சென்னை, அக்.10- சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தை வசூலிக்கிறதா? என்பதை சரிபார்ப்பதற்கு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணயக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்விக்கட்டணம்
சென்னையில் செயல்பட்டு வரும் ஆசான் நினைவு சி.பி. எஸ்.இ. பள்ளியில் படிக்கும் மாணவி, கடந்த 2018-2019ஆம் ஆண்டு முதல் 2020-2021 ஆண்டு வரை கல்விக் கட்ட ணம் செலுத்தவில்லை. எனவே, கல்விக் கட்டண பாக்கித் தொகை 76 ஆயிரத்து 275 ரூபாயை 12 சதவீத வட்டியுடன் செலுத்த மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மாணவியின் தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில், பள்ளி நிர்வாகம் வழங்கும் வசதிகளுக்கு ஏற்கனவே கட்டணம் வசூலிக்கிறதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
நிறுத்தி வைப்பு
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவில் நீதிமன்றம், அவ்வாறு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில், ஆசான் பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
அதில், “தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண வசூல் முறைப் படுத்தல் சட்டத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தவழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிவுக்கு வரும்வரை எந்த விசாரணையும் மேற்கொள்வதில்லை என கட்டண நிர்ணயக்குழுவும் முடிவு செய்துள்ளது” என்று கூறப் பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன் வாதம் செய்தார்.
விசாரிக்க மறுப்பு
அதில், “தனியார் பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப கட்டணத்தை வசூலிக்கிறதா? என்பதை சரிபார்க்க வகை செய்யும் சட்டப்பிரிவை முதலில் உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்தாலும், பின்னர் அந்த உத்தரவை திரும்ப பெற்றுவிட்டது. ஆனால், தனியார் பள்ளிகளுக்கு எதிராக கட்டணம் தொடர்பான புகார்களை, உச்சநீதிமன்றத்தின் பழைய உத்தரவை கூறி, கட்டண நிர்ணயக் குழு விசாரிக்க மறுக்கிறது” என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தடை இல்லை
பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்பதான் கட்டணம் வசூலிக்கிறதா? என சரிபார்க்க வகைசெய்யும் சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் தற்போது நிறுத்திவைக்கவில்லை. எனவே, தனியார் பள்ளிகள் வழங்கும் வசதிகளுக்கு ஏற்றபடி கல்விக் கட்டணம் வசூலிக்கிறதா? என சரிபார்க்க தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணயக் குழுவுக்கு எந்த தடையும் விதிக்க வில்லை.
அதனால் கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்கிறேன். மாணவியின் தந்தை தரப்பில், 50 ஆயிரம் ரூபாய் கட்ட ணத்தை வருகிற 18ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையும் பதிவு செய்துகொள்கிறேன். இந்த வழக்கை முடித்துவைக்கிறேன்.
– இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.