கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதியில் ஏற்படும் சேற்றுப் புண்ணை குணப்படுத்தும் சித்த மருத்துவ முறைகளை பார்ப்போம்.
சேற்றுப் புண் அல்லது “அத்தலட்ஸ் புண்” என்றழைக்கப்படும் “டீனியா பெடிஸ்” என்னும் பூஞ்சை வகை நோய். வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் மழைக்காலங்களில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கு இந்த நோய் அதிகமாக வரும்.
குறிப்பாக, நீண்ட நாள் தேங்கிய தண்ணீர், கழிவு நீர் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நுண்கிருமிகளின் தொற்றினால் சேற்றுப்புண் உருவாகிறது. கால் விரல் இடுக்குகளில் (சவ்வு பகுதியில்) வெளுத்த நிறமுடைய புண் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும். சொறிந்த பிறகு எரிச்சல் இருக்கும்.
இந்த பாதிப்பை சித்த மருத்துவம் மூலம் எளிதில் சரி செய்யலாம்.
1. பரங்கிப்பட்டை சூரணம்-1 கிராம், கந்தக பற்பம் -200 மிகி, சிவனார் அமிர்தம் -200 மிகி, பலகரை பற்பம் -200 மிகி வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
2. சேற்றுப் புண் உள்ள பகுதிகளில், அமிர்த மெழுகு, கிளிஞ்சல் மெழுகு, வங்க வெண்ணெய்… இவற்றில் ஒன்றை பூசி வர வேண்டும்.
3. கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய் போன்ற துவர்ப்புள்ள பொடிகளால் புண்ணை கழுவி சுத்தம் செய்யவேண்டும்.
4. புண்ணை கழுவுவதற்கு புளியந்தளிர் அவித்த நீர், படிகார நீர், வேப்பந்தளிர் அவித்த நீரையும் பயன்படுத்தலாம்.
5. காலை மற்றும் இரவில் கால்களை வெந்நீரில் கழுவி சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும்.