‘‘தகைசால் தமிழர்” விருது தனிப்பட்ட வீரமணிக்காக வழங்கப்பட்ட விருதல்ல;
தந்தை பெரியாருக்கும், அவருடைய லட்சியத்திற்கும், தொண்டர்களுக்கும் தரப்பட்ட விருது!
சென்னை, ஆக.2 எப்படி அறிவியலில், மருத்துவயி யலில் நோய்க் கிருமிகள் உள்ளவரையில் மருத்துவம் தொடரவேண்டுமோ – அதுபோலத்தான், பெரியார் பணி என்பது, அது சமூக நோய்க் கிருமிகள் இருக் கின்றவரையில் தொடரவேண்டிய ஒரு சமூக சித்தாந் தம், தத்துவம், நடைமுறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (1.8.2023) நியூஸ் 18 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு.
நெறியாளர்: ”தகைசால் தமிழர்” விருது தமிழ்நாடு அரசால் உங்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறதே, இந்தத் தருணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? எப்படி உணருகிறீர்கள்?
தந்தை பெரியார் அவர்களுக்காகத்
தரப்பட்ட விருது!
தமிழர் தலைவர்: இந்த விருது என்பது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சியைத் தந்தாலும்கூட, இதுவரை கல்லடிகளையும், சொல்லடிகளையும், கடும் விமர்சனங் களையுமே சந்தித்துக் கொண்டு வந்த எங்களைப் போன்றவர்களுக்கு இது முற்றிலும் ஒரு மாறான ஓர் அனுபவம் என்றாலும்கூட, இந்த விருது எனக்காக, தனிப்பட்ட ஒரு வீரமணிக்காக வழங்கப்பட்ட விருதாக நான் கருதவில்லை.
மாறாக, இவ்விருது அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்காகத் தரப்பட்ட விருது. அவருடைய லட்சியத்திற்கு, அவர் உடலால் மறைந்த நிலையில், தத்துவமாக நிறைந்துள்ள தந்தை பெரியாருக்கு, அவருடைய தொண்டர்களுக்கு, தோழர்களுக்கு, அவர் களுடைய எதிர்ப்புக்கஞ்சாத பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைப் பார்க்கிறேன். எனவே, மிகுந்த மகிழ்ச்சியாக அதனை வரவேற்பதோடு, அதற்கு எனக்கு முழுத்தகுதி இருக்கிறதோ, இல்லையோ – மேலும் தகுதியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு, அவ்விருதைப் பெறத் தயாராகிறேன்.
நெறியாளர்: இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நீங்கள் யாரை நினைவு கூறுகிறீர்கள்?
மற்றவர்களுக்கு ஒளி தந்து, தங்களை அழித்துக்கொண்ட சுயமரியாதைச் சுடரொளிகள்!
தமிழர் தலைவர்: எப்பொழுதும்போல என்னுடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களையும், அவருக்குத் தோள் கொடுத்து – தன்னந்தனியராக தந்தை பெரியார் இல்லை – இதோ ஒவ்வொரு ஊரிலும் நாங்கள் இருக்கிறோம்; எண்ணிக்கையில் சிலராக இருந்தாலும், எண்ண பலத்திலும், எதிர்நீச்சல் அடிப்பதிலும் நாங்கள் எவரையும் தாண்டி நிற்போம் என்று சொல்லக்கூடிய இமயம் போன்ற அவருடைய தோழர்களையும், தந்தை பெரியார் தந்த சுயமரியாதைக்காகத் தங்களுடைய வாழ்வை கருப்பு மெழுகுவத்திகளாக இணைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு ஒளி தந்து, தங்களை அழித்துக்கொண்ட சுயமரியாதைச் சுடரொளிகளையும் இந்த நேரத்தில் நினைக்கிறேன்.
அவர்களுடைய தோள்கள்மீது அமர்ந்துதான் இந்த விருதைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன் என்று நான் மிகவும் அடக்கத்தோடு குறிப்பிட விரும்புகிறேன்.
நெறியாளர்: ”தகைசால் தமிழர்” விருது என்பது தங்களுக்குத் தாமதமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அல்லது சரியான தருணத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று நினைக் கிறீர்களா?
காலத்தை வென்ற தந்தை பெரியாருக்குத் தரப்பட்ட விருது!
தமிழர் தலைவர்: தாமதமா, சரியான தருணமா? என்கிற பிரச்சினைக்கே இடமில்லை.
விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, காலம் எப்பொழுதும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. காலத்திற்காகத்தான் நாம் காத்திருக்கின்றோம்.
காலத்தை வென்ற தந்தை பெரியாருக்குத் தரப்பட்ட விருது என்று சொல்லும்பொழுது, முன்னாலா? பின் னாலா? காலம் தாழ்ந்ததா? என்பதில்லை.
ஏனென்றால், காலத்தை வென்ற கருத்துகளும், அந்தக் கருத்துகளுக்கான நடைமுறையையும் பெற்ற ஓர் இயக்கம் – அந்த இயக்கத்தின் பணிக்கான அங்கீ காரம் என்று சொல்லும்பொழுது, காலத்தைத் தாண்டி நிற்கக்கூடிய கருத்துகள் – தேவையான கருத்துகள் – காலத்தையே உருவாக்கக் கூடிய கருத்துகள் என்ற பெருமை இருக்கும்பொழுது, முன்னாலா? தாமதமா? என்று சொல்வதற்கு இடமே இல்லை.
நெறியாளர்: சமூகநீதியை நோக்கிய பயணம், போராட்டத்தில் உங்களுடைய பயணம் என்பது 80 ஆண்டுகால போராட்டமாகும். இப்பொழுது இந்தப் போராட்டம் என்பது தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு எந்த அளவிற்குப் பயன் கொடுத்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
திராவிடர் கழகம் தேவை; பெரியார் தேவை; சமூகநீதியில் நம்பிக்கையுள்ளவர்கள் தேவை!
தமிழர் தலைவர்: சமூகநீதிக்கான சவால்கள் இன்ன மும் இருந்து கொண்டிருக்கிறது.
எனவே, இன்னமும் திராவிடர் கழகம் தேவை; பெரியார் தேவை; சமூகநீதியில் நம்பிக்கையுள்ளவர்கள் தேவை – அந்த வகையிலே, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் – இன்றைய முதலமைச்சர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற நாயகர் அவர்கள் ஒரு பக்கத்தில் சட்ட ரீதியாகவும், அரசு ரீதியாகவும் பாது காத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், மக்களை ஆயத் தப்படுத்தக் கூடிய பணியிலும், அதேபோல, மக்கள் மன்றத்தில் போராடக் கூடிய பணியிலும் நாங்கள் எங்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
நெறியாளர்: திராவிட இயக்கத் தலைவராக, தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப் பண்பாடு இந்த சூழ்நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது? ”தகைசால் தமிழர்” விருது பெறக்கூடிய தருணத்தில், தமிழ்நாட்டினுடைய ஒட்டுமொத்த சூழ்நிலையை நீங்கள் எப்படி மதிப்பீடு கிறீர்கள்?
எங்களுடைய பயணம் தடையில்லா பயணம் – சுணக்கமில்லாத பயணம்!
தமிழர் தலைவர்: இன்னமும் தமிழர்கள் என்பவர் கள் வெறும் தமிழ் பேசுகிறவர்கள் மட்டும் அல்ல; பண்பால், தமிழர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வெறும் இனத்தின் அடிப் படையில் அல்ல; மாறாக, அவர்கள் குணத்தின் அடிப் படையிலும், பண்பின் அடிப்படையிலும் சிறப்பான தமிழர்களாக இருக்கவேண்டும். அவர்களுடைய இல்லத்தில் தமிழில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை என்கிற நிலையை மாற்றவேண்டும்.
குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்பொழுதுகூட, தமிழ்ப் பெயர்கள்கூட இப்பொழுது அரிதாகிக் கொண்டு வரக்கூடிய ஒரு கொடுமை நிகழ்ந்து கொண் டிருக்கிறது.
தமிழர் விழாக்கள், தமிழ் விழாக்களாக, பொங்கல் விழாக்களாக இருக்கவேண்டும். தமிழ்ப் பெயரைத் தேடினாலும் கிடைக்காது – அதுதான் தமிழ்ப் புத் தாண்டு என்று சொல்லக்கூடிய நிலை.
எனவேதான், கடந்த தூரத்தைவிட, கடக்கவேண் டிய தூரம் அதிகமாக இருக்கிறது. அதை நோக்கி எங்களுடைய பயணம் தடையில்லா பயணமாக, சுணக்கமில்லாத பயணமாக நடந்துகொண்டிருக்கின்றது.
நெறியாளர்: அந்தப் பயணத்தைத் தீவிரப்படுத்த வேண்டிய தருணம் இப்பொழுது ஏற்பட்டு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால், கடந்த காலத்தைவிட, நிறைய விமர்சனங்கள், திராவிடத்தின் மீதான பார்வை, அதன்மீதான தாக்குதல்கள் மிகவும் கூர்மைப்பட்டு வருகிறதே?
இளைஞர்களை ஒருமுனைப்படுத்த வேண்டிய பணி – எங்களைப் போன்ற
வயது நிறைந்த இளைஞர்களுக்கு உண்டு!
தமிழர் தலைவர்: பல மடங்கு தீவிரப்படுத்தவேண்டிய அவசியம் இப்பொழுது இருக்கிறது.
ஏனென்றால், முன்பெல்லாம் தமிழுக்கு எதிரி களாகக் காட்டிக் கொண்டவர்கள் வெளிப்படையாக இருந்தார்கள். ஆனால், இப்பொழுது தமிழ்ப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, உள்ளே வேறுவிதமான சூழல் உருவாகக் கூடிய அளவிற்கு, ஏமாந்த தமிழர்களையும் தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளலாம் என்று சொல்லக்கூடிய ஓர் அரசியல் அணுகுமுறை இன்றைக்குப் பகிரங்கமாக வந்திருக்கக் கூடிய காரணத்தினால்தான், எங்களுடைய பணி என்பது முன்பை விட பல மடங்கு தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும், தவிர்க்க முடியாததாகவும் செய்ய வேண்டிய காலகட்டம் இது.
இன்றைக்கு இளைஞர்கள் நம்பிக்கை நட்சத்திரங் களாக வந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களை ஒருமுனைப்படுத்த வேண்டிய பணி – எங்களைப் போன்ற வயது நிறைந்த இளைஞர்களுக்கு உண்டு.
நெறியாளர்: பெரியார் மண் – திராவிட நாடு என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டில், சனாதனம் என்கிற சொல் இப்பொழுது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது; நிறைய பேரால் பிரகடனப்படுத்தப்படுகிறது; தமிழ் நாட்டை சனாதன பூமி என்று சொல்கிறார்களே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
சனாதனத்தை தமிழ் மண்ணிலே,
பெரியார் மண்ணிலே ஏற்பதாக இல்லை!
தமிழர் தலைவர்: சனாதனம் என்பது மனுதர்மத் திற்கு, ஜாதி தர்மத்திற்கு, வருணாசிரமத்திற்கு மறுபெயர்.
எனவேதான், அந்த சனாதனத்தை இப்பொழுது இங்கே இறைக்கலாம் என்று நினைக்கக் கூடாது. சனா தனம் என்று சொன்னாலே, அது மாறாதது என்று சொல்வார்கள்.
மாறாதது என்பது விஞ்ஞானத்திற்கு, அறிவியலுக்கு விரோதமானது.
மாறாதது என்பது எதுவுமில்லை.
அவர்களேகூட தொலைக்காட்சியிலும், விஞ்ஞான முறைகளிலும்தான் இப்பொழுது தங்களது சனாதனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே தவிர, பழைய காலத்து முறைகளான எழுத்தாணிகள் மூலமாகவோ அல்லது எழுதாக் கிளவியான வேதங் களில் இருக்கக்கூடியவற்றை, ஒப்பிப்பு என்று சொல்லக் கூடிய அத்தியாயனம் செய்தவர்கள் இல்லை.
அவர்கள் இன்றைக்கு நவீன முறையில், மின்னணு முறையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அல்லவா! அங்கேயே சனாதனம் தோற்றுப் போய்விட்டது.
அதுமட்டுமல்ல, இப்பொழுது அந்த முகமூடியைக் காட்டி, வாக்கு வங்கிக்கு ஆட்களை சேர்க்கலாமா? என்பதற்குத்தான் அவர்களுக்கு சனாதனம் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறதே தவிர, அவர்களுடைய சனாதனத்தை, கடவுள் நம்பிக்கையாளர்கள் உள்பட எவரும் இந்தத் தமிழ் மண்ணிலே, பெரியார் மண்ணிலே ஏற்பதாக இல்லை.
நெறியாளர்: திராவிட இயக்கத்தினுடைய சித்தாந்தத் தினுடைய இப்பொழுதைய தலைவர் நீங்கள்; இந் நிலையில், இதை காலாவதியான ஒரு சொல்; அது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கக் கூடிய ஒரு சொல் என்கிற பார்வையும் முன்வைக்கப்படுகிறது; இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏன் இதுபோன்ற விமர்சனங்களை திராவிடத்தோடு பொருத்திப் பார்க் கிறார்கள்?
சமத்துவத்தை, சம வாய்ப்பை
உருவாக்குவதுதான் திராவிடம்!
தமிழர் தலைவர்: பிரிவினை வாதம் என்றால், ஜாதியே பிரிவினைவாதம்தான்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்று ஒரே, ஒரே என்று சொல்லக்கூடியவர்கள், ஏன் ஒரே ஜாதி என்று சொல்லி மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய செயலை செய்ய மறுக்கிறார்கள்.
மண்ணுக்கு ஒருமைப்பாடு பேசுகிறார்களே தவிர, மக்களுக்கு ஒருமைப்பாட்டைப் பேசுவது இல்லையே!
சனாதனம், அந்த ஒருமைப்பாட்டுக்கு விரோத மானது. எதுவரை சனாதன தத்துவம் இருக்கிறதோ, அதுவரை நிச்சயமாக பிரிவினைதான் நிலைத்திருக்கும்.
ஏனென்றால், ஒருவன் உயர்ந்தவன் – இன் னொருவன் தாழ்ந்தவன்.
ஒருவன் படிக்க வேண்டியவன் – இன்னொருவன் படிக்கக் கூடாதவன்.
ஒருவன் தொடக்கூடியவன் – இன்னொருவன் தொடக்கூடாதவன்.
ஒருவன் நெருங்கக் கூடியவன் – இன்னொருவன் நெருங்கக் கூடாதவன்.
அதேபோல, ஆண் உயர்ந்தவர் – பெண் தாழ்ந்தவர் என்று பிறவி பேதத்தையே அடிப்படையாகக் கொண் டதுதான் சனாதனம்.
ஆகவேதான், இந்தக் காலகட்டத்தில் அந்தப் பிரிவினை உணர்வைப் போக்கி, சமத்துவத்தை, சம வாய்ப்பை உருவாக்குவதுதான் திராவிடம்.
நெறியாளர்: திராவிட இயக்கத்தில் தமிழ்நாட்டில் நடைப்பயணம் சென்ற வரலாறு இருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வினர் அண்மைக்காலமாக வெவ்வேறு பெயர்களில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்களே, இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பாத யாத்திரைகள் அல்லது பாதக யாத்திரைகளைக் கண்டு மயங்காது தமிழ்நாடு!
தமிழர் தலைவர்: இதுவரையில் நடைப் பயணங்கள் தான் நடந்திருக்கின்றன; அவை வெற்றிகளைக் கொடுத்திருக்கின்றன. நீதி கேட்டு நெடும்பயணம் என்று சொல்லும்பொழுதே அது தமிழ் வார்த்தைகளில் இருக்கிறது.
ஆனால், தமிழ் மொழிக்கே சம்பந்தமில்லாமல், ”பாத யாத்திரை” என்று சொல்லி, யாத்திரைப் போகக் கூடியவர்கள், அதுவும் தங்களுக்காக யாத்திரைப் போனதாகத்தான் வரலாறு இருக்கிறதே தவிர, மக்களுக்காகவோ, மண்ணுக்காகவோ அவர்கள் யாத் திரைப் போனதில்லை. தங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று நினைத்துத்தான் யாத்திரை போவார்கள்.
மக்களுக்காக யாத்திரை போவது கிடையாது. இரண்டாவதாக ”யாத்திரை” என்ற சொல்லும், ”பாத யாத்திரை” என்ற சொல்லும் எதைக் காட்டுகின்றன? அவர்களுக்கு இன்னமும் தமிழ்மொழிப் பிடிப்பு, தமிழ் ரத்தம், தமிழ் உணர்வு அவர்களிடம் கலந்ததில்லை என்பதையே காட்டுகின்றன.
நடிப்பிற்குப் பேசும்பொழுது, உண்மை அங்கே வெளியே வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
எனவேதான், நடைப்பயணங்களைப் பார்த்து, வெற்றுப் பரப்புரைகளைப் பார்த்து, பக்குவப்பட்டது இந்தத் தமிழ் மண்! பாத யாத்திரைகள் அல்லது பாதக யாத்திரைகளைக் கண்டு மயங்காது. நிச்சயமாக எந்தப் பயனும் எவருக்கும் தராது.
அது எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது!
நெறியாளர்: ”பெரியார் பணி முடிப்போம்” என்று எப்பொழுதுமே உங்கள் உரையை முடிப்பீர்கள்; இன்னும் முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய ”பெரியார் பணி” என்றால், எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?
பெரியார் பணி என்பது, அது சமூக நோய்க் கிருமிகள் இருக்கின்றவரையில் தொடரவேண்டிய பணி!
தமிழர் தலைவர்: கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கின்ற வரையில், கடைசி நபர், சமூகநீதிக்கு எதிராக இருக்கின்ற வரையில், கடைசி, ஜாதி வெறியன், மதவெறியன் இருக்கின்ற வரையில், அந்தப் பணி தொடரவேண்டும்.
எப்படி அறிவியலில், மருத்துவயியலில் நோய்க் கிருமிகள் உள்ளவரையில் மருத்துவம் தொடரவேண் டுமோ – அதுபோலத்தான், பெரியார் பணி என்பது, அது சமூக நோய்க் கிருமிகள் இருக்கின்றவரையில் தொடரவேண்டிய ஒரு சமூக சித்தாந்தம், தத்துவம், நடைமுறை.
காரணம் என்னவென்றால், நோய் இல்லாத நேரத்தில்கூட மருத்துவமனைகள் கண்காணிப்போடு இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது அல்லவா, அதே நிலைதான் இப்பொழுது.
நெறியாளர்: ‘இந்தியா’ கூட்டணி தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மவுனம் கலைக்கமாட்டேன் என்கிறார் என்று இந்தியா கூட்டணி விமர்சனம் செய்கிறார்களே?
யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கவேண்டியது அவசியம்!
தமிழர் தலைவர்: இந்தியா என்பது பன்மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், பல கருத்துகளுக்குச் சுதந்திரம் இவையெல்லாம் இணைந்த ஒரு பகுதி.
அரசமைப்புச் சட்ட ரீதியாகக் கூட அது மாநிலங் களைப் பொறுத்தது.
ஆனால், ‘இந்தியா’ என்ற பெயரில், ஜனநாயகத் தைக் காப்பாற்றுவதற்காக – அரசமைப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்காக இன்றைக்குக் கூட்டணியாக சேர்ந்திருக்கிறார்கள்.
எனவே, நாட்டாலும் இந்தியர்களாக, கூட்டணியால் ‘இந்தியா’ என்பதின்மூலமாக – இன்றைக்கு மறைக்கப் பட்டு, அழிக்கப்பட்டு வரக்கூடிய ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்கிற முறையிலும்கூட, இன்றைக்கு அது தேவையானது.
அந்த வகையிலேதான், மாநிலங்கள் என்பவை இணைந்த ஓர் இணைப்புதான் கூட்டாட்சி என்ற அடிப்படையில்தான், இந்தியா என்ற கருத்து – அரச மைப்புச் சட்டக் கர்த்தாக்களாலே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாக இருப்பது என்னவென்றால், ”India that is Bharat shall be Union of State” என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
எனவே, அது ஒரு கூட்டாட்சி. அது எப்படி பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் இருக் கின்ற நேரத்தில், ஒரு கூட்டாட்சியாக வந்திருக்கிறதோ – அதேபோலத்தான், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பதுதான் அதனுடைய தத்துவம். அரசியலிலும் அதே கருத்துடையது.
பல கருத்துகள் இருந்தாலும், பொது எதிரி யார்? என்ற ஒற்றுமை இருக்கிறது. யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கவேண்டிய அவசியம் காலத்தால் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது என்பதால்தான், நாட்டால் இந்தியாவாக இருந்தாலும், கூட்டாக அரசியலில் ‘இந்தியா’ என்ற பெயர் பெற்றதாக இருந்தாலும், இரண்டும் பாதுகாக்கப்பட்டு, வெற்றி பெறவேண்டியதாகும்.
நெறியாளர்: தமிழர்களுடைய மிக முக்கிய அடையாளம் தமிழ்மொழிதான். ஆனால், இந்தத் தமிழ்மொழியை பன்னாட்டளவில் பிரபலப்படுத் துவதிலும், கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் பிரதமர் மோடியின் பங்களிப்பு மிகப்பெரியது என்று பா.ஜ.க. வினர் குறிப்பிட்டுப் பேசுகிறார்களே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
”வழியால் தமிழர்கள் – விழியால் தமிழர்கள்!”
தமிழர் தலைவர்: இன்னமும் தமிழ் என்பது வெறும் மொழியாக மட்டும் நில்லாமல், தமிழ் என்பது நம்முடைய பண்பாட்டிற்குத் திறவுகோல் – பண்பாட்டிற்கு அடையாளம் என்ற அளவில் இருக்கின்ற காரணத்தால்தான், இருக்கவேண்டிய அவசியத்தால்தான் – ”எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று சொல்லுகின்ற நேரத்தில், கோவில்களில் தமிழ் இருக்கிறதா? நம் வீட்டு நிகழ்ச்சிகளில் தமிழ் இருக்கிறதா? நம் வீட்டுப் பிள்ளைகளின் பெயர் களில் தமிழ் இருக்கிறதா? என்று நான் முன்பே சுட்டிக் காட்டினேன்.
ஆகவேதான், நம்முடைய அடையாளம் தமிழ் என்று மொழியால் மட்டுமல்ல. பண்பாட்டாலும்தான்.
தமிழர்கள் வாழ்ந்தால், அதிலிருந்துதான் தமிழ் வாழ முடியும் என்ற அடிப்படையில், தமிழர்கள் என்பது மொழியால் மட்டுமல்ல – அண்ணா அவர்கள் சொன்னதைப் போல, ”வழியால் தமிழர்கள் – விழியால் தமிழர்கள்” என்று அழகாகச் சொன்னார்கள்.
மொழியால் தமிழர்கள் என்பது வெளிப்படை யானது; வழியால் தமிழர்கள் என்பதுதான் அது. பண்பாட்டு அடிப்படையில். விழியால் தமிழர்கள் என்பது, அவர்கள் எப்பொழுதும் கவனத்தோடு, எதிரிகள் எந்தெந்தப் பக்கத்திலிருந்து எப்படியெல்லாம் நுழைகிறார்கள்? என்னென்ன செய்கிறார்கள்? என்ப தைப் பொருத்தது.
ஆகவேதான், இந்தச் சொல் மிக முக்கியம். அதையே அடையாளமாகக் கொண்டால், மொழியால் தமிழர்கள் – வழியால் தமிழர்கள் – தங்கள் விழியால் தமிழர்கள் – பார்வை, கண்ணோட்டம் என்ற அடிப் படையில்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.