மும்பை, அக்.11 இந்திய உற்பத்தித் துறை கடந்த செப்டம்பா் மாதத்தில் முந்தைய எட்டு மாதங்கள் காணாத சரிவைக் கண்டது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘எச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உற்பத்தித் துறை நடவடிக் கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்அய், கடந்த 2023 செப்டம்பா் மாதத்தில் 57.5-ஆக இருந்தது.
பின்னா் அது அக்டோபரில் 55.5-ஆகச் சரிந்தது. இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்அய், கடந்த ஆண்டு நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக அது 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும் பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்அய், மார்ச் மாதத்தில் முந்தைய 16 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 59.1-ஆக அதிகரித்தது. ஆனால், அடுத்த ஏப்ரல் மாதத்தில் 58.8-ஆகவும் மே மாதத்தில் 57.5-ஆகவும் அது சரிந்தது.
பின்னா் ஜூன் மாதத்தில் 58.3-ஆக அதிகரித்த அது, மீண்டும் ஜூலை மாதத்தில் மீண்டும் 58.1 ஆகவும் ஆகஸ்ட் மாதத்தில் 57.5 ஆகவும் குறைந்தது. இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்அய் குறியீட்டு எண் கடந்த செப்டம்பா் மாதத்தில் 56.5-ஆகக் குறைந்துள்ளது. இது, கடந்த எட்டு மாதங்கள் காணாத சரிவாகும். இதன் மூலம், தொடா்ந்து 39-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்அய் குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது.அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை மிதமாகவே அதிகரித்ததால் துறை சரிவைக் கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.