துரை. அருண்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்
இந்த மலர் பணிகள் நடக்கும்போது ஒரு நாள் மாலை வேளையில் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அய்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது அப்போது கவிஞர் அய்யா சொன்னார். இந்த பெரியார் பிறந்த நாள் மலர் தயாரிப்பு பணி என்பது எங்களுக்கு பேறு காலம் போன்றது என்றார் – ஆசிரியர் மலரின் செய்திகளை படித்துக்கொண்டு இருக்கும்போதே தலைக்கு அருகில் வைத்து அப்படியே தூங்கி விடுவார் என்றார், பெரியார் பிறந்த நாள் தயாரிப்பு பணியின் போது நள்ளிரவை கடந்துவிட்டால் அண்ணாசாலையில் தேநீர் குடித்துவிட்டு ஆசிரியரின் இல்லத்திற்கு நடந்தே செல்வோம் என்றார் ஆம் தற்போது – 146 ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்த நாள் மலரை படிக்கும்போது உணர முடிகிறது உண்மையில் ஒரு குழந்தையை எப்படி பெற்று எடுப்பார்களோ , ஒரு தாய் என்ன மன நிலையில் இருப்பாரோ அத்தகைய மன நிலையில் பெரியார் பிறந்த நாள் மலர் வெகு சிறப்பாக வர வேண்டும் என்றும் – அதில் வரும் செய்திகளை படிப்பவர்களை இந்த சுயமரியாதை இயக்கம் என்ன சாதனைகள் செய்துள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும், தந்தை பெரியார் வைதிக மதத்தால் பாதிக்கப்பட்ட இந்த தமிழ் சமூகத்தை சுயமரியாதை உள்ள சமூகமாக பகுத்தறிவு ஊட்டி எவ்வாறு மீட்டெடுத்தார் அவரின் அடியொற்றி செயல்பட்ட சுயமரியாதை இயக்க வீரர்கள் எத்தகைய தியாகத்தை செய்த கருப்பு மெழுகுவர்த்திகள் என்று படம் பிடித்துக் காட்டும் ஒரு மலராக பிறந்த நாள் மலரை கொண்டு வர வேண்டும் என்ற உயரிய நோக்கில்
“பசி நோக்காது, கண் துஞ்சாது யாதொரு மெய் வருத்தம் பாராது- அய்யா பெரியாரின் பிறந்த நாள் மலர் சிறப்புடன் வர வேண்டும்”
என்ற ஒற்றை நோக்குடன் செயல்பட்டது புரிகிறது.
குறிப்பாக விடுதலை மலரை சிறப்புக்குள்ளாக்கிய சில பகுதிகளை கோடிட்டு காட்ட விழைகிறேன் .
இந்த மண்ணில் எத்தகைய மாற்றத்தை திராவிடர் இயக்கம் – சுயமரியாதை இயக்கம் – நீதிக் கட்சி கொண்டு வந்தது என்பதை இந்த பெரியார் பிறந்த நாள் மலரின் ஊடக அறியலாம் அதாவது
அய்யா பெரியாரை பாதுகாப்பதே எம் பெரும்பணி என்று அவருக்கு விழும் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கூட கிள்ளித் தன் தலையில் வைக்காத அன்னை மணியம்மையார் என்றார் பாவேந்தர் அத்தகைய அன்னை மணியம்மையார் அவர்கள் –
1976 ஆம் ஆண்டு பொன்விழா மலரில் வெற்றி யெனும் வீரக் கொள்கைகள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்
அம்மா மணியம்மையார் எத்தகைய எழுத்தாற்றல் மிக்கவர் என்பதை அந்த கட்டுரை சொல்கிறது -ஓரிடத்தில் அம்மா இப்படி சொல்கிறார்
பல்லாயிரம் ஆண்டுகளாக அதிகாரத்தை முழுக்க முழுக்க அனுபவித்து வந்த கூட்டத்தின் ஆதிக்கவேரை வெட்டுகின்ற கொள்கையாக நமது கொள்கைகள் இருப்பதால் நம்மை ஒழித்துக்கட்ட பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள் – எத்தனையோ சோதனைகளை கடந்துவந்த நாம் இந்த சோதனையையும் கடந்து வருவோம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று கட்சி தொண்டர்களுக்கு உற்சாகமூட்டுகிறார்.
மேலும் என்றைக்கு தந்தை பெரியாரின் தொண்டர்களாக நம்மை நாம் ஒப்படைத்துக்கொண்டோமோ, என்றைக்கு இந்த இயக்கத்தின் ஒரு உறுப்பாக நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டோமோ அன்றைக்கே நாம் தெரிந்து தான் வைத்திருக்கிறோம் – அனல் ஆற்றிலே எதிர் நீச்சல் போடும் பணிதான் இந்த பணி என்று. இதை படிக்கும் போதே அம்மா எத்தகைய நெஞ்சம் படைத்தவர், அஞ்சாத நெஞ்சத்துக்கு சொந்தக்காரர், எதற்கும் அஞ்சாத போர்க்குணம் மிக்கவர் என்பது புலனாகிறது. அத்தகைய ஆற்றல் இருந்த காரணத்தால் தானே அய்யா பெரியார் இறந்த அடுத்த ஆண்டே 1974 ஆம் ஆண்டு இராவண லீலா நடத்தி இந்தியாவை திரும்பி பார்க்க செய்தார் – உலக நாத்திக இயக்கத்தின் முதல் பெண் தலைவர் அன்னை மணியம்மையார்.
மேலும் சொல்கிறார் – தந்தை பெரியாரின் விருப்பப்படி கட்டி முடிக்கப்பட்ட தந்தை பெரியார் ஏழடுக்கு பில்டிங்கை கட்டி அய்யவின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று திறக்க முடிவு செய்து இருப்பதை பற்றி அம்மா எழுதியிருப்பதை படித்தால் கண்கள் குளமாகிறது – அய்யா வின் மீது கொண்டிருந்த மாறா பற்றும்,அன்பும் காதலையும் பற்றி எழுதுகிறார்
” என் அருமைத் துணைவர் என்னைத் தணிமையில் இருக்க விடாமல் இருக்க தாய் தந்தையற்ற நூற்றுக்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளை எனக்கு துணையாக வைத்துவிட்டு ,அவர்களை ஆளக்கும் பொறுப்பினை என் மீது சுமத்திவிட்டு – எனக்குப்பின் உன் வேலைகளை செய்ய இவர்களை விட்டு இருக்கிறேன் . யாரும் இல்லையே என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் ,எதையும் நினைக்காமல் இவர்களை பராமரித்து என் ஆசையை – என் எண்ணத்தை – கொள்கையை நிறைவேற்று என்று சொல்லாமல் சொல்லி , அந்த அனாதை குழந்தைகளோடு ஒன்றாக என்னையும் ஓர் அனாதையாக ஆனால் வளர்க்கும் செவிலித்தாயாக விட்டு விட்டு போய்விட்டார் என்று எண்ணுகிறேன் – அதற்கு மேல் படிக்க முடியால் அம்மாவின் தொண்டறப்பணி குறித்து சிலிர்த்துபோகிறேன்.
அய்யாவின் பிரிவு அம்மாவை எப்படி பாதித்துள்ளது
ஆயினும் கொண்ட கொள்கையை காப்பாற்ற அய்யாவின் இலட்சிய முழக்கத்தை வலுவுடன் எழுப்ப அம்மா மணியம்மையார் எவ்வாறு தொண்டாற்றினார் என்பது புரிகிறது இறுதியாக அவர்களை வைத்தே அந்த கைவிடப்பட்ட ஆதரவற்ற அனாதை குழந்தைகளை வைத்தே அய்யாவின் பெயரில் அமைந்த ஏழெடுக்கு கட்டடத்தை திறக்கிறார். திக்கற்று, ஆதரவற்று கிடந்த இந்த நாட்டை தாயாகவும் தந்தையாகவும் வளர்த்தவர் தந்தை பெரியார் – அவர்தம் பெயரில் அமைந்த கட்டடத்தை இந்த திக்கற்ற குழந்தைகளை வைத்து திறப்பதே சிறப்பு என்கிறார்- அதுவே புரட்சி என்கிறார் ஆம் உள்ளபடியே அது புரட்சி தான் ஆம் அது அம்மாவால் அன்னை மணியம்மையார் அவர்கள் அதை சாத்தியப்படுத்தியுள்ளார்கள் என்பதை அவர்கள் எழுத்தினூடாக அறிந்துகொள்ள முடிகிறது .
மலரின் அடுத்த சிறப்பாக …
அய்யா பெரியார் 1929 ஆண்டு மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் – பல இடங்களில் அங்கே உள்ள தமிழர்கள் மத்தியில் குறிப்பாக அடித்தட்டு, விளிம்பு நிலை தொழிலாளர் தோழர்கள் இடையே பேசியுள்ளார் அதன் காரணமாகவே அங்கே மலேயாவில் 1930 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்கள் சம ஊதியம் கேட்டு எழுச்சியுடன் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று உள்ளது – இதை மலேசிய நாட்டின் தொழிலாளர் இலாகா அதிகாரிகள் அளித்திருக்கும் அறிக்கை மெய்ப்பிக்கிறது.
அந்த அறிக்கை பெரியார் வருகையின் தாக்கம் தான் மலேய தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கர்த்தாவாக அமைந்தது என்று சொல்வதை பெரியாரின் மலேசிய வருகை ஏற்படுதிய எழுச்சி என்ற தலைப்பில் மலரில் இடம்பெற்று உள்ள செய்தி நமக்கு அரிய கவலைத் தருகிறது.
வர்க்க விடுதலை என்பது சுயமரியாதையே என்கிறார் பெரியார்.
இன்னும் பல செய்திகள் பெரியாரின் பிறந்த நாள் மலரில் கொட்டிக்கிடக்கிறது குறிப்பாக வ.உ.சி. அவர்கள் சென்னை நேப்பியர் பூங்காவில் பேசும் போது – முன்பு நான் இந்து பத்திரிகை அலுவலகத்திற்கு செல்லும் போது கஸ்தூரி ரங்க அய்யங்கார் என்னை வாடா சிதம்பரம் என்று அழைப்பார் ஆனால் நீதிக்கட்சி கொள்கை தமிழ் நாட்டில் கோலோச்சிய காலத்தில் பிறகு ஒரு நாள் போனேன் அதே கஸ்தூரி ரங்க அய்யங்கார் வாங்கோ சிதம்பரம் பிள்ளை என்றழைத்தார் என்று வ.உ.சி பேசிய செய்தி இடம்பெற்றுள்ளது இக்கால இளைஞர்களுக்கு புதிய செய்தியும் எவ்வாறு மேலாதிக்கத்தோடு பார்ப்பனர்கள் நடந்துகொண்டார்கள் என்று அறியக்கூடிய செய்தியாகவும் உள்ளது.
20.04 1930 ஆம் ஆண்டு, வெளிவந்த குடி அரசு இதழில் தமிழிசையில் சுயமரியாதை எனும் தலைப்பிலான செய்தி இன்றும் இசைத்துறையில் பார்ப்பனர் செய்யும் தில்லுமுல்லுகளை அன்றைக்கே படம் பிடித்துக் காட்டியுள்ளார் அய்யா பெரியார்- இப்படி எழுதுகிறார் ஒரு பார்ப்பனச்சிறுவன் பாடினாலும், வாசித்தாலும் சுற்றிலும் பார்ப்பனர்கள் சூழ்ந்துகொண்டு பலே, பலே பேஷ், பேஷ் என்று கைதட்டுவதும், நன்னா பாடுறானே தம்பி என்று சொல்வதும் அதே வேளையில் பார்ப்பனர் அல்லாதவர் எவ்வளவு திறமை மிக்கவராக இருந்தாலும் கூட சுதி இல்லை, கட்டை சரீரம் இல்லை, கணக்கு போதாது என்பார்கள் என்று அவர்தம் சூழ்ச்சியை படம் பிடித்துக் காட்டுகிறார், ஆம் தற்போதும் அப்படித்தான் டெம்போ இல்லை, சங்கதி இல்லை, ஹை டோன்ல சுதி மிஸ்ஸாகுது என்று சொல்கிறார்கள் இசை நிகழ்ச்சி போட்டியில் பார்ப்பன நடுவர்கள்.
இன்னும் பல செய்திகள் – பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், இசுலாமியர், கிறித்துவர், கல்வி கற்க பெரியார் 1927 ஆம் ஆண்டு திருநெல்வேலி யில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாக மேற்படி தாழ்த்தப்பட்ட, இசுலாமியர், கிறித்தவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு என்று பதிவு செய்கிறது தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் மலர் – படிக்க படிக்க இன்னும் பல செய்திகள் – பல்வேறு அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள அய்யாவின் ஒப்பற்ற பணியை சிறப்பான கட்டுரைகள் தேன் போல பரவிக் கிடக்கிறது அள்ளிப்பருக வாங்கி படியுங்கள் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் மலரை.