கிழக்கில் உதயமாகும் பகுத்தறிவும், சுயமரியாதையும்
நீண்ட ஆண்டு காலமாக சுட்டெரிக்கும் கிழக்குக் கடற்கரை தார் சாலையை தங்களது நடைப்பயணத்துக்காகவே மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள் 27.9.2024 அன்று கருஞ்சட்டை அணிந்து இருசக்கர வாகனத்தில் திராவிடர் கழக கொடிகளை பறக்கவிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் படத்தை சமூக நீதிப் பேரணியாக ஊர்வலம் வந்தபோது மீனவ மக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் இதுவரை காணாத காட்சிகளை கண்டது மட்டுமல்லாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்த மக்கள் இவர் யார்? இந்த ஊர்வலம் எதற்கு? இந்த சமூக நீதிப் பேரணி ஏன்? இந்த பேரணியை எப்படி நடத்தப் போகிறீர்கள்? என்று கேள்விகளை எங்கள் முன் அடுக்கி வைத்தார்கள். பகுத்தறிவு பகலவனின் நோக்கமும் அதுதானே – ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேட்க வைப்பது. இதையே சமூகநீதி பேரணியின் முதல் வெற்றியாக கருதிணோம்.
தந்தை பெரியார் –
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டும் இங்கு ஏன்?
பொழுது விடிவதற்குள் இங்குள்ள பெருவாரியான மக்கள் கடற்கரையின் கிழக்கு திசை நோக்கியும், மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மக்கள் – கிடைக்கும் வேலைக்கு தினக்கூலியாக தங்களின் வாழ்வாதாரத்திற்காக துன்பப்பட்டு வருகிறார்கள். ஆனால் எந்தவித உடல் உழைப்பும் இல்லாத ஒரு கூட்டம் சாமியாலும், ஜாதியாலும் அரசியல் அடக்கு முறையாலும் மக்களின் உழைப்பை, செல்வத்தை சுரண்டுகின்றனர். பிள்ளைகளின் படிப்பில் முக்கியம் காட்ட தவறிடும் பெற்றோர்கள் கூட வட்டிக்குப் பணம் வாங்கி ஆன்மீகப் பயணம் செல்வதற்கும், கோவில் பணிகளுக்கும், ஜாதியப் பெருமைக்காக அவசியமற்ற நிகழ்ச்சிக்கு ஆடம்பர கொண்டாட்டத்திற்கு முக்கியம் காட்டுகிறார்கள். எத்தனை பட்டப்படிப்பு படித்திருந்தாலும் தங்களது குலத்தொழிலை அவர்கள் கைவிடுவதில்லை. காலையில் அலுவலகத்திற்குச் சென்று மாலையில் நேரம் கிடைக்கும் வேளையில் கூட தங்களுக்கான குலத்தொழிலை செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் அவர்களின் அறியாமையே. அவர்கள் எதையும் அறிய விடாமல் வைத்திருக்கும் காவி சாமியார்கள் மட்டுமே
அவர்களுக்கு முதலில் அறிவையும் பண்பையும், அறிவியல் பண்பையும் மற்றும் அரசியல் பண்பையும் விளக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதற்காகவே “உன் சாஸ்திரத்தை விட, உன் சம்பிரதாயத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட, உன் அறிவு பெரிது அதை சிந்தி” என்ற தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளையும். “மனிதா..! நீ யாருக்கும் தலை வணங்காதே, நிமிர்ந்து நட, கை வீசிச் செல், உலகைக் காதலி, செல்வரை செருக்குள்ளவரை, மதவெறியை தள்ளி ஏறி, மனசாட்சியே உன் தெய்வம், உழைப்பை மதி, ஊருக்கு உதவு, உன் அறிவுக்கு எட்டாத கடவுளைப் பிதற்றாதே, சிந்தனை செய், செயலாற்று” என்ற அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆவது பிறந்தநாளையும் நினைவில் கொண்டு இருவரையும் போற்றி வணங்கி அவர்கள் காட்டிய சமூக நீதிப் பாதையில் பயணிக்க தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை கிழக்கு கடற்கரைச் சாலையில் சமூகநீதி பேரணியாக வலம் வர தயாரானோம்.
கடற்கரையோரம் கரும்படை பட்டாளமா?
ஆம், கடற்கரையோர கரும்படை பட்டாளம் தான், மக்களிடம் நாங்கள் சமூகநீதி பேரணியின் அவசியத்தை பகிர்ந்த போது பெரும் வரவேற்பு இருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் கரும்படை பட்டாளம் தயாராக தொடங்கியது. கரும்படை பட்டாளத்தை மணமேல்குடி திராவிடர் முன்னேற்றக் கழகம் தெற்கு ஒன்றியத்தின் செயலாளர் சீனியர் அவர்களும் வடக்கு ஒன்றியத்தின் செயலாளர் சக்தி.ராமசாமி அவர்களும் மற்றும் திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களும் சமூகநீதி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நடைப் பயணத்துக்காகவே பயன்பாட்டில் இருந்த சாலையில் கரும்படை பட்டாளம் இருசக்கர வாகனத்தில் திராவிடர் கழக் கொடிகளை பறக்கவிட்டு சமூக நீதிப் பேரணியாக வலம் வந்த போது கருப்பும் சிவப்புமாய் காட்சியளித்தது. சமூகநீதி பேரணிக்கு வழி எங்கும் பெரும் வரவேற்பு இருந்தது. கோட்டைப்பட்டினம் வந்தபோது தி.மு.க.வைச் சேர்ந்த ஜிம்மு சரிப் அப்துல்லா அவர்கள் திராவிடர் கழகத் தோழர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
ஜெகதாபட்டினத்திற்கு சமூகநீதி பேரணி வந்தபோது அங்குள்ள மீனவ மக்களுக்கு இருந்த ஒரு குழப்பமும் தீர்ந்திருக்கும். இதே போல தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு கடந்த ஆண்டு 14.04.2023 நடத்தினார்கள் அதன் பின் இப்பகுதியில் அவர்கள் எங்கே போனார்கள் என்று. ஆனால் நாங்கள் கரும்படைகளாக அவ் வழியாக வந்தபோது அப்பகுதி மக்களுக்கு புரிந்திருக்கும் நாங்கள் சொல்லல்ல செயலென்று. மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திராவிடர் கழகக் கொடி ஏற்றி தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி “நாம் நடத்திய தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு கூட வெறும் சொல்லாக நின்று விடாமல் செயலாக சமூக நீதிப் பேரணியாக இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று பேரணி தோழர்களை மேலும் உற்சாகப்படுத்தினார். ஆவுடையார் கோவில் ஒன்றியம் மீமிசல் எல்லைக்குள் பேரணி நுழையும் முன் குமரப்பன்வயல் கிராமத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் திராவிடர் கழகத் தோழர்களுக்கு பயனாடை அணிவித்து மேலும் ஊக்கமளித்து பெரும் வரவேற்பு கொடுத்தார்.மீமிசலில் விசிக, மமக, தமுமுக, இஸ்லாமிய அமைப்புகள் பேரணியை வரவேற்றனர்.
சமூகநீதி பேரணியை திராவிடர் மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் நிறைவு செய்து வைத்தார்.
மக்களோடு நின்ற தோழர்கள்:
பொதுக்கூட்டத்தின் முன்னிலையாக அறந்தாங்கி கழக மாவட்டம் தலைவர் க.மாரிமுத்து, க.முத்து, நாகை நாத்திக பொன்முடி, அ.வேலுச்சாமி, வழக்குரைஞர் குமார், அ.நாகூரான், ம.கு.வைகறை, கை.வீரையா, பா.மாகாராசா, த.சவுந்தரராசன் மற்றும் இளைஞரணி தோழர்கள் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் சோம.நீலகண்டன் அவர்களின் மூடநம்பிக்கை ஒழிப்பின் சிறப்பு நிகழ்ச்சி மந்திரமா தந்திரமா என்ற தலைப்பில் தொடங்கியது அனைவரும் சிந்திக்கும் படி தந்திரமே மந்திரத்திற்கு மூலக் காரணம் என நிரூபித்தார். அறந்தாங்கி கழக மாவட்டம் செயலாளர் ஜெகதை ச.குமார் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி வரவேற்புரை அ.பாண்டி மற்றும் தொடக்கவுரை ஆ.யோவான். ரீகன் ஒன்றிய இளைஞரணி. தரன் மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி சிவபாலன் மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி கணேசன், கரம்பக்குடி ஒன்றிய தலைவர் கார்த்தி, ஆவுடையார் கோவில் ஒன்றிய தலைவர் அவர்களும் வழங்கினர்.
அருணகிரி தஞ்சை மாவட்ட செயலாளர், அழகிரி பகுத்தறிவு கழகம் உத்திராபதி, சிற்பி சேகர், நீலகண்டன் பொதுக்குழு உறுப்பினர், வெற்றி குமார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அவர்களை தொடர்ந்து தோழமைக் கட்சி தோழர்களான விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் கண்ணன், சிபிஅய்(எம்) மணமேல்குடி ஒன்றியக் குழு உறுப்பினர் கரு.ராமநாதன், மனிதநேய மக்கள் கட்சி புதுக்கோட்டை மாவட்டம் (கிழக்கு) செயலாளர் சேக் தாவுத் மற்றும் தமிழ் புலிகள் கட்சி அறந்தாங்கி சட்ட மன்ற செயலாளர் பா.பொன்ராஜ் அவர்களும் உரையாற்றினர். திராவிடர் கழகம் கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் மூடநம்பிக்கை ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமை பாதுகாப்பை தந்தை பெரியாரின் சிந்தனையோடும், அறிஞர் அண்ணா ஆற்றிய செயல்களோடும் இணைந்து உரையாற்றினார்.