நிலக்கோட்டை,அக்.11 வரும் 2035க்குள் விண்வெளியில் இந்தி யாவுக்கு தனி ஆய்வு மய்யம் அமைக்கப்படுவதுடன், நிலவின் தென்துருவத்திற்கு மனிதனை அனுப்பும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி ராஜ ராஜன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் உலக விண்வெளி வார விழாவையொட்டி சிறீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மய்யம் மற்றும் காந்திகிராம பல்கலைக்கழகம் இணைந்து விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம் என்ற தலைப்பில் உலக விண்வெளி வாரம்- 2024 கண்காட்சியை நடத்தியது.
இஸ்ரோ விஞ்ஞானியும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்ய இயக்குனருமான ராஜராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் முன்னிலை வகித்தார். பதிவாளர் (பொ) ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் பேசுகையில், ‘‘2035க்குள் விண்வெளியில் இந்தியாவிற்கென தனி ஆய்வு மய்யம் அமைக்கப்படும். புவி மற்றும் இயற்கை சார்ந்த சீற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் வகையில் ஆய்வுகள் செய்யப்படும். நிலவின் தென்துருவத்திற்கு மனிதனை அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்’’ என்றார், இதில் இஸ்ரோ பொதுமேலாளர் லோகேஷ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.