ஈரோடு, அக்.9- கும்பாபிஷேகம் நடந்த கோவில் பந்தலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கு நிறுத்தப் பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
ஈரோடு சின்னசடை யம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
இதனிடையே கோவில் நிர்வாகிகள் ராமேசுவரம் சென்று தீர்த்தம் கொண்டு வருவ தற்காக புறப்பட்டனர். செல்வதற்கு முன் தங் களுடைய இருசக்கர வாகனங்களை கோவில் வளாகத்தில் போடப்பட்டு இருந்த தகர பந்தலின் கீழ் நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் (7.10.2024) இரவு பந்தலில் திடீரென தீப்பிடித்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் பந்தலில் நிறுத்தியிருந்த 10 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து திரும்பிய கோவில் நிர்வாகி கள் தங்களுடைய இருசக்கர வாகனங்கள் எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கோவில் நிர்வாகிகள் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனங்கள் பெட்ரோலில் இயங்கும் மோட்டார்சைக்கிள், மொபட், ஸ்கூட்டர் போன் றவைதான். பேட்டரி வாகனங் கள் எதுவும் நிறுத்தப்பட வில்லை. மேலும் பந்தலும் கீற்று ஓலை யில் இல்லாமல் தகரத் தில் வேயப்பட்டு இருந்தது. அதனால் தானாக தீவிபத்து ஏற்பட வாய்ப்புகள் குறைவு. எனவே மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.