வல்லம், செப்.9- தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நபார்டு வங்கி தமிழ்நாடு அலுவலகத்தின் பொறுப்பு அலுவலர் அதன் முதுநிலை பொது மேலாளர் ஆனந்த் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சியில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புவதாகவும் இது தொடர்பாக ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிறுவனத்தின் தஞ்சை மண்டல அலுவலகம் மற்றும் பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகம் இவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியியை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துவதாகவும் கூறினார்.
மேலும் அவர் தம் உரையில், தஞ்சை மண்டலத்தின் வேளாண் சிறப்பு களை எடுத்துக்கூறி அரிசி மற்றும் வைக் கோல் மட்டுமே இங்கு வருவாய் ஈட்டு வதாகவும் இவை தவிர நெற்பயிரில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தவிட்டு எண்ணெய், பார்ட்டுகுளேட் போர்டு போன்ற பொருள்களை தஞ்சை மண்டலத்தில் உற்பத்தி செய்ய முன் வர வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ட்ரோன் தொழில்நுட்பம் விவசாய பணிகளில் இன்னும் அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் உரம் மற்றும் மருந்து தெளிப்புப் பணிகளை முறைப்படுத்தி குறுகிய நேரத்தில் அதிக பரப்புகளில் இந்தப் பணிகளை செய்யமுடியும். இதற்கான தொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்க ‘ட்ரோன் ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை கேட்டுக்கொண்டார்.
புதுதொழில் முனைவோர்கள்
மூங்கில் தூர்களை கொண்டிருக்கும் தஞ்சை மண்டலத்தில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகளை கொடுத்து புது தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
கால்நடை நலன் தகவல் தொழில் நுட்பம், சைபர் செக்யூரிட்டி, நுண்ணுயிர் நொதிப் பொருட்கள், விர்சுவல் ரியாலிட்டி ஆக்குமெண்ட் ரியாலிட்டி, இணைய தள சதுரங்க விளையாட்டுப் பயிற்சி, இ-வணிகம் போன்ற துறைகளில் இயங்கிவரும் ஸ்டார்ட் அப் நிறுனங்களின் பங்களிப்பு பற்றியும் அவர் கேட்டறிந்தார்.
புகையில்லா அடுப்பு
கோகிரீன் நிறுவனர் பிரபாகரன் தஞ்சை மண்டலத்தில் பருவநிலை மாறு பாடுகளை எதிர்கொள்ளும் விதமாக கார்பன் டிரேடிங், புகையில்லா அடுப்பு போன்ற பல்வேறு திட்ட வரைவுகளை எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தஞ்சை மண்டல திட்ட அலுவலர் முனைவர் கருப்பண்ணன் பேசுகையில், தஞ்சை மண்டலத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, மன்னார்குடி போன்ற சிறு நகரங்களிலிருந்தும் தொழில் நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெருமளவில் உருவாகி வருவதாகவும், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார்.
முன்னதாக நபார்டு வங்கி தஞ்சை மாவட்ட வளர்ச்சி அலுவலர் அனிஸ் நபார்டு வங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சியை ஊக்கப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறினார்.
நபார்டு வங்கியின் ஆதரவுடன்
இந்நிகழ்ச்சியில் பெரியார் தொழில் நுட்ப வணிக காப்பகத்தின் தலைமை அலுவலர் முனைவர் அருணா, புதிய தொழில்நுட்பங்களை வணிக ரீதியில் பயன்படுத்துவதில் தொடக்க நிலையில் ஏற்படும் இடர்பாடுகளை கூறினார்.
மேலும் தங்களது நிறுவனத்தில் பதிவு செய்து இயங்கிவரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பற்றியும் எடுத்துக் கூறினார். நபார்டு வங்கியின் ஆதரவுடன் தாங்கள் செயல்படுத்திய திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
இறுதியாக நன்றியுரையினை திருவாரூர் மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் விஸ்வநாத் கண்ணா, இந்த கலந்துரையாடல் மூலம் தஞ்சை மண்டலத்தில் இயங்கி வரும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங் களுடன் இணைந்து செயல்பட தங் களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி கூறினார்.
இதுபோன்ற கலந்துரையாடல்கள் பல்வேறு நிறுவனங்களுடன் நடத்துவதன் மூலம் புதிய வாய்ப்புகளை கண்டறிந்து அவற்றை தொழில்முனைவோருக்கு பெற்றுத் தர முடியும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் தீபக்குமார், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மூலமாக நிதியுதவி பெற்றும் இயங்கி வரும் நிறுவனங்கள் மற்றும் பதினைந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலிருந்து கலந்துகொண்டனர்.