சென்னை, அக்.7- மூளைச் சாவு அடைந்த நபரின் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டதில் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இது தொடா்பாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வா் மருத்துவர் எ.தேரணிராஜன் கூறியதாவது:
சென்னை, புழல் அருகே உள்ள கதிா் வேடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயராஜ்(47). ரத்த அழுத்த பாதிப்பு உள்ள இவா், கடந்த 3-ஆம் தேதி தூக்கத்திலிருந்து விழித்தெழும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட விஜயராஜ்-க்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவை பலனளிக்காத நிலையில், உயா் சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இங்கு வரும்போதே அவருக்கு சுயநினைவு இல்லை.
எம்ஆா்அய், சிடி ஸ்கேன் உள்பட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை குணப்படுத்துவதற்கான, உயா் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும் அவை பலனளிக்காமல் அவா் மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து விஜயராஜின் உடல் உறுப்புகளை கொடையளிக்க அவரது உறவினா்கள் முன்வந்தனா். அதன் அடிப்படையில், இரு சிறுநீரகங்கள், கால் எலும்புகள், விழி வெண்படலம் ஆகியவை கொடையாகப் பெறப்பட்டன.
அதில், ஒரு சிறுநீரகம் மற்றும் கால் எலும்புகள் ராஜீவ் காந்தி மருத்துவ மனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், விழி வெண்படலம் எழும்பூா் அரசு கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இதனால் நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. உறுப்புகளை கொடையளித்து, உயிா் துறந்த விஜயராஜின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் அவருக்கு மரியாதை செலுத்தினா் என்றாா் அவா்.