அக்டோபர் 5ஆம் நாள், அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஏற்பாட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவும், மியான்மா நாட்டு சுயமரியாதை வீரர், 91 அகவை காணும் பெரியார் பெருந்தொண்டர் முனுசாமி அவர்களுக்குப் பாராட்டு விழாவும் காணொலி வாயிலாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று, பாராட்டுரையினை வழங்கினார்.
பாராட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந் தோரை வரவேற்று பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் உரையாற்றினார்.
பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பாக 1996ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிப் பணிக்குப் பங்களித்த – பாடுபட்ட பெருமக்களுக்கு ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ வழங்கப்பட்டு வருகிறது. பாராட்டு பத்திரத்துடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான பணமுடிப்பும் விருதாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மியான்மா நாட்டுத் தொண்டர் வீரா.முனுசாமி அவர்களுக்கு 2006ஆம் ஆண்டுக்கான ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ வழங்கப்பட்டது. சமூகநீதி விருது தெரிவுக் குழுவின் தலைவர் முனைவர் இலக்குவன் தமிழ் சமூகநீதி விருது தொடங்கப்பட்டதின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அடுத்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுச் சிறப்புரையினை வழங்கினார். (அவரது உரையினை 4ஆம் பக்கம் காண்க!).
வீரா.முனுசாமி உரை
பாராட்டப்பட்ட வீரா.முனுசாமி அவர்கள் நிறைவாக ஏற்புரையினை வழங்கினார். அவரது உரையின் சில பகுதிகள்.
இன்று மியான்மா என்றும், அந்நாளில் பர்மா என்றும் அழைக்கப்பட்ட நாட்டிற்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி புலம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த தமிழர் களில் பெரும்பாலானோர் உடல் உழைப் புத் தொழிலாளர்களாகவே இருந்தனர்.
பர்மா வாழ் தமிழர்கள் சுயமரியாதை இயக்கத்தின் செய்திகள் குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் ஏற்கெனவே அறிந்திருந்த சூழலில், 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரங்கூன் நகரத்தில் நடைபெற்ற உலக புத்த மாநாட்டிற்குத் தந்தை பெரியார் வருகை தந்தார். தந்தை பெரியாருடன் அன்னை மணியம்மையார் மற்றும் சுயமரியாதை இயக்க முன்னோடித் தோழர்கள் சிலரும் சென்றிருந்தனர். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும் புத்த மாநாட்டிற்கு வந்திருந்தார். தந்தை பெரியார் – டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இரு தலைவர்களின் சந்திப்பு பின்னாளில் வரலாற்றுச் சிறப்புக்குரியதாக அமைந்தது.
ஈரோட்டில் புத்த மாநாட்டை பெரியார் கூட்டியிருந்தபோது அதற்கு இலங்கையிலிருந்த புத்த மதத் தலைவர் மல்லலேசேகரா பங்கேற்றார்.
அவரது அழைப்பின் பேரிலேயே உலக புத்த மாநாட் டில் கலந்து கொள்ள தந்தை பெரியார் வந்திருந்தார்.
பர்மாவிற்கு வருகை தந்த தந்தை பெரியாருக்கு, கட்சி பேதமின்றி அனைத்துத் தமிழர்களும் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அந்த சமயம் தி.மு.க. உருவாகி, தமிழர்கள் ஈடுபாடு கொண்டிருந்தனர். தி.க.வும் செயல்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் இரு கட்சிகளும் தனித்தனியாக செயல்பட்டாலும், பர்மா தமிழர்கள் அதுபற்றி எதையும் கருதாது பெரியாருக்குத் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வரவேற்பு வழங்கி மகிழ்ந்தனர். பெரியார் 10 நாள்கள் பர்மாவில் தங்கி நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களை சந்தித்தார், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
சுயமரியாதை இயக்கம் என்பது பிரிவினை இயக்கம் அல்ல; அனை வரையும் ஒன்று சேர்க்கின்ற அமைப்பு. சுயமரியாதை இயக்கத்தை பர்மாவில் முதன்முதலாக சுப்பையா நாயுடு தொடங்கி, தமிழர்களை ஒழுங்கிணைத்தார். ஜாதி பாகுபாடின்றி சுயமரியாதை இயக்கம் பர்மாவில் தொடங்கப்பட்டது. ‘குடிஅரசு’ ஏடு தமிழர்கள் மத்தியில் பரவலாகப் படிக்கப்பட்டது.
புத்த நெறியினை பின்பற்றி வாழ்ந்த தமிழர்களும் பர்மாவில் இருந்தனர். தமிழ் பௌத்த சங்கத்தை பர்மாவில் அமைத்தவர் மு.சி.ராமையா பிள்ளை ஆவார். பின்னர் அருணாசலம் செட்டியார் போன்றோர் தமிழ் மக்களை ஒருமைப்படுத்தினார். ‘தொண்டன்’ எனும் தமிழ் ஏடும் அந்நாளில் பர்மாவிலிருந்து வெளிவந்தது.
பெரியார் பர்மாவிற்கு வந்தபொழுது ஜாதி பாகுபாடின்றி – ஆலய நிர்வாகிகளும் உடன் இருந்து பெரியாரை வரவேற்றது தமிழர்களிடம் நிலவிய ஒற்றுமையின் வெளிப்பாடாக இருந்தது. தொடக்க நிலையில் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்த தமிழர்கள் தந்தை பெரியாரின் வருகைக்குப் பின்னர் – அவரது உரையினை கேட்டதற்குப் பின்னர் தங்களது பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பதன் அவசியத்தை உணரத் தொடங்கினர். இன்றைக்குப் பலரும் – அடுத்த தலைமுறைத் தமிழர்கள் படித்து நல்ல நிலைமையில், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்னைப் பாராட்டிப் பேசுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. பல ஆண்டு களுக்கு முன்னர் ஆசிரியர் மியான்மா நாட்டிற்கு வந்திருந்தார். மீண்டும் ஒரு முறை வருகை தந்து தமிழர்களைச் சந்தித்துச் செல்ல வேண்டும் என்று கூறி, பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு வீரா.முனுசாமி உரை யாற்றினார்.
காணொலி நிகழ்ச்சிக்கு மியான்மா நாட்டுத் தோழர்கள் சந்திரசேகரர், ராஜ்குமார், கலைச்செல்வன் ஆகியோர் ஒருங்கிணைத்துப் பங்கேற்றனர். அமெரிக்காவிலிருந்து இளமாறன், தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்து மாந்தநேய திராவிடர் கழகத்தின் ஆலோசகர் ரெ.சு.முத்தையா, பெரியார் பன்னாட்டு மய்ய மலேசிய கிளையின் பொறுப்பாளர் கே.ஆர்.அன்பழகன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, பெரியார் சி்ந்தனை உயராய்வு மன்ற இயக்குநர் முனைவர் நம்.சீனிவாசன், தமிழ்நாடு மூதறிஞர் குழு பொருளாளர் முனைவர் த.கு.திவாகரன் மற்றும் பல தோழர்கள் இக்காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி தெரிவித்தார். ‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’ என்பதன் வெளிப்பாடாக காணொலி நிகழ்ச்சி நடந்தேறியது.