சென்னை, ஆக. 3 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக ரூ.23.84 கோடி செலவில் வாங்கப்பட்ட 253 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு நேற்று (2.8.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் செயல் படுத்தப்படும் பணிகளின் தரத்தை கள அலுவலர்கள் கண்காணிக்கவும், உரிய காலத்தில் பணி முடிக்கப்படுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. பணிகளை திறம்படக் கண்காணிக்க ஏதுவாக புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
10 வாகனங்கள்
அந்த அறிவிப்புக்கிணங்க, ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.23.84 கோடி மதிப் பில் 253 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்டஅலுவலர்கள், செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் வகையில் 10 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, எ.வ.வேலு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி செயலர் ப.செந்தில்குமார், ஊரக வளர்ச்சி இயக்குநர் பி.பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.