‘பகிர்ந்துண்டு வாழ்தல்’
விடுதலை நாளிதழில் (3.10.2024), வியாழன் அன்று ஆசிரியர் அவர்களின் “வாழ்வியல் சிந்தனைகள்” – “என்று தணியும் இந்த ஆடம்பர மோகம் (3)” “பெற்ற மனம்” என்ற டாக்டர் மு.வரதராசன் அவர்களின் புதினத்தை ஆசிரியர் அவர்கள் மறு வாசிப்பு செய்து வாழ்வியல் சிந்தனைகள் என்பதில் எழுதி இருக்கிறார்கள்.
அதை படிக்கும் பொழுது எனது தந்தையார் வழக்குரைஞர் சண்முகநாதன், எனது தாயார் இராமலெட்சுமி அம்மாள் அவர்கள் என்னிடம் வாழ்வியலை கற்றுக்கொடுத்தது ஞாபகத்திற்கு வந்தது.
எங்கள் வீட்டில் எனது தந்தையார் எப்பொழுதும் குழந்தைகள் காப்பகத்தில் இடம் கிடைக்காத பிள்ளைகள் அல்லது குழந்தைகள் காப்பகத்தில் சேர வேண்டிய பிள்ளைகள் ஆகியோரை வீட்டில் தங்க வைத்து படிக்க வைப்பார்கள்.
மாலையில் சிற்றுண்டி எல்லோருக்கும் வீட்டில் செய்து அம்மா கொடுப்பார்கள். நாங்கள் படிக்க வைக்கின்ற மாணவனுக்கும் நன்கு கொடுப்பார்கள்.நான் மட்டும் ஓட்டல் ஸ்பெஷல் சீவல் தோசை கேட்பேன். எனக்கு தினமும் ஓட்டல் தோசை வாங்கி வரச்சொல்லி கொடுப்பார்கள். நான் அந்த ஓட்டல் தோசையை பார்சலில் இருந்து பிரிக்கும் பொழுது எனது தந்தையார் உடனே என்னைப் பார்த்து “ஓட்டல் ஸ்பெஷல் சீவல் தோசை சாப்பிடப் போகிறாயா” என்று கூறிவிட்டு தந்தையார் படிக்க வைக்கின்ற மாணவனை என்னிடம் காண்பித்து “அவன் நீயாக இருந்து, நீ அவன் போல் குழந்தைகள் காப்பகத்தில் படிக்க இடம் கிடைக்காத மாணவனாக இருந்தால் உன் மனது எப்படி இருக்கும், ஓட்டல் தோசை என்றால் அந்த மாணவனுக்கும் சாப்பிட வேண்டும் போல் இருக்கும் அல்லவா” என்று கூறுவார்கள்.
உடனே நான் ஓட்டல் ஸ்பெஷல் சீவல் தோசையை பிரித்து, பாதிக்கு மேல் அந்த மாணவனுக்கு ஒரு வாழை இலையில் சாம்பார், சட்னி வைத்து கொடுப்பேன். அந்த மாணவன் சாப்பிடுவான். அதை என் தந்தையார் கவனிப்பார்கள். நானும் பாதி தோசை சாப்பிடுவேன். என் தந்தையார் எனது வாழ்வியலை பழக்கப்படுத்துவதை எனது தாயார் பார்த்துக்கொண்டு உற்சாகமாவார்கள். எனது தாயாரும் தந்தையாரும் இதுமாதிரி வாழ்வியல் முறையை வழக்கமாக வைத்திருப்பார்கள். என் தாயார் செய்வதை என் தந்தையார் அங்கீகரிப்பார்கள். என் தந்தையார் செய்வதை என் தாயார் அங்கீகரிப்பார்கள். எங்கள் வீட்டில் இதுமாதிரி வாழ்வியல் முறையுடன் எங்களை வளர்த்த நிகழ்வுகள் நிறைய உண்டு.
ஆசிரியர் அவர்கள் வாழ்வியல் சிந்தனைகளில் – “பெற்ற மனம்” என்ற டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் புதினத்தை எழுதும்பொழுது மகனை பற்றி எழுதியிருக்கிறார்கள். “நீ குழந்தையாக இருந்தபோது நான் பெற்ற அனுபவம் இன்னும் மறக்கவில்லை.
திருவொற்றியூர் கடற்கரைக்கு உன்னை எடுத்துக்கொண்டு போயிருந்தோம். கையில் இரண்டு ஆரஞ்ச பழங்கள் இருந்தன. வழியில் இருந்த ஏழைக் குழந்தை பழத்தை பார்த்து கேட்டது. ஒரு பழம் கொடுக்கலாம் என்று பார்த்தால் அப்போது நீ கேட்கவில்லை. கொடுக்காமல் வந்ததால் எங்களால் அந்த குழந்தையின் ஏக்கத்தை பார்க்க முடியவில்லை. ஒரு பழத்தை உரித்து பாதியாக கொடுக்கலாம் என்றால் உரிக்காமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீ பிடிவாதம் செய்தாய். ஒரு குழந்தை சுவை பார்க்க வேண்டும் என்று ஏங்கும் ஏக்கம்,மற்றொரு குழந்தை அதை வைத்துக்கொண்டு விளையாட வேண்டும் என்று செய்யும் பிடிவாதம். இவற்றிற்கிடைய நானும் அம்மாவும் அப்போது திண்டாடினோம். உண்மையாக எண்ணிப்பார். நம் குழந்தை – ஊரார் குழந்தை என்று பிரித்து எண்ணும் எண்ணமே குற்றமல்லவா? பெரிய பெரிய வேதாந்தம் படித்து விட்டு இந்த சின்ன மாயைத் திரையை நீக்க முடியாமல் தினறுகிறோம்”.
ஆசிரியர் வாழ்வியலில் எழுதியதை படிக்கும்பொழுது என் தந்தையார் அவர்களின் வாழ்வியல் நினைவிற்கு வந்தது.
– ச.இன்பலாதன்
வழக்குரைஞர் சிவகங்கை