9.10.1987. அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர் வாகக் குழு கூட்டத்திலேயே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 31-சி பிரிவின்கீழ் சட்ட மன்றங்களில் சட்டமாகவே இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப் பட்டால் இதில் அதற்கு மேல் எந்தத் தடையும் ஏற்பட சட்ட ரீதியாக வழியில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
அரசமைப்புச் சட்டப்பிரிவு 31-சி பயன்படுத்தி சட்டம் இயற்றலாம் என திராவிடர் கழகத் தலைவர் சொன்னபோது, பல அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அரசமைப்புச் சட்டத் திருத்தம் தானே இதைவிட பாதுகாப்பு என கேள்வியை எழுப்பினார்கள்.
அவர்கள் அனைவருக்கும், ஆசிரியர் அளித்த பதிலானது: ஆம். உண்மைதான். அரசமைப்புச் சட்டத் திருத்தம் மிகுந்த பாதுகாப்பானது. ஆனால், அதைக் கொண்டு வந்து நிறைவேற்ற, டில்லி அரசின் நிலை, நாடாளுமன்றத்தில் சரியாக இருக்கிறதா என்பதுதான் அய்யம். எதிர்க்கட்சிகள் இதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஓட்டுப் போட்டால் ஒழிய, அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறாது.
அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற 368-வது விதிப்படி, மூன்றில் இரண்டு பங்கு இரு அவைகளில் ஓட்டு வாங்கி, அது மொத்தம் உள்ள எண்ணிக்கையில் சரி பகுதிக்குமேல் இருந்தாகவேண்டும். பிறகு, 50 சதவிகிதத்திற்கு மேல் சட்டமன்றங்கள் அதை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றி, குடிஅரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று திருத்தம் முழு வடிவம் பெற்றாகவேண்டும். எனவே, இது உடனடியாக, நமது அவசரத்திற்கு கைகொடுக்கக் கூடிய முறையாக இல்லை.
இதை நாம் எதிர்க்கவில்லை; அதை வலியுறுத்துவோம். ஆனால், இருதய நோய் கண்டவருக்கு உடனடியாக சிகிச்சை தருவதுபோல் உடனடியாக செய்ய நமது சட்டமன்றமே தனிச்சட்டம் கொண்டு வருவது வாய்ப்பானது. உடனடியாகப் பயன்படுவது என்பது நமது வாதம் ஆகும்.
ஆகவே, 31-சி பிரிவின் கீழ் தனிச்சட்டம் ஒன்றை சட்டமன்றத்தின் மூலமாக இயற்றி குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற்றால், 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டை தொடர்ந்து பின்பற்றலாம் என்ற யோசனையை அரசுக்குத் தெரிவித்தோம். தமிழ்நாடு அரசு, அதன் முதலமைச்சர் நாங்கள் எடுத்து வைத்த யோசனையை ஏற்று உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி. அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து ஒருமனதாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அச்சட்ட முன்வடிவை அனுப்பியது என விளக்கமாக பதில் அளித்தார்.
தமிழ்நாடு அரசின் – இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தின் நகலை உருவாக்கி – இப்படி ஒரு சட்டத்தை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்ற யோசனையை திராவிடர் கழகத்தின் சார்பில் முன்வைத்தவர் – திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தான்; முதலமைச்சர் திறந்த மனத்தோடு – இந்தப் பிரச்சினையை அணுகியதால் – திராவிடர் கழகத்தின் இந்த யோசனையை – அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைத்து – அனைவரின் ஒப்புதலோடு அதை சட்டமாக்கி – குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத் தார். குடியரசுத்தலைவரும் 1.9.1994 அன்று ஒப்புதல் அளித்தார்.
இந்தியாவிலேயே இடஒதுக்கீடு சட்ட வடிவமாக (ACT) இருப்பது தமிழ் நாட்டில்தான். மற்ற மற்ற மாநிலங்களில் வெறும் ஆணைகளாகத் (G.O.) தான் உள்ளன. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், சட்ட ரீதியாக இருந்தால் தான் முந்தேதியிட்டு (RETROSPECTIVE EFFECT) அமல்படுத்த முடியும். ஆணைக்கு அந்த அதிகாரம் கிடையாது.
அரசமைப்புச் சட்டம் 31-சி – இன் படி சட்டம் நிறைவேற்றி, 9-ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டால், மிகவும் பாதுகாப்பாக இருக்கும்; நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, அதற்கான வரைவையும் தந்து, தமிழ் நாடு அரசாலே ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் அரசமைப்புச் சட்டத்திருத்தம் (76ஆவது திருத்தம்) நாடாளு மன்ற இரு அவைகளாலும் 24.8.1994 மற்றும் 25.8.1994 அன்று மேற்கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவரால் 1.9.1994 அன்று ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழ் நாட்டில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு இன்றளவும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது.