நவராத்திரி என்னும் இந்து மத விழா தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. முற்றிலும் மூட நம்பிக்கையின் புகலிடம் அது!
பொதுவாக இது போன்ற விழாக்களில் இறுதி நாளில் அல்லது துவக்க நாளில் வாழ்த்து கூறுவதுண்டு.
ஆனால் பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல மைச்சரான சாமியார் ஆதித்யநாத்தும் இந்த 9 நாளும் விதவிதமான காணொலிகளை சமூகவலைதளங்களில் அனுப்புகின்றனர்.
நேற்று பிரதமர் மோடி அனுப்பிய 3 நிமிட காணொலி என்ன கூறுகிறது? ‘‘உலகம் தோன்று வதற்கு முன்பு எங்கும் இருட்டு நிறைந்திருந்தது.
அந்த இருட்டு உலகை ‘தேவி கிருஷ் மாண்டா’ ஆட்சி புரிந்தார். அவர் சூரியனை அடக்கியாண்டுகொண்டு இருந்தார். ஆகையால் அக்னி இல்லாமல் போனது,
பின்னர் அவருக்கு உலகை உருவாக்கும் ஆணையை சர்வமாக சக்தி கொடுத்தார். இதனால் அவர் சூரியனை விடுவித்தார். பின்னர் பிரம்மாவைப் படைத்து உயிரினங்களை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார் விஷ்ணுவைப் படைத்து பிரம்மா படைத்த உயிரினங்களைக் காக்கும் பணியை ஒப்படைத்தார். சிவனைப் படைத்து உலகில் உயிரினங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அழிக்கும் பணியை ஒப்படைத்தார்.
பின்னர் ஆதிசக்தி ஜெகதாம்பாவிடம் உலகைப்படைத்துவிட்டேன் என்று கூறியதும் மீண்டும் ஆதிசக்தி அவருக்கு ஒரு இருண்ட வேறு ஒரு உலகைப்படைத்து அங்கு அவரை ஆட்சி செய்ய அனுப்பிவைத்தார்’’ என்று சமஸ்கிருத ஸ்லோகங்களோடு ஹிந்தி விளக்கமும் கொடுத்திருப்பது அந்த 3 நிமிட காணொலியில் வருகிறது.
இந்திய அரசமைப்பு சட்டப் புத்தகத்தைக் கையில் ஏந்தி முத்தமிட்டு ‘இனி நான் இதன் படி நடப்பேன்’ ‘என்று’ கலங்கிய கண்களோடு 3 ஆவது முறையாக பதவி ஏற்றார்.
ஆனால் நடப்பது என்ன? தேர்தலின் போதும் கோவில் கோவிலாக சென்றார்.
பதவி ஏற்ற பிறகு ஒன்று வெளிநாடு செல்கிறார். இல்லையென்றால் கன்றுக்குட்டி மற்றும் மயில், வாத்துகளோடு, தான் இருக்கும் காட்சிகளை சமூகவலைதளங்களில் பரப்புகிறார். விழாக்காலம் என்றால் இது போன்ற கட்டுக்கதைகளை காணொலியாக அனுப்புகிறார்.
சிறுவயதில் இருந்தே மோடி நவராத்திரியில் விரதமிருப்பாராம், இந்த 9 நாளும் வெறும் இளநீர் மற்றும் ஊறவைத்த அரிசி சிறிது வெல்லம் சேர்த்து உண்பாராம். இது அவரே கூறியது.
அதே போல் சாமியார் ஆதித்யநாத்தும் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்.
புத்த ஜாதகக் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம்.
அவை எல்லாம் வெறும் தூசு என்கிற அளவுக்கு ‘மோடி ஸ்தல புராணம் – பக்தியில் மூழ்கியிருக்கும் பாமர மக்களிடம், கொண்டு சேர்க்கப்படுகிறது.
ஆண்டாண்டு நவராத்திரி நடந்து கொண்டு தான் இருக்கிறது. கொலு பொம்மைகளும், சக்தி, செல்வம், கல்விக் கடவுள்களுக்கும் (மூன்று பெண் கடவுள்கள் முறையே பார்வதி, லட்சுமி, சரஸ்வதி), தடபுடலாக விழா நடந்து கொண்டு தான் இருக்கிறது.
கரோனாவைத் தடுக்க முடிகிறதா? வர்தா போன்ற புயல்களைத் தடுக்க முடிகிறதா? கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் விபத்தில் மரணம் அடைவதைத்தான் நிறுத்த முடிகிறதா?
கோயிலுக்கும் கோயிலுக்குள் இருக்கும் கடவுள் என்று சொல்லப்படும். சாமி சிலைகளுக்கும் பாதுகாப்புக் கொடுக்கப்படும் நிலை தானே. தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட கடவுள் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் அல்லவா காட்சி அளிக்கின்றன. அயோத்தி ராமன் கோயில் கட்டப்பட்டுள்ள பைசாபாத் தொகுதியில் பிஜேபி தோற்றது ஏன்? மோடி வித்தைகள் இனி பலிக்காது.