ஸ்டாக்ஹோம், அக்.8 நடப்பு ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இரு ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் தான் இந்தாண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் மற்ற பிரிவுகளிலும் யார், யாருக்கு நோபல் பரிசு என்பது தெரிய வரும்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். அந்த துறைகளில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்தோருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படும்.
நோபல் பரிசு: இந்த நோபல் பரிசுகள் துறை ரீதியாக வழங்கப்படும்.
முதலில் எப்போதும் மருத்துவத்திற்கான நோபல் பரிசே வழங்கப்படும். அதன்படி இப்போது 2024ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்ஸ் பரிசுத் தொகையாக வழங்கப்படும். சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள தேர்வுக் குழு இந்த விருது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த இரு அமெரிக்க ஆய்வாளர்கள் மைக்ரோஆர்என்ஏவைக் கண்டுபிடித்ததற்காகவும், டிரான்ஸ்கிரிப்ஷனலுக்குப் பிறகு (post-transcriptional) மரபணு ஒழுங்குமுறையில் இந்த மைக்ரோ ஆர்என்ஏ எந்தளவுக்கு உதவுகிறது என்பதையே இவர்கள் கண்டுபிடித்தனர்.
அதாவது நமது குரோமோசோம்களில் உள்ள தகவல்கள் தான், நமது செல்கள் அனைத்திற்கும் ஒரு கையேடாக (instruction manual) செயல்படுகிறது. ஒருவர் உடலில் இருக்கும் அனைத்து செல்களும் ஒரே மரபணுக்களைக் கொண்டிருந்தாலும், தசை & நரம்பு போல சில வகை செல்களுக்கு மட்டும் தனித்துவமான பண்புகள் இருக்கும். இது மரபணு வெளிப்பாட்டின் கட்டுப்பாடு (ஜீன் ரெகுலேஷன்) மூலம் நடக்கிறது. ஒவ்வொரு செல்லும் தனக்குத் தேவையான மரபணுக்களை மட்டுமே செயல்படுத்துகிறது.
மரபணு வெளிப்பாட்டின் கட்டுப்பாடு: இதை வைத்து எப்படி பல வகையான செல்கள் உருவாகிறது என்பதில் இருவருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய தீவிர ஆய்வில் தான மைக்ரோ ஆர்என்ஏக்களை கண்டுபிடித்தனர். மரபணுவை ஒழுங்கு முறைப்படுத்துவதில் இந்த ஆர்என்ஏ முக்கிய பங்கு வகிக்கிறது.. அவர்களின் கண்டுபிடிப்பு தான் முன்பு கூறிய ஜீன் ரெகுலேஷன் குறித்து நாம் தெரிந்து கொள்ள உதவியது.
டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 1901ஆம் ஆண்டு முதல் அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றிற்றுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1968 முதல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய விஞ்ஞானி கடலின் கரிகோ அமெரிக்க சக ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.. கரோனாவை கட்டுப்படுத்த தங்கள் கண்டுபிடிப்பு மூலம் உதவியதற்காகக் கடந்தாண்டு இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.