகின்றேன்.
இந்த நிகழ்வு, இந்த இடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறுவது என்பது மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
என்னுடைய 12 வயதில், மதுரை தல்லாகுளம் அருகே இருந்த நூலகத்தில், தந்தை பெரியாரின் உரையைக் கேட்பதற்காக, இரண்டு வகுப்புகளைத் தவறவிட்டு, மீண்டும் வகுப்பிற்குச் சென்றபொழுது, ‘‘யாரடா பெரியார்? யாரடா பெரியார்?” என்று ஆசிரியரிடம் வாங்கிய அடி, இன்றும் வலிக்கிறது என்று அண்மையில்கூட எழுதியிருந்தேன்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம்!
அப்பொழுது தொடங்கிய அந்தப் பயணம், பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் என்று தொடர்ந்து அந்தத் தொடர்புகளால் வளர்ந்து, இப்பொழுது இந்த மேடையில், முதன்முதலாக பல்வேறு பல்கலைக் கழகங்களில் ‘மதிப்புறு முனைவர்’ பட்டத்தை மறுத்துவிட்டு, இறுதியில், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அந்தப் பட்டத்தை வாங்கிக் கொண்டவன் என்ற முறையிலும், இதே திடலில், ஆசிரியர் தலைமையில், எனது கருத்தியலை எடுத்து வைத்துச் சென்றவன் என்ற முறையிலும், இன்று இந்த அழைப்பிதழில், ‘மானமிகு ஆர்.பாலகிருஷ்ணன்’ என்ற பெயரைப் பார்த்து, எங்கள் வீட்டில் இதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
இதைவிட வேறு என்ன மகுடம் கிடைத்துவிடப் போகிறது?
மிக முக்கியமான ஓர் அடையாளம்!
2018 ஆம் ஆண்டு, ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இருக்கும் சிந்துவெளி ஆய்வு மய்யத்தின் மதிப்புறு ஆலோசகர் என்ற முறையில், ‘‘தானைத்தடம்” என்ற பெயரில், ஓர் ஆங்கில உரையை, அய்ராவதம் மகாதேவன் முன்னிலையில் நிகழ்த்தி, அப்பொழுது நாங்கள் இதற்குப் பெயரிட்டோம்; செப்டம்பர் 20 ஆம் நாள், சிந்துவெளி பண்பாடுபற்றிய அறிவிப்பைக் கொண்டாடும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் 2018, 2019, 2020 ஆம் ஆண்டு என்று தொடர்ந்து நிகழ்த்தி வந்து, இப்போது 2024 ஆம் ஆண்டில், இதனை நூற்றாண்டு விழாவாக, தமிழ்நாடு அரசு அறிவித்து, சர்.ஜான் மார்ஷல் அவர்களுக்கு சிலை எழுப்புவதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, இந்த நூற்றாண்டு விழாவை பெரியார் திடலில் கொண்டாடுகிறோம் என்பதுதான் இதனுடைய மிக முக்கியமான ஓர் அடையாளமாகும்.
இதனை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?
சில நேரங்களில், ஓர் இருப்பினுடைய இன்றியமை யாமை – முக்கியத்துவம், அது இல்லை என்றால், எப்படி இருக்கும் என்கிற புரிதலில்தான் அடங்கியிருக்கும்.
‘‘திருவள்ளுவர் சிலை இல்லாத கன்னியாகுமரியை கற்பனை செய்து பாருங்கள்!’’
அதை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்றால், நான் அடிக்கடி என்னுடைய உரைகளில் சொல்வேன், ‘‘திருவள்ளுவர் சிலை இல்லாத கன்னியாகுமரியை கற்பனை செய்து பாருங்கள்” என்று.
அதைப்போன்றதுதான், ஜான் மார்ஷலின் அறிக்கை இல்லாத இந்திய வரலாறு.
அந்த வெற்றிடம் – அது என்னவாக இருந்தி ருக்கும் என்கின்ற புரிதல் இருந்தால்தான், அதனு டைய இன்றியமையாமை தெரியும்.
அதாவது, நிழலின் அருமை வெயிலில் தெரி யும் என்பதுபோல, அப்படிப்பட்ட ஒரு மாற்றம்.
ஜான் மார்ஷல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னால், அந்த அறிக்கை வெளிவருவதற்கு முன்னால், இந்த வரலாறு, வேதத்தில் தொடங்கியதாக நம்பிக் கொண்டிருந்தார்கள் என்ற கருத்தை இங்கே வைத்தார்கள்.
ஜான் மார்ஷல் எப்படி வந்தார் என்பதைப்பற்றியும், எனக்கு முன் உரையாற்றியவர்கள் தொட்டுச் சென்றார்கள். யார் வருவதாக இருந்தது? யார் வந்தார்கள்? என்பதையும் தொட்டுச் சென்றார்கள்.
அந்தப் பின்னணியைக் கொஞ்சம் வலுவாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
ஜான் மார்ஷல் இந்தியாவிற்கு வரும்பொழுது அவருக்கு வயது 26
ஜான் மார்ஷல் இந்தியாவில் வந்து இறங்கியபொழுது, அவருக்கு வயது 26. அவர் இந்தியாவிற்குக் கப்பல் ஏறிய பொழுது, அவருக்குத் திருமணமாகி 26 நாள்கள். மார்ஷல் – சுவாரன்ஸ் திருமணம் நடந்த தேதி 11.1.1902. அவர் கப்பல் ஏறிய நாள், பிப்ரவரி 6, 1902.
இதற்குக் காரணம், கர்சன் பிரபு.
ஜெர்மானியர்கள், பிரான்ஸ் போன்ற நாட்டைச் சேர்ந்த அய்ரோப்பியர்கள் இங்கே அடுத்தடுத்து வந்து, பல்வகையான தொல்பொருள் தலங்களுக்குச் சென்று, காசுகளைச் சேகரிப்பது, தொல்பொருள் சின்னங்களை சேகரிப்பது – அதைக் கொண்டு அருங்காட்சியகத்தில் வைப்பது; சில நேரங்களில், ஏலத்தில் விடுகிறார்கள். இதையெல்லாம் கர்சன் பிரபு உணர்ந்தார்.
அகழாய்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்டது
61 ஆயிரத்து 119 பவுண்ட்தான்
அதனால், கிட்டதட்ட அகழாய்வுத் துறையை மூடிவிடலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், இந்தத் துறைக்கு ஒரு தலைவர் தேவையா? என்றும் நினைத்தார்கள். அவ்வளவு பெரிய பட்ஜெட் இருந்த இந்தியாவில், இந்திய அரசின் பட்ஜெட் 1895 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் இந்தியாவின் பட்ஜெட் 35 மில்லியன் பவுண்ட்தான்.அதில், அகழாய்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்டது 61 ஆயிரத்து 119 பவுண்ட்தான்.
நம்முடைய அலெக்சாண்டர் ரியோ, ஆதிச்ச நல்லூரைத் தோண்டினார்கள் அல்லவா, அதற்குக் காரணமாக இருந்தவர் ஜான் மார்ஷல்தான்.
அவர், சர்வேயராக இருந்து, சூப்பிரண்டென்ட்டாக நியமிக்கும்பொழுது அவருடைய குறைந்தபட்சம் ஊதியம் 350. அதிகபட்சம் 500 என்கிற அளவில்தான் இருந்தார்.
அலெக்சாண்டர் ரியோ தோண்டியதுதான் ஆதிச்சநல்லூர்
ஊதிய உயர்வு கிடைக்கவில்லை; ஆனால், பதவி உயர்வு கிடைக்கப் பெற்றது. அலெக்சாண்டர் ரியோ தோண்டியதுதான் இந்த ஆதிச்சநல்லூர்.
அப்படியென்றால், அந்தப் பதவியை நிரப்ப வேண்டும் என்று கர்சன் பிரபு முடிவு செய்த பிறகு, அவர் இந்தியாவினுடைய செகரெட்டரியாக இருக்கக்கூடியவர் ஒருவர் லண்டனில் இருப்பார். அவருக்குக் கடிதம் எழுதி, அவரை ஒப்புக்கொள்ள வைக்கிறார். அவர் ஒப்புக்கொண்ட பிறகு, ‘‘சரி, உங்களு டைய பரிந்துரையை ஏற்றுக்கொள்கிறோம்; இந்தப் பதவியை நிரப்புகிறோம் என்று சொல்லிவிட்டு, அதோடு, இன்னாரைப் போட்டு விடுங்கள்” என்று ஒரு பெயரையும் பரிந்துரை செய்தார். அவர் பரிந்துரை செய்த பெயர் வின்ஸ்டன் ஸ்மித்.
நான் எப்படி அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று வந்திருக்கின்றேனோ, அதுபோல, இந்தியன் சிவில் சர்வீசில் இருந்தவர். சமஸ்கிருதத்தில் விற்பன்னர் அவர். அவர் விருப்ப ஓய்வு பெற்று, அங்கே போய் அவர் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.
வின்ஸ்டன் ஸ்மித்தின் பெயர் பரிந்துரை!
அவரிடம், சார்லஸ் லியால் என்பவர், ஹாமில்டன் என்று சொல்லப்படுகின்ற செகரட்டரியிடம், ‘‘இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் வின்ஸ்டன் ஸ்மித்தான்” என்று சொல்லி, அவர் பெயரைப் பரிந்துரை செய்கிறார்.
அந்தப் பதவியை நிரப்பிவிடுவோம் என்று கர்சன் பிரபுவுக்குக் கடிதம் எழுதி, வின்ஸ்டன் ஸ்மித்தை நியமியுங்கள் என்று எழுதியிருந்தார்.
வின்ஸ்டன் ஸ்மித்திடம் இதுகுறித்த தகவலைச் சொல்லிவிடுகிறார்கள். அவரும் சரியென்று சொல்லி, சில நிபந்தனைகளை விதிக்கிறார்.
வின்ஸ்டன் ஸ்மித் விதித்த நிபந்தனைகள்!
நான் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊருக்குப் போவேன்; நான்கு மாதங்கள் விடுமுறை வேண்டும். 1904 ஆம் ஆண்டில் மீண்டும் வருவேன், நான்கு மாதத்திலிருந்து, ஆறு மாதங்கள் வரை விடுமுறை வேண்டும்” என்று முன்நிபந்தனையைப் போடுகிறார்.
ஏனென்றால், அவரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று அவரே முடிவு செய்துவிடுகிறார்.
ஆனால், கர்சன் பிரவு மிகவும் வித்தியாசமானவர். அவர் சிலரிடம் வின்ஸ்டன் ஸ்மித்தைப்பற்றி கருத்துக் கேட்கிறார்.
அப்படி கருத்து கேட்கும்பொழுது ஒருவர் சொல்கி றார், ‘‘அவரை தேர்ந்தெடுத்து விடாதீர்கள். அவர் இந்த வேலைக்குச் சரியாக வரமாட்டார்” என்று.
ஹாமில்டனுக்கு, கர்சன் பிரபு எழுதிய கடிதம்!
உடனே கர்சன் பிரபு, ஹாமில்டனுக்குக் கடிதம் எழுதுகிறார், From careful enquiries we are clear back Winston Smith is not suitable.
இந்த வின்ஸ்டன் ஸ்மித்தைப்பற்றி நீங்களெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், அவர் இந்திய வரலாறு என்று புத்தகத்தை 1931 ஆம் ஆண்டில் எழுதியிருக்கிறார். 1904 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூரைத் தோண்டியாகிவிட்டது; சிந்துவெளியையும் தோண்டியாகிவிட்டது. அதற்குப் பிறகும்கூட தென்னிந்திய வரலாறுக்கோ, இந்திய வரலாறுக்கோ எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கப்படாமல், இந்திய வரலாறு எழுதப்படுகிறது என்று, தமிழ்நாட்டி லிருந்து வின்ஸ்டன் ஸ்மித்திற்கு ஒரு கடிதம் போகிறது.
அப்படியெல்லாம் எழுதுவதற்கு வாய்ப்பில்லை: வின்ஸ்டன் ஸ்மித்
அந்தக் கடிதத்தை எழுதியவர் சுந்தரம் பிள்ளை. அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு, வின்ஸ்டன் ஸ்மித், தன்னுடைய புத்தகத்தில் முன்னுரையில் சொல்கிறார், ‘‘தென்னிந்தியப் பகுதியிலிருந்து ஒரு வரலாற்று ஆய்வாளர், தமிழ்மீது ஆர்வமுள்ள ஒருவர், இந்த வரலாறை தென்னிந்தியாவின் பார்வையில் எழுதவேண்டும் என்று சொல்கிறார். ஆனாலும், இப்பொழுது இருக்கும் தரவுகளில், அப்படியெல்லாம் எழுதுவதற்கு வாய்ப்பில்லை” என்று எழுதுகிறார்.
கிட்டத்தட்ட ஏற்கெனவே முடிவுக்கு வந்த ஒருவரை அந்தப் பொறுப்புக்கு நியமித்தால் என்னாகும்?
கர்சன் பிரபு, அந்தப் பொறுப்புக்கு யார் வரவேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தார். யார் வரக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார்.
யார் வரக்கூடாது என்று அவர் தெளிவாகச் சொல்கிறார், ‘‘பன்னாட்டிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்து, தொல்பொருள் ஆய்வு செய்து, சில்லறை சில்லறையாகப் பொறுக்கிக் கொண்டு போகின்ற ஆட்கள் வரக்கூடாது. பல்வேறு மொழி விற்பன்னர்களாக இருக்கக்கூடியவர்களும் எனக்குத் தேவையில்லை. இங்கே இருக்கின்ற மொழிகளில் பண்டிட்டாகவும் இருக்கக்கூடாது” என்றார்.
இந்தப் பதவிக்கு கர்சன் பிரபுவுக்கு வயது 40. இப்பொழுது அவர் ஆளைத் தேடும்பொழுது, அவருக்கு 42 வயது. ஆனால், வின்ஸ்டன் ஸ்மித்திற்கு வயது 52. அவரை இந்தப் பொறுப்பிற்குக் கொண்டுவந்தால், இவர் சொல்வதை, வின்ஸ்ட்ன் ஸ்மித் கேட்கமாட்டார். ஆகவே, மிகத் தெளிவாக இருந்தார்.
எனக்குத் தேவையானது ஆற்றல் உள்ள ஒருவர்!
எனக்குத் தேவையானது ஆற்றல் உள்ள ஒருவர். அதனால்தான், 26 வயதான, இந்திய மொழிகள் எதுவுமே தெரியாத, அகழாய்வை மட்டும் தெரிந்து வைத்திருந்த ஜான் மார்ஷலை இங்கே அவர் கொண்டு வருகிறார்.
இரண்டு மாதத்திற்கு முன்பு நானும், சுந்தரும், லண்டனுக்குச் சென்று, ஜான் மார்ஷலினுடைய கல்லறையைத் தேடி அலைந்தோம். அவர் இறந்த ஊருக்குச் சென்றோம். அவர் கடைசியாக வாழ்ந்த தெருவிற்குச் சென்று விசாரித்தோம். அப்பொழுதுதான் எங்களுக்கு அந்தத் தகவல் கிடைத்தது; அவர் கல்லறை தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால், அவர் எரிக்கப்பட்டார் என்பது.
ஜான் மார்ஷலை இந்த நாடு கொண்டாடவில்லை!
ஜான் மார்ஷலை இந்த நாடு கொண்டாடவில்லை. இந்த நாட்டில் யாரும், தொல்லியல் ஆய்வுக் கழகத்தினுடைய கருத்தரங்கத்திலும், தேசிய கருத்த ரங்கத்திலும் ஜான் மார்ஷல் பேசப்படவில்லை. சிந்துவெளிப் பண்பாட்டினுடைய உன்னதம் கொண்டாடப்படவில்லை. அதனால்தான் நாம் கொண்டாடுகிறோம்.
அதை ஏன் கொண்டாடவில்லை? என்பதிலேயே, நாம் கொண்டாடுவதற்கான காரணம் அங்கே ஒளிந்தி ருக்கும்.
இதைப் புரிந்துகொண்டதால்தான் தொடர்ந்து நாங்கள் இயங்கி வருகிறோம். நான், தமிழ்நாட்டு மக்களின் முன்பாக சில கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறேன்.
மனிதனின் வரலாறு என்பது ஒருவகையில் பயணங்களின் கூட்டுத் தொகை!
பயணங்களால் கட்டமைக்கப்பட்டதே மனிதனின் வரலாறு. மனிதனின் வரலாறு என்பது ஒருவகையில் பயணங்களின் கூட்டுத் தொகை.
குத்தை இடத்தில் உட்கார்ந்து கொண்டு குளிர்காய்ந்தவன், இன்னும் குகைகளில்தான் இருக்கிறான். நகர்ந்து வந்தவனே நாகரிகம் படைத்தான். புலப்பெயர்வுகளில் எந்தவிதமான அவமானமும் இல்லை. பயணங்களால் பட்டைத் தீட்டப்பட்ட ஒரு நாகரிகத்தினுடைய நடு நெஞ்சிலிருந்துதான் ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற வார்த்தைப் புறப்படும்.
அவ்வையாரின் வரிகள்!
அவ்வையார் ‘‘வாயிலோயே, வாயிலோயே” என்று சொல்லிவிட்டு,
‘‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே
பெரிதே உலகம் பேணினர் பலரே
திரைகடல் ஓடியே திரவியல் தேடு
அயலகம் என்பது தமிழின் ஆறாம் தினை
வணிகம் என்பது மூன்றாம் தமிழ்”
இயல், இசை, நாடகம் போன்று வணிகம் என்பது தமிழின் மூன்றாம் தமிழ். அப்படிப்பட்ட ஒரு சமூகம்.
(தொடரும்)