27.05.1934 – குடிஅரசிலிருந்து
வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. (அசோசியேட்டட் பிரஸ்) செய்தி கூறுகின்றது.
இது எவ்வளவு பரிதாபகரமான விஷ யம்? மத நம்பிக்கை யினால் எவ்வளவு கொடுமைகளும், கேடுகளும் விளை கின்றன என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சியம் வேண்டும்.
இந் நிகழ்ச்சிக்கு மத நம்பிக்கை காரணமல்ல. காதலே காரணம், கற்பே காரணம் என்று சிலர் தத்துவார்த்தம் சொல்லி மதத்தைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை ஒன்று கேட்கின்றோம்.
காதல் என்றும் கற்பு என்றும் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப்போமானாலும் இன்று உலகில் புருஷனைச் சாகக் கொடுத்துவிட்டு விதவையாகவோ அல்லது வேறு ஒருவரை மணந்தோ, இரகசியமாகவோ, இயற்கையை அனுபவித்துக் கொண்டி ருக்கும் பெண்கள் எல்லோரும் அவர வர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல் கற்பு இல்லாமல் இருந்தவர்களா என்று கேட்கின்றோம்.
மற்றும் இன்று புருஷன் இறந்த உடனே இறக்கப் போகும் தறுவாயிலோ மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு சாவ தற்குத் தயாராயில்லாத பெண்கள் எல்லோரும் காதலும் கற்பும் அற்றவர்களா? என்று கேட்கின்றோம்.
ஆகவே மதத்தின் பெயரால் கல்வி அறிவற்ற ஆண்களும் பெண்களும் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகின் றார்கள் என்பதை அறிந்தும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது அறியா மையா, மூர்க்கத்தனமா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா என்பது நமக்கு விளங்கவில்லை.