சென்னை, அக்.9- ஜம்மு–காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முடிவு நேற்று (8.10.2024) வெளியானது. தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள்!
இது இந்தியா மற்றும் மக்களாட்சிக்கான வெற்றி மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க. அரசு ஜம்மு காஷ்மீரிடம் இருந்து அநியாயமாகப் பறித்த மாநிலத் தகுதியும் மாண்பும் மீட்டளிக்கப்பட வேண்டும் என்ற அம்மக்களின் விழைவை நிறைவேற்ற அளிக்கப்பட்ட தீர்ப்பும் ஆகும்.
நீதி, ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கிற – அனைவரையும் அரவணைக்கிற எதிர்காலம் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கான தொடக்கத்தை இத்தருணம் குறிக்கிறது.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.