மின்சாரம்
இதோ ஒரு ‘தினமலர்’ செய்தி:
ஈ.வெ.ரா .,வுக்கு மிகப்பெரிய நன்றி!
சா.பா.குமார், சென்னையில்இருந்து அனுப்பிய, ‘இ-மெயில்’கடிதம்: அந்தக் காலத்தில், கிராமங்களில் வசித்தோம்; வேதம் மட்டும் பயின்றோம்;அக்ரஹாரங்களை விட்டு வெளியே வரவில்லை.
பின், நிலபுலன்கள்அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விற்று, நகரத்தை நோக்கிப் பயணித்தோம்.
முக்கிய நகரங்களில் குடியேறி, மெக்காலே கல்வி முறையில், பள்ளி இறுதிப்படிப்பு முடித்து, தட்டெழுத்து – குறுக்கெழுத்து பயின்று, ஆங்கி லேயருக்கு பணி செய்தோம்; இரண்டு மொழிகள் கற்றுத் தேர்ந்தோம்.
சுதந்திரம் வந்தது; தனியார் மற்றும் அரசு வேலைகளில் தானாகவே அமர்ந்தோம். சுதந்திர இந்தியாவில், அம்பேத்கர் பரிந்துரையில் ஒதுக்கீடு வந்தது; எங்களுக்கு வேலை கிடைக்க சிரமம் ஏற்பட்டது.
தட்டெழுத்து, கணினி மயமாக்கப்பட்டதும் அதைக் கற்று, வெளிநாடுசென்றோம்; குறிப்பாக அமெரிக்காவுக்கு! சொந்த வீடு வாங்கி, செட்டில் ஆனோம்; மூன்றாவது தலைமுறை அங்கே தொடர்கிறது.
கூகுள் பிச்சை, மாநில கவர்னர், உச்சநீதி மன்ற நீதிபதி, துணை அதிபர்,தற்போது அதிபர் வேட்பாளர் என, உச்சம் தொட்டாயிற்று.
‘நாசா’வில் பொறியாளர்கள்,பெரிய மருத்துவ மனைகளில், ‘ஆன்காலஜி’ போன்றகேன்ஸர் சிகிச்சை மருத்துவர்கள் என, அமெரிக்காவில் கொடி நாட்டியாயிற்று. எங்கு சென்றாலும், அறிவை மட்டுமே பயன்படுத்துவதால், துர்குணத்தை நீக்கி வாழ்வதால் சிறப்பு.
துவேஷம் செய்த ஈ.வெ.ரா.,வுக்கு மிகப்பெரிய நன்றி!
‘தினமலர்‘, 6.10.2024
‘‘இது உங்கள் இடம்‘‘ என்ற ‘தினமலர்‘ ஏட்டில் வெளிவந்துள்ள கடிதம் இது.
இதைப் படிக்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது. பார்ப்பனர்கள் படித்து முன்னேறியதற்குக் காரணம் ஈ.வெ.ரா.வின் துவேஷம்தான், அதற்காகப் பார்ப்ப னர்கள் நன்றி தெரிவிக்கிறார்களாம்.
அவர்கள் கூற்றுப்படியே ஒன்று தெரிகிறது. பார்ப்பனர்களின் முன்னேற்றத்திற்கும் பெரியாரின் துவேஷம்தான் காரணமாம் – அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறார்களாம்!
பலே, பலே! எப்படியோ கடைசியில் பெரியாருக்கு நன்றி தெரிவிக்கும் நிலைக்குத்தான் பார்ப்பனர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நன்றியை வெறும் வார்த்தையளவில் தெரிவித்தால் மட்டுமே போதுமா?
ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் பிறந்த நாளில், அவரின் சிலைக்கு மாலை அணிவியுங்கள்; பெரியார் பட ஊர்வலம் நடத்துங்கள்.
கூட்டம் போட்டுப் பேசுங்கள்; நீங்கள் நடத்தும் மாநாட்டில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து வாழ்த்துகளை முழக்கமாகப் போடுங்கள்.
நன்றி என்பதுதானே மனிதன் என்பதற்கு அழகு! நன்றியில்லாதவன் புழு, பூச்சிக்குச் சமம் என்றார் தந்தை பெரியார்.
புழு பூச்சிகளாக இருக்கப் போகிறீர்களா, இல்லையா? என்பதைப் பார்ப்போம்!
இப்பொழுதுதான் காலங்கடந்தாவது பெரியாருக்கு நன்றி தெரிவிக்க முன்வந்துள்ளீர்களே!
அதைச் செயலில் காட்டவேண்டாமா? அதற்குத்தான் இத்தகைய செயலில் ஈடுபடுங்கள் பார்ப்பனர்களே என்று கூறுகிறோம்.
தந்தை பெரியார் துவேஷம் செய்தாராம்; யார்மீது துவேஷம் செய்தார்?
‘‘நீ சூத்திரன், கிட்டே வராதே, தீட்டாயிடும். இந்தத் தெருவில் காலடி வைக்காதே, நீ பஞ்சமன்! நீ காலடி வைத்த இடம் தீட்டாகிவிடும்; நீ கோவிலுக்குள் வரக்கூடாது, கோவில் தீட்டுப்பட்டு விடும் – தூர இருந்து கோபுரத்தைத் தரிசித்து விட்டுப் போ! கோபுரம் கட்டியிருப்பது, நீங்கள் எல்லாம் கோவிலுக்குள் நுழையக் கூடாது; தூர இருந்து கும்பிட்டுப் போய்த் தொலையவேண்டும் என்பதற்காகத்தான்’’ என்று சொல்லும் கூட்டம், தல புராணங்களை எழுதி வைத்தி ருக்கும் கூட்டமா துவேஷத்தைப்பற்றிப் பேசுவது?
நாங்கள் துவிஜாதிகள் (இரு பிறப்பாளர்கள்) அதனால்தான் இந்தப் பூணூலை அணிந்திருக்கிறோம் – பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் நாங்கள் – நீங்களோ பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள். விபசாரி மக்கள் என்று சாஸ்திரம் (மனுதர்மம் 8 ஆவது அத்தியாயம், 415 ஆவது சுலோகம்) எழுதி வைத்து, அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமா துவேஷத்தைப்பற்றிப் பேசுவது?
காஞ்சி சங்கர மடத்துக்குப் போனால், சுப்பிரமணிய சாமி, சங்கராச்சாரியாரின் பக்கத்தில் சரி சமமாக நாற்காலியில் அமரலாம். குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜே.அப்துல்கலாமாக இருந்தாலும், ஒன்றிய இணையமைச்சர்கள் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணனாக இருந்தாலும், மாண்புமிகு முருகனாக இருந்தாலும் சரி, சங்கராச்சாரியார் முன் தரையில்தானே அமரவேண்டும். இதற்குப் பெயர் ஜாதித் திமிர் தோஷம் இல்லாமல் வேறு என்னவாம்?
பாலகங்காதர திலகர் மரணம் அடைந்தபோது, அவர் பாடையைத் தூக்க காந்தியார் நெருங்கியபோது, ‘நீ வைசியன், பிராமணர் திலகரின் பாடையைத் தூக்கக் கூடாது!‘ என்று சொன்ன உஞ்சி விருத்திக் கூட்டமா துவேஷத்தைப்பற்றி சிலாகிப்பது? திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரைக் கிலோ தங்கத்தினால் பூணூல் போட்டவர் யார்? திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் பூணூல் போட்டவர் யார்? சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிதானே, கடவுளுக்கு மேல் பிராமணன் என்று சென்னை நாரதகான சபாவில் நடந்த ‘‘அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்‘‘ நூல் வெளியீட்டு விழாவில் பேசியவரும் இவர்தானே!
இந்த யோக்கியதையில் உள்ள நீங்களா துவேஷத்தைப்பற்றிப் பேசுவது?
சென்னை தேனாம்பேட்டை காமராசர் திடலில் இந்திய சமயக் கலை விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குத் தன் கையால் பொன்னாடை போர்த்தாமல், தனது உதவியாளர்மூலம் போர்த்திடச் செய்தாரே, ஜெயிலுக்கும் பெயிலுக்குமாக அலைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி – அதற்குள் அடங்கி இருந்தது – அசல் அக்கிரகாரப் பார்ப்பனக் குணதோஷம்தானே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை தி.மு.க. ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நிறைவேற்றியபோது, அதனை எதிர்த்து சங்கராச்சாரியார் தூண்டுதலின் பேரில், ஆச்சாரியாரின் சிபாரிசு பேரில் பிரபல வழக்குரைஞர் பல்கிவாலா உச்சநீதிமன்றத்தில் வாதாடியபோது – வைகனாச ஆகமத்தை எடுத்துக் காட்டினார்களே, அது என்ன சொல்லுகிறது? ‘‘சூத்திரன் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும்; அதற்காகப் பரிகாரப் பூஜைகள் செய்யவேண்டும். மஹாசாந்தி ேஹாமமும், பிராமண போஜனமும் செய்யவேண்டும் – 108 புதிய கலசங்களை வைக்கவேண்டும்’’ என்று கூறப்பட்டதே – இதற்கு என்ன பெயர் சூட்டப் போகிறாய் தினமலரே! துவேஷ நஞ்சில் முக்கி எடுத்த சமாச்சாரம் இல்லாமல் இதற்கு என்ன நாமகரணம் சூட்டப் போகிறீர்கள்?
‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி‘ என்று தாடிக்கிழவர் தடியைத் தூக்கிய பிறகுதானே உங்கள் துவேஷ சம்மட்டி தூள் தூளானது! ஆனாலும், இப்பொழுது பூணூல் வால் ஆட்டம் போட ஆரம்பிக்கிறதா?
கசாப்புக் கடைக்காரர் அகிம்சையைப் பற்றிப் பேசலாமா? இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்றால், நகைப்பு வராதா?
உடலின் ஒவ்வொரு திசுவிலும் பார்ப்பனர் அல்லாதார் மீது துவேஷ ‘அக்னி‘யை நிரப்பி வைக்கும் கூட்டமா – மனிதநேய மாண்பாளர் தந்தை பெரியாரைத் துவேஷி என்று கூறுவது?
உங்கள் புண் ணாக்கை 2024–லிலும் உலவவிட ஆசைப்பட வேண்டாம்!
இது பெரியார் மண்!
திராவிடர் மண்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!