பெரம்பலூர், அக்.8- பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 51ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா நேற்று முன்தினம் (6.10.2024) நடந்தது. விழாவிற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றி தரப்படும்.
பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவை முற்றிலும் தடுக்கப் படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் முறையில் தலைமைப் பண்பை வளர்க்கின்ற விதமாக மாதிரி சட்டமன்றம், மாதிரி நாடாளுமன்றம் ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிபவர்கள் மீது புகார்கள் வந்தால் அவற்றில் உண்மைத் தன்மை இருக்கின்ற பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
கோவிலில் தாலியைத் திருடிய அர்ச்சகர் கைது!
திருவனந்தபுரம், அக். 8- கேரளத்தில் முத்துமாரி அம்மன் கோவிலில் நகை திருடியதாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், மணக்காட்டில் முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ளது. இங்கு அருண் (33) அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் கோவிலில் இருந்து 3 சவரன் தங்க நகையை திருடியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக 5.10.2024 வழக்குப் பதிவு செய்யப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அர்ச்சகர் தங்கத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாகவும், அடகு வைத்து பணத்தை வாங்கியதை ஒப்புக்கொண்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
திருடிய நகையை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் கூறினர். இந்நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடை செய்யப்பட்ட மருந்துகள்
அய்.பி.சி. விழிப்புணர்வு முயற்சி
அய்தராபாத், அக். 8- தடை விதிக்கப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப் படுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றை பல மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு இது போல மருந்துகள் பரிந்துரைக்கப்படுவது வெகுகாலமாக நடந்து வருகிறது.
குறிப்பாக நிம்சுலைடு எனும் வலி நிவாரணி மருந்து, கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருளை உருவாக்குவது தெரியவந்தது. எனவே இந்த மருந்தை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் 13 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்திருந்தது. ஆனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கும் அய்.பி.சி. சமீபத்தில் நடத்திய ஆய்வில், நிம்சுலைடு மருந்து தற்போதும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருவது தெரியவந்தது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்கும் அய்.பி.சி. தற்போது போஸ்டர்கள் மூலம், மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுமார் 13 ஆண்டு தடைக்கு பிறகும் இந்த மருந்துகள் விநியோகத்தில் இருப்பது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.