தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்டம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூர் வருகை புரிந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு விழா போன்றும், பெரியார் அவர்கள் இருக்கும் போதே அந்த காலகட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா சிறப்பான முறையில் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டதை நினைவுக் கூரும் வகையிலும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.. காரணம் சிங்கப்பூரில் பெரியார் பிறந்தநாள் விழா முதன்முறையாக சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது, அதுவும் அரங்கம் நிறைந்து 200க்கும் மேற்பட்டவர்கள் வாரநாட்களில் கலந்துகொண்டது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சிங்கப்பூரில் தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதும் இதுவே முதல் முறை.
அதனால் வந்திருந்த அனைவரும் பெரியார் படத்துடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டு விழா பற்றிய செய்தியை படத்துடன் தங்களுடைய முகநூலில் வெளியிட்டு மகிழ்ந்தார்கள், அவைகளில் சில பதிவுகள் கீழே:
வள்ளியப்பன்-செல்வமணி
23 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் முறையாக பெரியார் பிறந்த நாள் விழா அன்று – நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் என் மனைவிக்கும் கிடைத்தது.
17ஆம் தேதி காலை 3 மணி அளவில் தான் வீரமணி அய்யா ஜப்பான் நாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தார். 90 வயதிலும் வீரமணி அய்யாவின் சிரித்த முகமும் துடிப்பான நடையும் எங்களை வியக்க வைத்தது. நிகழ்வு தொடங்கிய 7 மணிக்கு வந்த அவர் நிகழ்ச்சி முடிந்து அனைவருடன் தனித் தனியாக பேசிய பிறகே இரவு 10 மணியளவில் திரும்பிச் சென்றார்.
அரசியல் அனுபவமும் படிப்பு அறிவும் மிக்க அவர் என்னிடம் “பேச்சு சரியாக இருந்ததா” என்று கேட்ட போது அவரது பெருந்தன்மையை எண்ணி பிரமித்துப் போனேன் . என் வயதை விட அவர் அனுபவம் மிகப் பெரிது. எனக்கு அரசியல் அறிவும் குறைவுப் படிப்பறிவும் குறைவு. அப்படிப்பட்ட என்னிடம் அவர் கேட்ட இந்த கேள்வி என்னை மேலும் வியக்க வைத்தது. நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த போது ஆசிரியரை விட வயது குறைந்த சுப. திண்ணப்பன் அவர்கள் உள்ளே வந்த போது ஆசிரியர் எழுந்து சென்று அவரை உள்ளே அழைத்து வந்தார்.
ஆசிரியர் அவர்களின் தன்னடக்கத்தையும் தமிழர்கள் மீது அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பையும் கண்டு நெகிழ்ந்து போனேன். ஆகமொத்தம் நேற்றைய நிகழ்வு எங்களுக்கு ஒரு பெரிய படிப்பினையாக இருந்தது. ஆசிரியர் மேலும் பல்லாண்டுகாலம் நல்ல உடல் நலத்துடன் இருந்து அனைவரையும் வழி நடத்த வேண்டும்
சாமிநாதன் மதியழகன்
ஆசிரியர் கி. வீரமணி அய்யா பெரியாரின் கருத்துகளாக வழங்கிய சில முத்துக்கள்.
– “நம் நாட்டு நாணயம் எப்படி இங்கே செல்லாதோ அப்படி நம் அரசியலும் இங்கு செல்லாது” என்று வெளி நாடுகளுக்குச் செல்லும் போது தமிழ்நாட்டு அரசியல் பற்றி கருத்துக் கூட தெரிவிக்காமல் தெளிவாக இருந்தார் பெரியார் என்றார் ஆசிரியர்.
“மருந்துக்கே காலாவதி நாள் உள்ளது. கருத்துக்கும் காலாவதி நாள் இருக்காதா? “ என்று சாதாரண மக்களிடம் எளிய உதாரணங்களைக் கேள்விகளை முன் வைத்து சிந்திக்க வைத்தார் பெரியார்.
– “மனிதன் தானாகவும் பிறக்கவில்லை – தனக்காகவும் பிறக்கவில்லை – சமுதாயத்துக்காகப் பிறந்தவன்” என்பதும் பெரியாரின் தெளிவான சிந்தனை என்றார் ஆசிரியர்.
92 வயதில் ஜப்பான் வரை பயணம் செல்வதும் இங்கு வந்து வந்து இவ்வளவு தெளிவாக உரை வழங்குவது, எல்லாம் எப்படி ஆசிரியரால் முடிகிறது என வியக்க வைத்தன.
அய்யாவின் உடல் நலம் பேணும் கலைக்கு, என் தலை வணங்குகிறது.
சுந்தர் ராட்ஸ்
தமிழ்நாட்டின் ‘பகுத்தறிவு – சுயமரியாதை’ மேடைகளில், தனது பத்து வயதில் இருந்து இன்று வரை பயணித்து வரும், திராவிட இயக்கத்தின் சுடரொளி ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை,
திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் பெரியாரால் 1962 இல் நியமிக்கப்பட்டவர். பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார்.
1962′ இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து சிறப்பாக பணி செய்து வருகிறார். தனது 90 வயதிலும், கருத்துகள் தெளிவாக! சான்றுகளோடு விளக்கும் தலைவர்!
சிங்கப்பூருக்கு பலமுறை பயணித்து இருக்கும் ஆசிரியர். சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் வேரூன்றவும் தீவு முழுவதும் தமிழ் ஒலிக்கவும் செய்தவர் கோ.சா என்றழைக்கப்படும் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களுடன் நட்புடன் பழகியவர்
இவர் நேரடியாக சந்தித்து தோழமையுடன் இருந்த தமிழ் தலைவர்கள் பலர். பெரியார், அண்ணா, கலைஞர்…..
இவருடன் அடியேன் நான் ஒரு புகைப்படம் எடுத்து கொண்டது மகிழ்ச்சி!
சிங்கப்பெண் மகாஜாபீன்
என்னவொரு ஆச்சரியம் என்றால்!!!
ஒரு வார நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரளாக வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டது தான் ஆக சிறப்பான ஒன்று.
தந்தை பெரியார் கொள்கைகளை விரும்புவர்களும், *டாக்டர் கி. வீரமணி” அய்யா அவர்கள் ஆற்றிய பெரியாரின் சிந்தனைக் கருத்துகளை செவிமடுக்க வந்த தமிழ் ஆர்வலர்களால் தானா சேர்ந்த கூட்டம் இது.
தந்தை பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் மற்றும் செயலவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அழைப்பிதழை அனுப்பி நம்மை வரவேற்றது பாராட்டதிற்குரியது..
தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பும் பண்பும் கொண்டவர்களால் மட்டுமே தன்னுடைய வேலைப் பளுவை தாண்டியும் இப்படி ஒரு சிறப்பான நிகழ்வில் கலந்து கொள்ள முடியும். நானும் அப்படியே!!!!!
வளர்தமிழ் இயக்கத்தின் 2025இன் தமிழ்மொழிவிழாவின் ஆலோசனைக் கூட்டமும் 16ஆவது மாடியில் (THE POD) நடைபெற்றதால் அது முடிந்த பிறகு பல அமைப்பின் தலைவர்கள், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பலரும் கலந்து கொண்டு மேலும் நிகழ்வுக்கு பெருமை சேர்த்தனர்.
ஆக மொத்தத்தில் மிகச் சிறப்பான ஒரு நிகழ்வை வார நாட்களில் கண்டு களித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி..
அன்பும் நன்றியும்.
அகமது மீரான் மொகமது பிலால்
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு தமிழ்நாடு திரும்பும் வழியில் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சிங்கப்பூர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். நூலைப் பற்றிய அவருடைய சிறப்புரைக்கு முன்பாக பேராசிரியர் சித்ரா சங்கரன், திரு அருண் மகிழ்நன், பல்கலைக்கழக மாணவி அருணா கந்தசாமி ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. சிறப்பான நூல் அறிமுக நிகழ்வாக அமைந்தது.
தியாக ரமேஷ்
இந்த செம்மாந்த நிகழ்வில் *டாக்டர் கி. வீரமணி” அய்யா அவர்கள் சிறப்புரை ஆற்றி பெரியாரின் சிந்தனைக் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்..
படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், அமைப்பின் தலைவர்கள் என்று பலரும் கலந்து கொண்டு நிகழ்வுக்கு பெருமை சேர்த்தனர்.
சீர்காழி செல்வராஜு
திரு அருள் மகிழ்நன் மற்றும் நளினா கோபால் தொகுத்த ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்காசிய சிங்கப்பூரிலும் தமிழர்’ என்ற தமிழர் வேரூன்றிய மாபெரும் ஆவணநூல் பற்றிய சிறப்பாய்வு நடைபெற்றது.
இந்த நூலுக்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு என்பதை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தரும் திராவிடர் கழகத் தலைவருமான அய்யா கி.வீரமணி அவர்களின் சிறப்புரையில் முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார்கள்.
விழா ஏற்பாட்டை தேசிய நூலகமும் பெரியார் சமூகச் சேவை மன்றமும் செய்தன.
நிகழ்ச்சி நெறியாளர் திருமதி தமிழ்செல்வி இராஜராஜன் மற்றும் தலைவர் பூபாலன் அவர்களைச் சார்ந்த அமைப்பு உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
ராஜராஜன், ஆர்.ஜே.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூக நீதி நாளில், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வியக்க வைக்கும் சிறப்பான வரலாற்று பேருரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது!
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வார்களாம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் குடும்பம். அப்போது முனைவர் சித்ரா சங்கரன் (நாவலரின் பேத்தி) ஒரு சிறுமி. காரை விட்டு இறங்கியதும் அங்கே இருக்கும் குளிரை தாங்க முடியாமல், நான் காருக்குள்ளேயே இருந்துக் கொள்கிறேன் என்பாராம்.
அப்போது, அவரது அம்மா, அங்கே பார் என்று காண்பிப்பாராம். அங்கே, தந்தை பெரியார் ஒரு கம்பளியை சுற்றிக்கொண்டு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பாராம்.
அவர் அம்மா சொல்வாராம்.. பார், இந்த தள்ளாத வயதிலும், அய்யா நமக்காகத் தானே பேச வந்திருக்கிறார். நாம் அவரது பேச்சை கேட்க வேண்டாமா என்று சொல்லி அழைத்து செல்வாராம்.
அந்த சிறுமியின் உள்ளத்தில் பெரியார் எந்தளவுக்கு விதையாக விழுந்தார் என்பதை, நேற்று, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் அவர்கள் பேசிய போது உணர முடிந்தது!
மேலும் அவரின் பேச்சில், அய்ரோப்பாவில் எழுந்த மறுமலர்ச்சி காலம் என்று சொல்லப்படும் “Renaissance” காலத்தை குறித்து பேசி, அது எந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் கலை, அறிவியல் குறித்தான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என சொல்லிவிட்டு…
ஆங்கில உலகம், இந்தியாவை குறித்து பேசும் போது, வங்காளத்தையே இந்திய மறுமலர்ச்சிக்கான குறியீடாக சொல்கிறார்கள். அதாவது ராஜாராம் மோகன் ராயில் இருந்து தாகூர் வரை வாழ்ந்த காலத்தில் வங்காளத்தில் எழுந்தது ஒரு இந்திய மறுமலர்ச்சி காலம் என்றே அவர்கள் பேசுகிறார்கள்.
ஆனால், சரியாக யோசித்தால், தந்தை பெரியார் செய்தது தான் உண்மையான மறுமலர்ச்சி என்று பேசினார். பெரியாரை ஒரு சமூக சீர்த்திருத்தவாதி என்னும் தளம் வரை பேசும் பலரும், அவர் செய்த “சிந்தனை கிளர்ச்சியை” குறித்து பேசுவதில்லை என்றார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இத்தனை பெண்கள் இரவில் இத்தனை ஆண்களோடு நின்று போராடுகிறார்களே.. எந்த வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லையே.. எப்படி இவர்களின் பெற்றோர்கள் அனுமதித்தார்கள் என்றெல்லாம் வியப்போடு ஒரு வட இந்திய தொலைக்காட்சி நிருபர் உரக்க கேள்வியெழுப்பிக்கொண்டு இருந்த போது.. முனைவர் சித்ரா சங்கரன் – மனதிற்குள் பெரியார் தான் காரணம் என்று சொன்னாராம்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை கிளர்ச்சி என்பதை மறுமலர்ச்சி காலம் அதாவது “Tamil Renaissance” காலம் என்று சொல்லி நாம் பேச வேண்டிய, ஆய்வு செய்ய வேண்டிய தேவையை அவரது பேச்சு உணர்த்தியது.
இந்தியாவின் மறுமலர்ச்சி காலம் என்பது பெரியாரின் காலம் என்பதை உரக்க சொல்வோம். முறையான ஆய்வுகளம் நடத்த அரசும் அறிவுசார் உறவுகளும் உதவி செய்ய வேண்டும்!
கருணா கசாய்
சிங்கப்பூரில் பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில்
நரசிம்மன், நரேஷ் & வெற்றி
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளான சமூக நீதி நாளில், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் வியக்க வைக்கும் சிறப்பான வரலாற்று பேருரையை கேட்கும் வாய்ப்பும்,
அத்துடன், திரு.அருண் மகிழ்நன் மற்றும் நளினா கோபால் தொகுத்துள்ள “ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் தென்கிழக்கு ஆசியாவிலும் சிங்கப்பூரிலும் தமழிர்” என்ற நூலின் தொகுப்புரை கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது!!
யூசூப் ரசீது
பேராசிரியர் வீரமணி அவர்களோடு ஒரு மகிழ்வான தருணம்.
தொகுப்பு:
க.பூபாலன், சிங்கப்பூர்